மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 மே 2019

இது மோடி கண் சிமிட்டும் நேரம்!

இது மோடி கண் சிமிட்டும் நேரம்!

தேவிபாரதி

சென்ற ஆண்டு நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடர் ஒன்றில் ஆளும் பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையை முடித்துக்கொண்டு நேரே பிரதமரின் இருக்கைக்குச் சென்றார், அவரைக் கட்டித் தழுவினார். திகைத்துப் போன பிரதமர் ராகுலின் கைகளைப் பற்றிக் குலுக்கினார், புன்னகைக்கவும் முயன்றார். அதுவரை முதிர்ச்சியற்றவராகவும் அரசியல் அனுபவமற்றவராகவும் கருதப்பட்டுவந்த நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தி என்ற அந்த இளைஞர் தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டது அப்போதுதான். பிரதமரின் கைகளைக் குலுக்கிவிட்டுத் தனது இருக்கைக்குத் திரும்பிய ராகுல் காந்தி தன்னை நெருக்கமாகப் படம்பிடித்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி காமிராவைப் பார்த்துக் கண்சிமிட்டியதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் பரவசமடைந்தார்கள்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்தக் காட்சித் துண்டு உடனடியாகக் கவனம் பெற்றது. பல லட்சம் பேரால் கண்டுகளிக்கப்பட்ட அந்தக் காணொளியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் வைரல்களாக மாறின. மக்களவையில் ராகுல் காந்தி அப்போது நிகழ்த்திய உரை மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும் சவால் எனவும் அரசியல் பார்வையாளர்களால் கருதப்பட்டது. ராகுலின் கண் சிமிட்டலுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிய கற்பனைகள் பெருகிக்கொண்டிருந்தன. அவை நடந்துகொண்டிருந்தபோதே ராகுல் அடுத்த சில மாதங்களில் எதிர்கொள்ளவிருந்த மக்களவைத் தேர்தலின் நாயகனாக உருவெடுத்தார்.

போர்க்கோலம் பூண்ட ராகுல்

அமைதியானவராகவும் மென்மையான அணுகுமுறை கொண்டவராகவும் கருதப்பட்ட ராகுல் அதற்குப் பிறகு போர்க்கோலம் கொணடார். மோடி-அமித் ஷா தலைமையிலான பாஜக அரசின் நான்காண்டு கால ஆட்சியின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பாஜக அரசின் செயல்பாடுகளை மக்கள் விரோதமானவை என வர்ணித்தார். பாஜகவுக்கும் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோருக்கும் ரகசியத் தொடர்பு இருப்பதாகப் பிரகடனம் செய்த ராகுல் ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தினார், தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தேடினார். கிடைத்தவற்றை ஊடகங்களுக்கும் வாக்காளர்களுக்கும் தெரிவித்தார். பிரதமர் மீதும் முறைகேட்டில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

முந்தைய நான்காண்டுகளாக மோடி அரசுக்கு எதிராகவும் சங் பரிவார அமைப்புகளின் இந்துத்துவ அடிப்படைவாதச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களின் மீது ராகுல் அக்கறை காட்டத் தொடங்கியபோதுதான் ராகுல் கண் சிமிட்டியதற்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை மோடியும் அமித் ஷாவும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களும் மற்றவர்களும் புரிந்துகொண்டார்கள். மற்றவர்கள் உடனடியாகச் செயலில் இறங்கினார்கள்.

இடதுசாரித் தலைவர்கள், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மயாவதி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் மக்களவைத் தேர்தலை ராகுலின் தலைமையில் சந்திப்பது பற்றிய ஆலோசனைகளில் முழு மூச்சாக இறங்கினார்கள். மோடி - ஷா கூட்டணிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

எதிர்க்கட்சியினரின் கண் சிமிட்டல்கள்

மோடி அரசை அப்புறப்படுத்துவது, தேர்தலுக்குப் பிறகு ராகுல் தலைமையில் புதிய அரசு அமைப்பது பற்றிய கற்பனைகளும் மோடி எதிர்ப்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டத் தொடங்கியிருந்தன. ஆனால் செயல்படுவதற்கான தருணம் வந்தபோது, எதிர்க்கட்சிகளுக்கிடையே பாஜகவுக்கு எதிரான பொதுவான கூட்டணி ஒன்றை உருவாக்குவது பற்றிய உரையாடல்கள் தொடங்கியபோது மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றவர்களிடமிருந்து வந்த கண்சிமிட்டல்கள் தேர்தலின் போக்கை அடியோடு மாற்றின. சென்ற வருடம் மக்களவையில் ராகுல் கண்சிமிட்டியது போல் அவை ரசிக்கத்தக்க விடலைத்தனத்தை அல்லது குழந்தைத்தனத்தைக் கொண்டிருக்கவில்லை. மூர்க்கமும் பேராசையும் சுயநல அரசியலும் அந்தக் கண்களின் ஒவ்வொரு சிமிட்டலிலிருந்தும் வெளிப்பட்டன.

ஆனால், எல்லோரும் ஒரே குரலில்தான் பேசினார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ரஃபேல் முறைகேடு, மோடியின் பாசிசம், அவரது பொய்கள், இந்துத்துவம், இஸ்லாமியர்கள், தலித்துகளுக்கெதிரான சங் பரிவார அமைப்புகளின் செயல்பாடுகள் சார்ந்த சொல்லாடல்கள் குறித்த விமர்சனம் ஆகியவை அனைத்து எதிர்க்கட்சிகளிடமிருந்தும் ஒலித்துக்கொண்டிருந்தன. மோடி எதிர்ப்பு என்பது மோடி - அமித் ஷா கூட்டணியின் அரசியல் சார்ந்ததாக இல்லாமல் தனிப்பட்ட பொறுப்புகள் சார்ந்ததாக உருவெடுத்தது. மூர்க்கமான சொல்லாடல்களால் மோடியின் மீதான வெறுப்பைக் கட்டமைப்பதை ஒரு அரசியல் செயல்பாடாக மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றன எதிர்க்கட்சிகள்.

எதிர்க்கட்சிகளின் ஆவேசம் அவர்களைச் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாற்றிக்கொண்டிருந்தது. தங்கள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு யாருக்கும் பொறுமை இருக்கவில்லை. மோடியை பாஸிஸ்ட் என எதிர்க்கட்சிகள் சொன்னபோது வரலாற்றின் கசப்பான நினைவுகளிலிருந்து விடுபட விரும்பாத யாராவது 1975இல் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை நினைவுகூர்ந்தால் நமது பாசிச எதிர்ப்பாளர்கள் அவர்களை மோடி ஆதரவாளர்களாக அடையாளப்படுத்தி வெறுப்பை உமிழ்ந்தார்கள். மோடியைப் பொய்யர் எனக் குற்றம் சாட்டியவர்கள் தமக்கெதிரான வரலாற்றின் கசப்பான உண்மைகளைப் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டுமென விரும்பினார்கள்.

மோடியின் கண் சிமிட்டல்

ஆனால் மோடி சுதாரித்துக்கொண்டார். என்ன செய்ய வேண்டுமென்பதை மோடியும் அமித் ஷாவும் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

மக்களவையில் ராகுல் குழந்தைத்தனமாக அல்லது விடலைத்தனமாகக் கண்சிமிட்டியதுபோல் அவர்களும் கண்களைச் சிமிட்டிக்கொண்டனர். அது பயங்கரமாக இருந்தது. புல்வாமாவில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல், இந்திய ராணுவத்தால் பால்கோட்டில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட நிகழ்வுகளை எதிர்க்கட்சிகள் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்து மோடி குரூரமான முறையில் கண்களைச் சிமிட்டினார். தேசப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முதலான தங்களது ஆகிவந்த சொல்லாடல்களை மோடியும் அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

தங்கள் மீது எதிர்க்கட்சிகள் காட்டிய வெறுப்பை தேசத்தின் மீதான வெறுப்பாகக் கட்டமைப்பதற்கு மோடியும் அமித் ஷாவும் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை.

தங்களை இந்துத்துவ பயங்கரவாதிகள் என ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோது இருவரும் பெரும்பான்மை இந்துக்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கண் சிமிட்டினார்கள். ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளைத் தங்கள் வலையில் சிக்க வைத்தார்கள். தன்னைச் சௌகிதார் என மோடி சொல்லிக்கொண்டபோது ராகுலும் மம்தாவும் திருடன் எனச் சொன்னதைக் கண்டு இருவருமே புன்னகைத்தார்கள். மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடிக்கெதிராக மம்தாவும் அவரது ஆதரவாளர்களும் திருடன் திருடன் என முழங்கியதைப் பார்த்து மோடி பதற்றமடையவே இல்லை. அப்போது அவர் கண்களை மூடிக்கொண்டு கேதார்நாத்தின் சொகுசான குகையொன்றில் போய் காவி உடையைப் போர்த்திக்கொண்டு தியானத்தில் மூழ்கிவிட்டார்.

வெற்றிக்கு அது போதுமானதாக இருந்தது.

எதிர்க்கட்சிகளால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது பாஜக. ரஃபேல் முறைகேடு பற்றிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை இப்போது கணக்கிலெடுத்துக்கொள்ளக்கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள். உச்ச நீதிமன்றம், வருமானவரித்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட நாட்டின் சுயேச்சையான அமைப்புகளைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இப்போது வெறுமனே கண்ணைச் சிமிட்டினால் போதும்.

அடுத்த ஐந்தாண்டுகள் எதிர்க்கட்சிகளுக்குச் சோதனைகள் நிறைந்தவை என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் இந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டும். தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு முன்பைவிட அதிகம் போராட வேண்டியிருக்கும், பல இழப்புக்களைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

அரசியல் வெற்றிகளுக்காக மூர்க்கமாக வளர்ந்திருக்கும் இந்துத்துவத்திற்கு முன்னால் மண்டியிடாமல் இருப்பது முக்கியம். வருங்காலங்களில் மக்கள் தம் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போராடும்போது கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கொண்டதைவிட மோசமான அடக்குமுறைகளைச் சந்தித்தாக வேண்டியிருக்கும். மோடி ஆதரவு அலையின் பிடியிலிருந்து மீட்டெடுத்துக்கொண்டிருக்கும் சிறிய இடங்களை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 26 மே 2019