மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

வயது வித்தியாசமும் செக்ஸ் வாழ்க்கையும்!

வயது வித்தியாசமும் செக்ஸ் வாழ்க்கையும்!

உதய் பாடகலிங்கம்

ஐம்பதை நெருங்கும் ஒரு ஆண், தன் மகளை விட சற்றே வயது அதிகமுள்ள ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டால் எப்படியிருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு, சமீபத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடித்த ‘தே தேட் பியார் தே’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வயது வித்தியாசத்துடன் திருமணம் செய்துகொண்ட நட்சத்திரத் தம்பதிகள் யார் என்று கேள்வி கேட்கப்பட, மைக்கேல் டக்ளஸ் – கேத்தரீன் ஸீட்டா ஜோன்ஸ், ஜார்ஜ் க்ளூனி – அமல், சையீஃப் அலிகான் – கரீனா என்று பிரபலம் வாய்ந்த நட்சத்திர தம்பதிகள் குறித்து பதிலளிப்பார் ஹீரோ.

பிரபலங்களைத் தவிர்த்துப் பார்த்தால், சமூகத்தில் இப்படிப்பட்ட வயது வித்தியாசமுள்ள ஜோடிகளுக்கு எப்படியொரு வரவேற்பு கிடைத்து வருகிறது? இந்த தம்பதியர் இடையே அன்னியோன்யம் எந்த அளவில் இருக்கும்? இந்த கேள்விகளுக்குப் பதில் தேடும் முன்னர், நம்மைச் சுற்றி இந்த வயது வித்தியாசமுள்ள ஜோடிகளின் நிலைமை என்னவாயிருக்கிறது என்பதை நோக்க வேண்டும்.

வயதான ஆண்-இளம்பெண் ஜோடி

வயதான ஆண் தன்னை விட வயதில் மிகக்குறைந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்வது என்பது நம் சமூகத்தில் பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. 35 வயதைத் தாண்டிய தாய்மாமனுக்கு வாழ்க்கைப்பட்ட எத்தனையோ இளம்பெண்கள் இந்த நிலத்தில் உண்டு. உறவு வழியில் திருமணம் செய்வதால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்ற சிந்தனை பெருகியபிறகே, இம்மாதிரியான ஜோடிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன. ஆனாலும், வயது வித்தியாசம் அதிகமுள்ள தம்பதியர் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர்.

படிப்பு, வேலை தேடல், நல்லபடியாக செட்டில் ஆன வாழ்க்கை என்றபிறகே திருமணம் என்றிருக்கும் ஆண்கள் கல்லூரிப் படிப்பை முடித்த இளம்பெண்ணைத் தேடுவதும், அவ்வாறான திருமணங்கள் நடைபெறுவதும் தொடர்ந்து வருகிறது. இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் கூட இந்த நிலைமை காணப்படுகிறது. அதே நேரத்தில், வயதான பெண் இளம் ஆணைத் திருமணம் செய்வதென்பது மிகக் குறைந்த அளவிலேயே உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகிறது.

வயது பேதம் அதிகமுள்ள தம்பதிகளின் வாழ்க்கை குறித்துப் பேசும்போது, அவர்களது செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக இருக்குமா என்ற எண்ணம் எழுவது இயல்பு. அதனாலேயே, நிறையே ஜோடிகள் இடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்லாமல், ஒரு பிரச்சினையை அணுகும் இருவரது மனப்பக்குவமும் வெவ்வேறாக இருக்கும் என்பது திண்ணம்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருக்கும் எமோரி பல்கலைக்கழகம், இந்த வயது வித்தியாசம் பற்றி சுமார் 3,000 பேரிடம் ஆய்வொன்றை நடத்தியது. அந்த ஆய்வில், அதிக வயது வித்தியாசம் காதலை உடைக்க நிறைய வாய்ப்புகளைப் பெற்றிருப்பதாகத் தெரியவந்தது. குறிப்பாக, 10 வயது வித்தியாசமுள்ள தம்பதிகள் விவாகரத்து செய்ய 39 சதவிகித வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசமுள்ள ஜோடிகள் பிரிந்துவிட 95 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வில் பங்குகொண்டோர் தெரிவித்திருந்தனர்.

செக்ஸில் அதிருப்தி

வயது அதிகமாகும்போது, செக்ஸுவல் குறைபாடுகளும் அதிகரிக்கும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. வயோதிகத்தின் காரணமாக ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைவு, சீரான உடலியக்கம் இல்லாதது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வயதான பெண்களைப் பொறுத்தவரை குறைவான செக்ஸ் ஆசை, உச்சகட்டம் அடைவதில் பிரச்சினை போன்றவை ஏற்படும். 20 வயதில் ஒரு ஆணுக்கு இருக்கும் செக்ஸ் விருப்பங்கள் 60 வயதில் இருக்காது. ஆனால், 18 வயதில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் செக்ஸ் ஆசை, 35 வயதில் அதிகரிக்கும்.

இயற்கை வகுத்த இந்த நியதிகளைப் புரிந்து செயல்பட்டால், வயது பேதம் இருந்தாலும் ஜோடிகள் இடையே பிரச்சினை உருவாகாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஜோடிகளில் ஒருவர் ராட்சத ராட்டினத்தில் ஏற ஆசைப்படும்போது, மற்றொருவர் அதனை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். மாறாக, முகத்தில் தென்றலறைவதைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது. இந்த அடிப்படைப் பிரச்சினைகள் தான், வயது பேதமுள்ள தம்பதிகளைக் கண்டு நகைப்பதற்கும் அவநம்பிக்கை கொள்வதற்கும் காரணமாக உள்ளது.

சமூகத்தின் எண்ணத்துக்கு மாறாக, அதிக வயது வித்தியாசமுள்ளவர்கள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதும் தொடர்ந்து வருகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளில் 30 வயது வித்தியாசத்தில் கூடத் திருமணம் செய்து கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் வயது பேதமுள்ள தம்பதிகள் 8 சதவிகிதம் அளவில் உள்ளனர். இதில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான அளவில், அதிக வயதுள்ள பெண்ணும் குறைந்த வயதுள்ள ஆணும் ஜோடி சேர்ந்து வாழ்கின்றனர். ஒரு பாலின உறவுகளிலும் கூட இந்த வயது பேதம் பிரச்சினை உள்ளது.

தீர்வு காண்பது எளிது

பொதுவாக, தம்பதிகள் என்றாகும்போது இனவிருத்தி முக்கியமானதாகிறது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதிக வயதின் காரணமாகச் சில பிரச்சினைகளைச் சந்திப்பது இயல்பு. இம்மாதிரியான தம்பதிகள் இடையே ஏற்படும் பிரச்சினைகளைவிட, வெளியில் இருந்து மற்றவர்களால் உருவாக்கப்படும் பிரச்சினைகளே அதிகம். அதனை எதிர்கொள்ளும் பக்குவமிருந்துவிட்டால், இருவரது அன்னியோன்யத்தை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல, கிட்டத்தட்ட ஒரே வயதுள்ள தம்பதிகளிடையே இருக்கும் அவநம்பிக்கையும் பொறாமைக்குணமும் இவர்களிடையே மிகக்குறைவாகவே இருக்கும் என்று சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன.

வயது வித்தியாசமுள்ள தம்பதிகள் இடையே கண்டிப்பாக செக்ஸ் பிரச்சினை ஏற்படுமென்ற நிலை உலகம் முழுக்க நிலவுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட ஜோடி அதனை எப்படிப் பேசித் தீர்க்கிறது, செக்ஸ் தெரபிஸ்ட் மூலமாக அப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது என்பது மிக முக்கியம். அதனைப் பொறுத்தே அவர்களது எதிர்கால தாம்பத்திய வாழ்க்கை அமையும்.

மனதுக்கு வயதில்லை

மனம் இளமையாக இருப்பவருக்கு வயது வித்தியாசம் ஒரு பிரச்சினை கிடையாது. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டான் வால்பர் இதற்கொரு உதாரணம். இவரது வயது 69. இவரது மனைவி ஸ்டெஃபானியின் வயது 24. இருவருக்கும் கிட்டத்தட்ட 45 வயது வித்தியாசம். ஆனாலும் இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த திருமணத்தை முதலில் ஸ்டெஃபானியின் சகோதரரோ, தாயோ ஏற்கவில்லை. ஆனால், இருவரது அன்னியோன்யத்தைப் புரிந்துகொண்டபிறகு, ஸ்டெஃபானியின் தாயே அவர்களது குழந்தை லாச்லனையும் கவனித்துக் கொள்கிறார்.

ஏறக்குறைய குறைந்த வயது வித்தியாசமுள்ள தம்பதியரைப் போலவே டான் – ஸ்டெஃபானி தம்பதியரின் செயல்பாடுகள் உள்ளன. எப்போதெல்லாம் நீங்கள் நெருக்கமாக இருப்பீர்கள் என்ற கேள்விக்கு ஸ்டெஃபானி சொன்ன பதில் இது. “அதிகாலையில 2 மணி, 5 மணி, மத்தியானம், சாப்பாட்டுக்குப் பிறகு, சாப்பாட்டுக்கு முன்னாடி, சாப்பிடுறப்போ, வீட்டு கூரையில, பால்கனியில, தரையில, இப்படி எங்கேயும் எப்போதும் நாங்க நெருக்கமா இருப்போம்” என்று நீள்கிறது அவரது பதில். கேட்டவுடன், நம்மையும் ‘ஆவ்சம்’ சொல்ல வைக்கிறது. “ஆமாம், அவங்க சொல்றது உண்மை தான். நாங்க எந்த நேரத்துலயும் செக்ஸ் வச்சுப்போம்” என்று டானும் அதனை ஒப்புக்கொள்கிறார். இவர்களைப் பொறுத்தவரை, செக்ஸுக்கும் வயது வித்தியாசத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதே. இருவரது புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிலை உருவாகியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

டான், ஸ்டெபானி இருவருக்குமே உள்ள கவலை, குழந்தை லாச்லனுடன் எத்தனை காலம் ஒன்றாகச் செலவழிப்பது என்பதே. “என்னோட வயசுக்கு, எத்தனை காலம் உயிரோடு இருப்பேன்னு தெரியலை. ஆனால், இருக்குற வரைக்கும் என்னால் முடிஞ்ச அளவுக்கு, எனக்கு தெரிஞ்ச அனைத்தையும் அவனுக்குச் சொல்லிக் கொடுப்பேன்” என்று கூறுகிறார் டான். இந்த ஜோடி போன்று உலகம் முழுக்க மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் கணிசமாக உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது திருமணம் மீதான ஆண், பெண் மனநிலை மாறி வருகிறது. குறைந்தபட்சம் 3 முதல் 6 அல்லது 7 வயது வித்தியாசம் ஜோடிகளுக்கு இடையே இருப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழலில் 40 – 45 வயதுகளில் பெண்கள் மெனோபாஸ் அடைவதால் இதுவே இருவருக்குமான செக்ஸ் வாழ்வை சுமூகமாக நகர்த்திச் செல்வதற்கு உதவும் என்பதே காரணம்.

பணியிடத்தில் காதல் அல்லது படிக்கும்போது காதல் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட தம்பதிகள் இடையே வயது வித்தியாசம் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. நுகர்வுக் கலாசாரத்தில் கண்மூடித்தனமான அன்பு அல்லது காதல் என்பது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. அதனாலேயே, இளம் வயதில் திருமணம் மற்றும் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடிகளிடையே காதல் என்பது குறைந்து வருகிறது.

வயதுக்கும் செக்ஸுக்கும் கண்டிப்பாக சம்பந்தம் உண்டு. வளர்சிதை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, இணையர் தம் வாழ்வைப் புரிதலோடு அமைத்துக்கொண்டால் போதும். எத்தகைய பிரச்சினைகளும் பொடிப்பொடியாகும்!

நன்றி:

மென்ஸ் ஹெல்த்

நியூஸ்.காம்

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon