மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 மே 2019

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பாமக போட்டியிட்ட தருமபுரி, விழுப்புரம் , அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், மத்திய சென்னை மற்றும் திண்டுக்கல் என அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுதொடர்பான கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளிக்காமலேயே சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பாமகவினருக்கு இன்று (மே 26) மடல் எழுதியுள்ள ராமதாஸ், “தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான் நமது இரண்டாம் இலக்கு ஆகும். முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை என்றாலும் கூட இரண்டாவது இலக்கு நமக்கு சாத்தியமாகியிருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றி தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவுதான் என்றுள்ள ராமதாஸ், “திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின; ஏமாற்றின” என்று விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி மீதும், கூட்டணிக் கட்சிகள் மீதும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டுகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்தின என்று குற்றம்சாட்டிய அவர், “பொய்களின் துணையுடனும், பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி. இது தற்காலிகமான வெற்றியே. மக்கள் உண்மையையும், நன்மையையும் உணரும் போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியால் என்ன நன்மை கிடைக்கும்

நடப்பு மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ்,

“இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம். வெற்றி பெறுவோம். கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம். அப்போதெல்லாம் முடங்கி விடாமல் பாட்டாளிகளாகிய உங்களின் உழைப்பால் மீண்டெழுந்து வந்திருக்கிறோம். இப்போதும் உங்களின் உதவியுடன் அது சாத்தியம் தான். ஆகவே, தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்.அவர்களின் கரங்களாலேயே மகுடம் சூடுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

5 நிமிட வாசிப்பு

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு... என்னென்ன சிறப்பு?

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம்!

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

ஈமு கோழி மோசடி: மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஞாயிறு 26 மே 2019