மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற வேண்டும்: மோடி

சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற வேண்டும்: மோடி

மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. நேற்று (மே 25) டெல்லியில் தேசிய ஜனநாயக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் மோடி பேசினார்.

அப்போது அவர், “சுவர்களையும், வேறுபாடுகளையும் மட்டுமே அரசியல் உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலோ அச்சுவர்களைத் தகர்த்தெறிந்துள்ளது. இந்தத் தேர்தல் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துள்ளது. சமூக ஒற்றுமைக்கான களம்தான் இத்தேர்தல்.

அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் முந்தைய ஆட்சியாளர்களையே மீண்டும் தேர்வு செய்துள்ளனர். நேர்மறையான வாக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்தான் இது. மீண்டும் நமது அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் நமக்குப் பொறுப்புகளும் அதிகரித்துள்ளது. நீங்கள் அனைவரும் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இது அமைப்பின் ஒரு பகுதிதான். நான் உங்களில் ஒருவன்; உங்களுக்குச் சமமானவன்.

ஏழைகள் ஏமாற்றப்பட்டிருப்பதுபோலவே சிறுபான்மையினரும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அவர்களது கல்வி, சுகாதாரம் மீது கவனம் கொள்ளப்பட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும். வாக்கரசியலைக் கையிலெடுத்தவர்களால் சிறுபான்மையினர் அச்சத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இந்த அச்சத்துக்கு நீங்கள் முடிவுகட்ட வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன். நாம் சிறுபான்மையினரின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று, பிராந்திய திட்டங்கள். மற்றொன்று, தேசிய கனவுகள். இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதை எண்ணிப் பெருமைப்படுவது இயற்கைதான். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக நாம் இந்தப் பெருமையைக் கையில் பிடித்துக்கொண்டே இருக்க முடியாது. நமக்காக வாக்களித்தவர்களுக்காகவும், வாக்களிக்காதவர்களுக்காகவும் நாம் பணியாற்ற வேண்டும்.

நமது செயல்கள் அவர்களுக்குத் திருப்தியையும், நம்பிக்கையையும் தர வேண்டும். நம்முடன் இருப்பவர்களுக்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நம்முடன் இருக்கப்போகிறவர்களுக்காகவும் நாம் பணியாற்ற வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அதிலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிகாரப் பசியில் இருந்தவர்களை நாட்டு மக்கள் நிராகரித்து நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் என்பது எனக்கு யாத்திரை போல இருந்தது. பிரச்சாரப் பணிகளில் நான் மக்களைச் சந்தித்து அவர்களது ஆதரவுக்காக நன்றி தெரிவித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி தோளுக்குத் தோளாக நின்று உழைக்க வேண்டும். ஆனால், ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்க நான் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon