மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 மே 2019

மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன?

சேது ராமலிங்கம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் சிபிஐ இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி 40 இடங்களில் டொபாசிட் இழந்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கட்சி சுய பரிசீலனை செய்யும் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள் உண்மையாகப் பரிசீலிப்பார்களோ, இல்லையோ என்பது நமக்கு தெரியாது. ஆனால், அந்தக் கட்சியின் படுதோல்விக்கான காரணங்களை நாம் ஆராய்வோம்.

சுருங்கிவரும் கட்சி

இந்தியாவிலேயே ஒப்பீட்டளவில் பெரிய இடதுசாரிக் கட்சியாகவும் ஓரளவுக்கு வசதிகளை, குறிப்பாகக் கட்டமைப்பு வசதிகளையும் அறிவாளிகளையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சிபிஐயிலிருந்த அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடுகளில் வேறுபட்டு 1964இல் பிரிந்த சிபிஎம் இதுவரை இப்படிப்பட்ட படுதோல்வியைச் சந்தித்ததில்லை. 1977லிருந்து 2011 வரை ஏறத்தாழ 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த சிபிஎம் தற்போது நடந்த தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.

2011இல் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணமூல் காங்கிரசிடம் தோற்றதிலிருந்து கட்சியின் வாக்காளர் எண்ணிக்கையும் வெகு வேகமாகச் சரியத் தொடங்கிவிட்டது. 2011இல் 30.1 விழுக்காடாக இருந்த சிபிஎம் வாக்குகள் 2016இல் 19.75 விழுக்காடாகக் குறைந்தது. அதற்கு முன்னதாக 2009இல் 33.3 விழுக்காடாக இருந்த வாக்குகள் 2014இல் 21.0 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. அப்போது இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றது.

மக்களிடமிருந்து ஏன் அந்நியப்பட்டது?

தற்போது வாக்குகளின் எண்ணிக்கை 6.28 விழுக்காடாகக் குறைந்து எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமைதான் கேரளத்திலும். அங்கு ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 140 தொகுதிகளில் 91இல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது என்பது வேறு விஷயம். ஆனால், அதற்குள் கட்சியின் வாக்கு குறைந்துவிட்டது. தமிழகத்தில் கூட்டணி தயவால்தான் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எத்தனையோ தியாகங்கள், உண்மையான அர்ப்பணிப்பு, நேர்மை, எளிமை, முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் பந்தா இல்லாமல் எளிமையாக அணுக முடியும் தன்மை, மக்களிடம் உண்மையாக இருப்பது என்பது போன்ற சிறந்த பண்புகள் இருந்தும் இக்கட்சியால் ஏன் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை? ஏன் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனது? கட்சி ஆரம்பித்துச் சில ஆண்டுகள், மாதங்கள் ஆன மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகளைக்கூடப் பெற முடியவில்லையே, ஏன்? 64இல் கட்சி ஆரம்பித்த இவர்களால் இன்னும் ஓர் அரசியல் சக்தியாக மாற முடியவில்லையே, அது ஏன்?

தவறான திட்டம்

அதற்குக் காரணம் சிபிஎம்மின் அரசியல் கொள்கை, அமைப்பு ரீதியான செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகள், தவறுகள், திருத்தல்வாதம், அரசியல் கூட்டணி குறித்த தவறான முடிவுகள், பிரதான எதிரியைக் கணிப்பதில் கடுமையான தவறிழைத்தல் போன்றவை.

அதன் அரசியல் நிலைப்பாடுகள் அடிப்படையிலேயே தவறாக உள்ளன. இந்திய அரசின் வர்க்கத் தன்மையை வரையறுப்பதிலேயே குளறுபடிகள் தொடங்குகின்றன. இந்திய அரசை அரை நிலப்பிரத்துவச் சார்பு முதலாளிகளின் அரசாக இக்கட்சி வரையறுக்கிறது. இந்தியாவில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே உள்ளது. இன்னும் சில கிராமங்களில் பின்தங்கிய நிலவுடைமை உற்பத்தியே நடக்கிறது. ஆனால், அவர்கள் அரசியல் அதிகாரத்தில் நிலப்பிரபுக்கள் இல்லை. உற்பத்தியிலும் உற்பத்தி உறவிலும் நிலப்பிரபுத்துவம் உள்ளதை அரசியல் அதிகாரத்தில் உள்ளதாகக் கட்சி தவறாக வரையறுக்கிறது. அது எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக எந்த ஆய்வும் இல்லை. அரசியல் அதிகாரத்தில் இல்லாத (உற்பத்தியில் மட்டுமே உள்ள) நிலப்பிரபுகளை எதிர்த்து ஜனநாயகப் புரட்சி நடத்தப்போவதாக சிபிஎம் திட்டம் வைத்துள்ளது.

மார்க்சியத்தின் அடிப்படையான இயங்கியல் ஒரு பொருளின் (மனிதர்கள் சமூகம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும்) உள்ளடக்கமானது மற்றொரு பொருளிலிருந்து அடிப்படையிலேயே பண்புரீதியாக வேறுபடுகிறது என்று கூறுகிறது. இந்த அடிப்படைப் புரிதலின்றி வெவ்வேறு அரசியல், வரலாறு, கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்ட எதிர் எதிரான கட்சிகளைச் சமப்படுத்திப் பார்ப்பதும் எதிர்ப்பதும் கடுமையான தவறுகளாகும். இது, எதிர்க்க வேண்டிய பிரதான எதிரிக்கு மறைமுக ஆதரவளிப்பதாக முடியும். முன்னதாக மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் திமுகவையும் அதிமுகவையும் சமப்படுத்தி ஒரு சேர எதிர்த்தது. அதனால், படுதோல்வியைச் சந்தித்தது. அதிமுக வெற்றிபெற்றது. தற்போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் திருணமூலுடன் இணைந்து கூட்டணி அமைத்து பாஜகவைத் தனிமைப்படுத்தி அதை எதிர்ப்பதற்குப் பதிலாக திருணமூலையும் பாஜகவையும் சமப்படுத்தி எதிர்த்தது. திருணமூலையும் பாஜகவையும் வெளியேற்றுவோம் என்று முழக்கம் வைத்து தேர்தலில் போட்டியிட்டது. அதன் விளைவாகப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாஜகவுக்குக் கூடுதலாக வெற்றி கிடைத்துள்ளது.

நாளுக்கு நாள் தேய்ந்த கட்சியின் வளர்ச்சி

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னதாக சீனிவாச ராவ், இஎம்எஸ் போன்ற தலைவர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்தும் சொத்துடமை வர்க்கத்திலிருந்தும் கட்சிக்கு வந்தார்கள். ஆனால், தங்களது வர்க்கத்தை உழைக்கும் வர்க்கமாக இறக்கிக்கொண்டு சாதி மதங்களைக் கடந்து கிராமப்புறங்களில் தங்கி மக்களோடு மக்களாக அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார்கள். கட்சியைக் கட்டினார்கள். அநீதியை எதிர்த்து உயிரைத் துச்சமென மதித்துப் போராடினார்கள். பலர் தியாகியானார்கள். இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன.

தற்போது தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களில் ஒரு விழுக்காடு கிராமங்களில்கூட மார்க்சிஸ்ட்டுகள் இல்லை. அவர்கள் அமைப்புரீதியாக இல்லை. மார்க்சிஸ்ட்டுகள் கிராமங்களுக்குச் சென்று பணிபுரிவதைச் சென்ற தலைமுறைக்கு உரியதாக்கிவிட்டனர். ஆனால் பெயரளவில் விவசாய அமைப்பு உண்டு. இத்தனைக்கும் தமிழ் மாநிலக் குழு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் என்று பழைய தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். அது யாருக்கு என்றுதான் புரியவில்லை.

ஆக, கட்சியானது நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கக் கட்சியாகச் சுருங்கி விட்டது என்பதுதான் யதார்த்தம். ஆனால், அவர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கிராமங்களுக்குச் செல்லாமல் வங்கிகள், இன்ஷ்யூரன்ஸ், அரசுத் துறைகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட நகரங்களிலுள்ள துறை சார்ந்தவர்களிடம் லெவி வாங்கி கட்சி நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முழுமையான நடுத்தர வர்க்கக் கட்சியாக மாற்றிவிட்ட பின்னர் கட்சி எப்படி வளரும்?

சிபிஎம்மில் உறுப்பினராகக் கட்சி ஆதரவு நிலை, தேர்வு நிலை என இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் மூன்றாம் ஆண்டே கட்சியின் உறுப்பினராக முடியும். ஏதோ கட்சியின் சேர வரிசையில் நிற்பது மாதிரி அப்படி ஒரு கற்பனை உலகில் மிதக்கின்றனர். புரட்சியைக் கைவிட்டுக் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுவது என்றாகிவிட்ட பின்னர் காலத்திற்கேற்பக் கட்சி விதிகளை மாற்றாமல் மேல் மட்டத்திலிருக்கும் தலைமை அதிகாரவர்க்க முறையைப் பின்பற்றுகிறது.

இதற்கெல்லாம் அவர்கள் நடத்தும் பத்திரிகைகளின் நிலையே சாட்சி. கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகிய அனைவரையும் சேர்த்துத் தோராயமாக 6 லட்சம் பேர் வரை உள்ளனர். ஆனால், தீக்கதிர் 40,000தான் விற்பனை ஆகிறது. அவர்களும் சந்தாதாரர்களே. கடை விற்பனை கிடையாது. இதிலிருந்து கட்சிக்காரர்களே தீக்கதிர் படிப்பது கிடையாது என்பது தெரியவருகிறது. அதுவும் பெண்கள் படிப்பதில்லை (ஆதாரம்: பீளின அறிக்கை; அதில் 25,000 பிரதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது).

பாசிசம் என்று வரையறுக்கத் தயக்கம்

மக்களின் உணர்வுகளையோ, பரந்துபட்ட நலன்களையோ புரிந்துகொள்ளாமல் அதிகாரவர்க்கமாகவே கட்சி செயல்படுகிறது. மக்கள் விரோதத் திட்டங்களை, குறிப்பாக ஆளும் வர்க்கங்களின் செல்லத்திட்டங்களான சேது சமுத்திரத் திட்டம், அனல்மின் நிலையத் திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற அழிவுபூர்வத் திட்டங்களை, விடாப்பிடியாக ஆதரிப்பதன் நோக்கம் என்ன? பாசிச பாஜக ஒழிக என்ற முழக்கம் மக்கள் மத்தியில் பரவலாகிவிட்டது. ஆனாலும் சிபிஎம் இன்னமும் பாஜகவை பாசிச கட்சி என்று வரையறுக்கத் தயங்குகிறது. மதவாத சக்திகள் என்று பாசிஸ்ட்டுகளைக் குறைத்து மதிப்பிடுவது அதன் படுதோல்விக்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம். இப்போதும் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான திட்டவட்டமான செயல்பாடுகள் இல்லை எனில் கட்சியின் ஊழியர்கள் அவர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

மா - லெ குழுக்களின் நிலை

கட்சியின் அரசியல் கொள்கையிலுள்ள சந்தர்ப்பவாதத்தினால் கட்சி அமைப்பு சீர்திருத்த முடியாதபடி மோசமடைந்துவிட்டது. அது திருத்த முடியாத, கெட்டி தட்டிப்போய் இறுகிய அதிகாரவர்க்கக் கட்சியாகவும் சில சமயங்களில் ஆளும் வர்க்க நிலைப்பாட்டை எடுக்கும் கட்சியாகவும் சீரழிந்து நிற்கிறது.

மார்க்சிஸ்ட்டுகள் மேலுள்ள விமர்சனங்களை வைத்து மார்க்சிய லெனினியக் குழுக்கள் புனிதமானவை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் அர்ப்பணிப்பு ஒன்றைத் தவிர வேறு எதுவும் கிடையாது. சில தனிநபர்களாகவும் குழுக்களாகவும் அவர்கள் உள்ளனர். மக்கள் மத்தியில் ஐக்கியப்பட முடியாமல், வெற்று முழக்கங்களையும் சடங்குத்தனமான பிரகடனங்களையும் வெளியிடுபவர்களாகவே உள்ளனர்.

தற்போது தனிப் பெரும்பான்மைக்கும் மேலாகத் தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள பாஜக, இந்த வெற்றியைத் தங்களின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறது, இதனால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பல்வேறு சோதனைகளை மக்களும் எதிர்க்கட்சிகளும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து இடதுசாரிக் கட்சிகளிலும் உள்ள நேர்மையான சக்திகள் வெளியேறி வலிமையான பாசிச எதிர்ப்புக் கூட்டணியையோ, அமைப்பையோ உருவாக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

நம்பிக்கைதான் வாழ்க்கை.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!

.

.

தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!

.

திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?

.

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்

.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: ஸ்டாலின் பதில்!

.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

புதன் 29 மே 2019