மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

விமர்சனம்: அலாதீன்

விமர்சனம்: அலாதீன்

அலாதீனின் விருப்பங்களை ஜீனி நிறைவேற்றுகிறது. பார்வையாளர்களின் விருப்பத்தை அலாதீன் நிறைவேற்றியதா?

1992ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் பிரபல கார்டூன் திரைப்படம் ‘அலாதீன்’. அதன் ரீமேக்காக, அதே பெயரில் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் தொழில்நுட்பத்துடனும் கதையில் சில மாற்றங்களுடனும் இத்தலைமுறைக்கு வழங்கியிருக்கிறது டிஸ்னி.

தெரு எலியென எல்லோராலும் கேலி செய்யப்படும் சாகசத் திருடன் அலாதீன் (மெனா மிசெளத்) அக்ரபாத் நாட்டில் வாழ்கிறான். நாட்டின் இளவரசியான ஜாஸ்மின் (நியோமி ஸ்காட்) முதன்முறையாக நகரத்துக்கு வரும்போது அலாதீன் அவளை ஒரு சிக்கலிலிருந்து காப்பாற்ற, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. அதேசமயம் ஜஃபார் எனும் தீய எண்ணும் கொண்ட மந்திரவாதி, விருப்பங்களை நிறைவேற்றும் அற்புத விளக்கை அடையக் காத்திருக்கிறான். அரண்மனைக்குள் இளவரசியை ரகசியமாய் சந்தித்து விட்டு அலாதீன் செல்லும்போது, ஜஃபார் அலாதீனைக் கடத்தித் தனது திட்டத்துக்குப் பயன்படுத்துகிறான்.

குகைக்குள் மாட்டிக்கொள்ளும் அலாதீன் அற்புத விளக்கைத் தேய்க்க, விளக்கிலிருந்து ஜீனி (வில் ஸ்மித்) எனும் விருப்பங்களை நிறைவேற்றும் நீல நிற பூதம் கிளம்புகிறது. ஜீனி மூன்று விருப்பங்கள் மட்டுமே கேட்க முடியும் என்று அலாதீனிடம் நிபந்தனை போட, அலாதீனின் மூன்று விருப்பங்களும் அதைத் தொடரும் சாகசங்களுமே மீதிக்கதை.

அதே கதை என்றாலும் இயக்குநர் கய் ரிட்சி சில மாற்றங்களுடன் இந்த அலாதீனைத் தந்திருக்கிறார். அந்த மாற்றங்கள்தான் இந்த அலாதீனுக்கு சாதக பாதகங்களைத் தந்திருக்கிறது.

சாதகங்கள்

இளவரசி ஜாஸ்மின் கதாபாத்திரம் அரண்மனைத் தனிமையில் தவிக்கும், தனக்கான மணமகனைத் தேர்ந்தெடுக்க விரும்பும் சாதாரணப் பெண் பாத்திரத்தை போலப் படைக்கப்பட்டிருக்கும் பழைய அலாதீனில். அப்பாத்திரத்தைப் பெண்ணியக் கண்ணோட்டத்தோடு, அரியணை ஏற விரும்பும் இளவரசியாக மாற்றியமைத்தது சிறப்பு.

ஜாஸ்மினாக வரும் நியோமி ஸ்காட் ஒன் வுமன் ஆர்மியாகப் படத்தை தாங்கிப்பிடிக்கிறார். சிறப்பான பாத்திரத் தேர்வு.

பாதகங்கள்

ஒரு நாடோடி வியாபாரி தான் விற்க வரும் விளக்கைப் பற்றிய கதையாக விரிந்த பழைய அலாதீனின் கதையிலிருக்கும் நாடோடித் தன்மை இதில் இல்லை. வில் ஸ்மித் கதை சொல்ல ஆரம்பிக்கும்போது அந்த மேஜிக் மங்குகிறது.

வில் ஸ்மித் ஜீனியாகப் பொருந்தாமல் வில் ஸ்மித்தாகவே தெரிகிறார். நம்மைச் சிரிக்கவைக்க ஸ்மித் முயன்றாலும் நம்மால்தான் ரசிக்க முடியவில்லை.

அலாதீன், ஜஃபார் பாத்திரத் தேர்வுகள் பலவீனமாகவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக ஜஃபாரைப் பார்க்கும்போது எரிச்சலாகவே இருக்கிறது. மந்திரவாதிக்கும் அவனது கிளிக்கும் இருக்கும் சுவாரஸ்யமான உரையாடல் இதில் மிஸ்ஸிங். கதைக்கு அவை முக்கியமில்லாதது போல தோன்றினாலும், சிறு கதாபாத்திரங்களின் மீதும் காட்டிய கவனம்தான் பழைய அலாதீனை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

டிஸ்னியின் கிளாஸிக் கார்ட்டூன்கள் எதனால் நம் நினைவிலிருந்து அகலவில்லை என உணர்ந்தாலே அழகான ரீமேக் உறுதி. ஆனால், தொடர்ந்து டிஸ்னி கார்டூன் கிளாஸிக்குகள் ரீமேக்காகி சொதப்பி வருவது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

ஜீனி பூதம் அலாதீனிடம் விவரிக்கும் நிபந்தனைகளுள் ஒன்று படம் முடிந்தவுடன் நினைவுக்கு வந்தது. ஜீனியிடம் மாபெரும் சக்தி இருந்தாலும் அவனால் இறந்தவரை உயிர்ப்பிக்க முடியாது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!

.

ஓ.பன்னீரின் 'பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி

.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

.

.

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

.

தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!

.

.

.

ஞாயிறு, 26 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon