மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

திரை தரிசனம்: நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

திரை தரிசனம்:  நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

மாட்டை தியாகம் செய்ய மறுக்கும் ஒரு முஸ்லிம் விவசாயியின் கதை!

முகேஷ் சுப்ரமணியம்

நாம் உருவாக்கிய சடங்குகள் மற்றும் நியமங்கள் நிரம்பிய நம் கலாச்சாரத்தின் இறுக்கத்தில் தியாகம், புனிதம் போன்ற தூய்மைவாத அரசியல் கட்டமைப்புகளினால் ஒரு வாயற்ற ஜீவன் துன்பத்திற்குள்ளாகும்போது மனிதனாக நம் நிலைப்பாடென்ன?

சீனாவின் வடமேற்குப் பகுதியான நின்ஷியா மாகாணம், மலைகள் சூழ்ந்த ஓர் உலர்ந்த, பாலைவனப் பிரதேசம். மின்சாரம், போக்குவரத்து இல்லாத அப்பகுதியின் ஒரு பழைய கிராமத்தில் மா ஜிஷான் என்ற ஏழை முஸ்லிம் விவசாயி வாழ்ந்து வருகிறார். இறந்து போன அவரது மனைவியின் துக்கத்தில் ஜிஷானும் அவரது ஒரே மகனும் இருக்கின்றனர். கிராமத்தில் எல்லோருக்கும் பிரியமான தன் அம்மாவின் 40ஆவது நாள் துக்க அனுசரிப்புக்கு வரும் விருந்தினர்களுக்கு உணவாக குடும்பத்தில் இருக்கும் ஒரே உடமையான தங்கள் காளையை பலியிட மகன் முடிவு செய்கிறான். அது தான் அம்மாவிற்கான கெளரவமாக இருக்கும் என மகன் நினைக்கிறான்.

சன்னி இசுலாமியர்களான ஹுய் மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் 40ஆவது நாள் சடங்கிற்கு வேறு பணம் இல்லாததால், ஜிஷானால் மறுக்க முடியவில்லை. மனைவியின் இறப்பிலிருந்தே இன்னும் மீளாத ஜிஷான், அடுத்ததாக தன் காளையை இழக்கவும் தயாராக வேண்டும். ஆனால், அவரது மனம் அதற்கு இடமளிக்கவில்லை. ஜிஷானைப் போலவே அவரது காளையும் வயதாகி, களைப்படைந்தேயிருக்கிறது. பாரம்பரியத்திற்கும் தன் பிரியமான காளைக்கும் (கருணைக்கும்) இடையில் ஜிஷானின் அறம் சிக்கித் தவிக்கிறது. 40ஆவது நாள் நெருங்கிக் கொண்டிருக்க, திடீரென ஒரு நாள், அந்தக் காளை மாடு உணவு மற்றும் நீர் அருந்த மறுக்கிறது. ஜிஷான் மேலும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகிறார். அக்கிராம நம்பிக்கையின்படி, பலியிடுவதற்கு முன் மரணத்தை முன்கூட்டியே அறியும் உயிரான காளையின் கண்களுக்கு நீருக்குள் கத்தி தெரியும் என நம்பப்படுகிறது. ஒருவேளை ஜிஷானின் காளை மாடு தெளிவான நீரில் அந்தக் கத்தியைப் பார்த்திருக்கலாம்.

ஒரு தியானம் போல அமைதியான திரைமொழியினால் உருவாக்கப்பட்ட நைஃப் இன் தி கிளியர் வாட்டர்(Knife in the clear water) என்ற மாண்டரின் சீன மொழித் திரைப்படம் 2016 ஆண்டு வெளியானது. இயக்கியவர் : வாங்க் சூபோ.

ஒரு நிலத்திற்கும் அதன் மக்களுக்குமான உறவை, அவர்களின் நம்பிக்கையின் வழியாக கூறும் இந்தப் படம் 4:3 என்ற சதுர வடிவத்தில் படமாக்கப்பட்டது. பெரும்பான்மையான காட்சிகளில் கேமரா நகராமல் கதாபாத்திரங்கள் மட்டும் அசையும்போது நாமும் அந்த நிலப்பரப்பின் ஓர் அங்கமாக மாறி அவர்களைக் கவனிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. நகரத்திலிருந்து வரும் மகன், தன் தந்தையிடம் ‘அக்காளையைப் போலவே தான் தன் அம்மாவும் வாழ்நாள் முழுக்க நம் குடும்பத்திற்காக உழைத்தாள். அதனால் அக்காளையை பலி கொடுப்பது தான் சரியாகயிருக்கும்’ எனக் கூறுமிடம் முக்கியமானது. ஜிஷானின் மீது பனி விழுந்து கொண்டிருக்க, தொலைவில் காளை மட்டும் நடந்து கொண்டிருக்கும் காட்சி ஏற்படுத்தும் உணர்வு தீண்டல்கள் அபூர்வமானவை. ஓவியர்கள் ஆந்திரே வைத், ஃபரான்கோயிஸ் மில்லட் ஆகியோரின் ஓவியங்களினால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் அதனை காட்சி வடிவமாக ஒளியூட்டி அசையும் ஓவியத்தை தரிசிப்பதைப் போல பார்வையாளனை மாற்றிவிடுகிறார்.

மடிப்புகள் அதிகம் கொண்ட நிலப்பரப்பும், ஜிஷானின் சுருக்கம் விழுந்த முகமும் ஒரே போல காட்சியளிக்கிறது. சீனாவின் வடமேற்கு மாகாணத்திலுள்ள ஹூய் என்ற முஸ்லிம் இன மக்கள் உலகின் மிக முக்கியமான சிறுபான்மையினராகக் கருதப்படுகின்றனர். சீன அரசின் கைவிடப்பட்ட நிலப்பரப்பையும், வெளிநாட்டவர் என புறம் தள்ளப்பட்ட ஹூய் முஸ்லிம் மக்களின் வெளிவராத வாழ்வியலையும் சினிமா என்ற அற்புதமான காட்சி மொழிக்குள் சாத்தியமாக்கிய இந்தப் படம் உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான விருதுகளையும் பெற்றது.

.

.

மேலும் படிக்க

.

.

ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?

.

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

.

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

.

.

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

.

.

திங்கள், 27 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon