மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

துரத்தப்படும் வெனிசூலாவின் தூதர்கள்!

துரத்தப்படும் வெனிசூலாவின் தூதர்கள்!

உலக அரசியல் பழகு 4 -ஆரா

ஐநா பொது அவையில் அமெரிக்க அதிபர் புஷ்ஷை சாத்தான் என்றும் அவர் வந்து போன நெடியடித்தது என்றும் வெனிசூலா அதிபர் சாவேஸ் 2006இல் கூறியது அமெரிக்க, வெனிசூலா உறவுகளை மேலும் தரைமட்டமாக்கியது.

வெனிசூலா நாட்டின் எண்ணெய் வளம் அபாரமானது. அதை தேசியமயமாக்கி சாவேஸ் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் லாபத்தை ஒடுக்கியதால் இயற்கையாகவே அமெரிக்கா வெனிசூலா மீது வேகம் கொண்டுவந்தது.

அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சாவேஸ் தலைமையிலான வெனிசூலாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டன அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் வெனிசூலாவில் எடுபடாததால் அமெரிக்கா வேறு வேறு வகைகளிலும் வெனிசூலாவில் விளையாடியது.

2006ஆம் ஆண்டு ஐநா பொது அவையில் அமெரிக்காவை பற்றிப் உலகமே கவனிக்கும் வகையில் பேசிய சாவேஸ் 2012ஆம் ஆண்டு சுமார் ஆறு வருடங்கள் கழித்து அதற்கு விளக்கமளித்தார்.

“நான் அந்த இடத்தில் அந்த வார்த்தைகளைத் திட்டமிட்டுப் பேசியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை... இல்லை... அது அந்த நொடியில் உதித்த எண்ணத்தின் வெளிப்பாடுதான். அந்த நேரத்தில் நான் ஒரு கெட்ட நெடியை உணர்ந்தேன். அதை வைத்துப் பேசினேன். அந்த நேரத்தில் அந்த வாடை அங்கு ஏன் அடித்தது என்று எனக்குத் தெரியவில்லை” என்று சொல்லி சிரித்தார் சாவேஸ்.

சாவேஸ் திட்டமிடவில்லை என்று சொன்னது உண்மையோ இல்லையோ, ஆனால் அமெரிக்காவினால் வெனிசூலா மீதான ஒவ்வொரு நடவடிக்கையும் திட்டமிட்டே கச்சிதமாக நடத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு ஈடு கொடுத்துத் தன் நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு உறுப்பு நாடான வெனிசூலா பற்பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால் வெனிசூலாவுக்கு உணவு வரும் பல்வேறு வாய்ப்புகளையும் அமெரிக்கா திட்டமிட்டுத் தடுப்பதாக அதிபர் மதுரோ குற்றம்சாட்டிவருகிறார்.

நாட்டுக்குள் இப்படி என்றால் உலக அரங்கில் வெனிசூலா நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி என்ன என்பதற்கு இத்தாலி நாட்டுக்கான வெனிசூலாவின் தூதர் இசையாஸ் ரோட்ரிக்யூஸ் ஓர் உதாரணம். இவர் கடந்த வாரம் தனது இத்தாலிக்கான வெனிசூலாவின் தூதர் பதவியை விட்டு விலகிவிட்டார்.

அமெரிக்கப் பொருளாதாரத் தடையால் வெனிசூலாவின் தூதர் ஒருவர் தன் இயல்பு வாழ்க்கையைக்கூட நடத்த முடியாமல் விலகுவது இது முதல் முறை.

இசையாஸ் ரோட்ரிக்யூஸ் வெனிசூலா அதிபர் மதுராவுக்குக் கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

”உங்களுடைய போராட்டத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் இத்தாலி நாட்டில் வெனிசூலாவின் தூதராக என்னுடைய வேலைகளைச் செய்ய முடியவில்லை. தூதரக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்குக்கூடப் பணம் இல்லை. ரோம் நகரில் இருக்கும் நம் தூதரக அலுவலகத்துக்கு வாடகை செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் இனியும் தூதராகத் தொடர முடியவில்லை எனவே நான் பதவி விலகுகிறேன்” என்று கடிதம் எழுதியுள்ளார்.

இது மட்டுமல்ல. கடந்த வாரம் ரோம் நகரில் வெனிசூலாவின் இத்தாலி தூதர் ரோட்ரிகஸ் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துக்கள் இப்படியும் இப்போதும் நடக்குமா என்று நாம் எண்ணத் தோன்றும். ஏனெனில் அமெரிக்கப் பொருளாதாரத் தடை என்பது வெனிசூலா நாட்டின் பாமர மக்களை மட்டுமல்ல இன்னொரு நாட்டுக்கான வெனிசூலா தூதரைக்கூட எந்த அளவு கட்டிப்போட்டிருக்கிறது என்பதை அவரது வார்த்தைகளிலேயே கேட்கலாம்.

“நான் 2011இலிருந்து இத்தாலிக்கான தூதராக இருக்கிறேன். நேற்றும் இன்றும் நான் எங்கள் அதிபர் மதுரோ பக்கம்தான் இருக்கிறேன். நாளையும் அவர் பக்கம்தான் இருப்பேன். ஆனால் ரோம் நகரில் என் தனிப்பட்ட வாழ்க்கையைக்கூட நடத்த முடியவில்லை. என் மனைவியிடம் இருந்த விலை உயர்ந்த துணி வகைகளை விற்று அதில் வாழ்க்கை நடத்திவருகிறேன். என் காரை விலை பேசிவருகிறேன். அமெரிக்கப் பொருளாதாரத் தடையால் ரோம் நகரில் என் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. எனவே என் காரைக்கூட விற்க முடியவில்லை” என்கிறார் 77 வயதான இசையாஸ் ரோட்ரிகியூஸ்.

டெலிகிராப், கார்டியன் போன்ற் உலக இதழ்களிலிருந்து ஐரோப்பிய இதழ்கள் வரைக்கும் கடந்த வாரம் கவனம் ஈர்த்த செய்தி இது. இத்தாலி மட்டுமல்ல இன்னும் பல நாடுகளில் இருக்கும் வெனிசூலாவின் தூதர்களை அந்தந்த நாடுகளிலிருந்து துரத்தி வெனிசூலாவுக்கே விரட்டும் முயற்சிதான் இது. இதன் மூலம் உலக அரங்கில் வெனிசூலாவுக்கான அடிப்படையை அகற்றும் திட்டம் இது என்கிறார்கள் நோக்கர்கள். இதன் முதல் கட்டம்தான் இத்தாலித் தூதரின் ஏழ்மை நிலை.

அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் எல்லாம் வெனிசூலா அதிபர் மதுரோவுக்கு எதிராக அணிவகுத்து நிற்க, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மதுரோவுக்கு ஆதரவாக நிற்பதால் அரசியல், சமூக, பொருளாதாரப் போராட்டத்தில் மூச்சு முட்டிக்கொண்டிருக்கிறது வெனிசூலா.

நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் சில நாட்களாக நார்வே நாட்டில் அதிபர் மதுரோ தரப்புக்கும் நான்தான் அதிபர் என்று சொல்லிக் கொள்ளும் குவைடோ தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது வெனிசூலாவுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சினைதானே என்று பலர் நம்மில் நினைக்கலாம். ஆனால் இந்தியாவின் எண்ணெய் தேவைகளும் அதற்கான பக்க விளைவுகளும் இந்தப் பிரச்சினையை ஒட்டியவை என்பதைத் தெரிந்துகொள்வோம்.

(அடுத்த சனிக்கிழமை சந்திப்போம்)

வெனிசூலா: இரு அதிபர்கள், ஒரே காரணம்!

அமெரிக்காவின் அடிவயிற்றில் செருகப்பட்ட வாள்!

சனி, 25 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon