மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் அலை ஓய்ந்த கையோடு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், லக்ஷ்மணன், திமுக எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, 6 இடங்களுக்கும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களோடு சேர்த்து 123 பேரின் ஆதரவு உள்ளது. எனவே அக்கட்சியால் 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். நடந்து முடிந்த இடைத் தேர்தலில் 13 இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து திமுகவின் பலம் சட்டமன்றத்தில் அதிகரித்துள்ளது. மேலும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு திமுக சார்பாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். ஆகவே திமுக, அதிமுக சார்பில் தலா 3 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் என்ற பேச்சு இப்போதே அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கத் துவங்கிவிட்டது.

அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி உடன்படிக்கையின்போதே பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணியின் தோல்வியை காரணம் காட்டி பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டாலும் கூட, அமித் ஷாவிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அதிமுகவிடம் எம்.பி பதவியை பெற திட்டமிட்டுள்ளார் அன்புமணி. எனவே பாமகவுக்கு ஒரு இடம் உறுதியாகியுள்ளது.

மற்ற இரண்டு இடங்களில் ஒன்றை பாஜக கேட்டுப்பெறும் என்கிறார்கள். தமிழகத்தில் சார்பின் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியைத் தழுவியதையடுத்து, மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் சார்பாக ஒருவரை மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்க பாஜக விரும்புவதால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்கும் எனத் தெரிகிறது. ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் நிபந்தனை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படவாய்ப்புள்ளது.

கடைசியாக உள்ள ஒரு இடத்திற்கு அதிமுகவினர் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. அதிமுக-பாமக கூட்டணி உருவாவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக கூறி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கேட்டு வருகிறார். ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் போதும், மக்களவைத் தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதிக்கும் சீட் கேட்டு மறுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது தாருங்கள் என்று கேட்டுவருகிறார்.

இதுபோலவே அதிமுக சார்பாக தேசிய அரசியலில் முக்கிய பங்குவகித்து வருபவரும், சீனியர் தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரையும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காய் நகர்த்திவருகிறார். ரவீந்திரநாத் எம்.பி.யாகியுள்ளதால் தேசிய அரசியலில் பன்னீர்செல்வம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிடுவார் என்று கருதும் எடப்பாடி தனக்கு நம்பிக்கையான ஒருவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதுபோலவே சமீப காலமாக எடப்பாடியுடன் நெருங்கி வருகிறார் தம்பிதுரை. தேர்தலுக்கு முன்பும் பின்பும் எடப்பாடி டெல்லி செல்லும்போதெல்லாம் அவருடன் தம்பிதுரையை பார்க்க முடிகிறது. இதனால் அந்த ஒரு உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரையை எடப்பாடி பழனிசாமி பரிசீலிக்கலாம் என்று அதிமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

மேலும் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகை செல்வனும் இந்த ரேசில் உள்ளார். ஜெயலலிதா இருந்தபோதே அமைச்சராக இருந்து அவரது நன்மதிப்பை பெற்றிருந்த வைகைச் செல்வன், தற்போது எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார். மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் முழுக்க எடப்பாடியின் பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்ததும் வைகைச் செல்வன்தான். எனவே இவர்கள் மூவரில் ஒருவருக்கு டெல்லிக்கு போகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க பாமகவுக்கு 1, பாஜகவுக்கு 1 போக மீதமுள்ள ஒரு இடம்தான் அதிமுகவுக்கா என்றும் ஒரு பக்கம் குமுறுகிறார்கள்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!

.

.

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

.

விஜயகாந்த், கமல், சீமான்: மாற்று அரசியல் மாய்மாலங்கள்!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon