மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

சொற்களின் பிரிவும் இணைவும்!

சொற்களின் பிரிவும் இணைவும்!வெற்றிநடை போடும் தமிழகம்

ஒரு சொல் கேளீரோ! – 9: அரவிந்தன்

தான் என்பதைப் பிரித்து எழுதினால் 'நான்' என்னும் பொருள் வரும். அதுதான், அப்படித்தான், அவன்தான், அவ்வளவுதான் என்று சேர்த்து எழுதினால் வேறு பொருள் வரும் எனவே 'நான்' என்ற பொருள் தராத எல்லா இடங்களிலும் இதைச் சேர்த்தே எழுத வேண்டும்.

போது, பொழுது ஆகியவற்றைச் சேர்த்து எழுத வேண்டும். செய்யும்போது, வரும்பொழுது...

போன்ற, போல என்பவை பிரிந்தும் வரும், சேர்ந்தும் வரும்.

அதுபோல, அதைப் போல

இது போன்ற, இதைப் போன்ற

திரிந்து புணருதல்

சில சொற்கள் திரிந்து புணரும். அதாவது, உருமாறி இன்னொரு சொல்லுடன் சேரும்.

எடுத்துக்காட்டு:

மதுரையில் இருந்து,

மதுரையிலிருந்து

இந்தச் சமயம், இச்சமயம், ஊர்+ஆட்சி = ஊராட்சி, தலைமை+அகம் = தலைமையகம்.

திரிந்து (உருமாறி) புணர்ந்த (இணைந்த) சொற்களைப் பிரிக்கக் கூடாது. (அச் சமயம் - தவறு)

மதுரையிலிருந்து, காலையிலிருந்து போன்ற சொற்களைச் சிலர் மதுரையில் இருந்து காலையில் இருந்து எனப் பிரிக்கிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் இதில் தவறு இல்லையெனத் தோன்றும். ஆனால் இது தவறு.

மதுரையிலிருந்து என்றால் From Madurai என்று பொருள். மதுரையில் இருந்து என்றால் மதுரையில் வசித்து / தங்கி என்று பொருள்.

பிரிப்பதும் சேர்ப்பதும் பொருள் மாற்றத்தைத் தருவதால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

'இருத்தல்' என்னும் பொருள் தரும் இடங்களில் 'இருந்த' 'இருந்து' 'இரு' ஆகியவற்றைப் பிரித்து எழுதலாம். From என்னும் பொருள் தரும் இடங்களில் சேர்த்தே எழுத வேண்டும்.

இந்த எடுத்துக்காட்டைப் பாருங்கள்:

மதுரையில் இருந்துவந்தான் (மதுரையில் வசித்தல்)

மதுரையிலிருந்து வந்தான் (மதுரையிலிருந்து வருதல்)

சேர்த்தல் - பிரித்தலில் பொருள் மாறுபடுவதை உணர முடிகிறது அல்லவா?

இரு என்னும் சொல்லின் சிக்கல்

பார்த்திருக்கிறார், சொல்லியிருக்கிறார், கேட்டிருக்கிறார், திருத்தப்பட்டிருக்கிறது ஆகிய சொற்களை,

பார்த்து இருக்கிறார், சொல்லி இருக்கிறார், கேட்டு இருக்கிறார், திருத்தப்பட்டு இருக்கிறது என்று எழுதப்படுவதை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. எளிமை என்று நினைத்துக்கொண்டு செய்யப்படும் தவறு இது.

பார்த்திருக்கிறார், சொல்லியிருக்கிறார் ஆகியவற்றைப் பார்த்து / சொல்லி இருக்கிறார் எனப் பிரித்தால் இருக்கிறார் என்னும் சொல் இருத்தல் என்னும் பொருளைத் தரும். பார்த்திருக்கிறார், சொல்லியிருக்கிறார் என்பதில் வரும் இருக்கிறார் என்பது இரு என்னும் பொருளைத் தருவதில்லை. பார்த்தல் என்னும் வினை ஒரு குறிப்பிட்ட காலத்தில் முற்றுப்பெற்றதைக் குறிக்க அது பயன்படுகிறது.

அதாவது, இரு என்று பொருள் தரும் சொல், இந்த இடத்தில் வேறொரு சொல்லுடன் இணைந்து மாறுபட்ட பொருளைத் தருகிறது. இப்படி மாறுபட்ட பொருள் தரும்போது அச்சொல்லைப் பிரித்து எழுத வேண்டும். இல்லையேல் அது தன் அசல் பொருளையே தரும். நாம் இங்கே சொல்ல விரும்பும் பொருள் அது அல்ல. எனவே இந்த இடத்தில் இருக்கிறார் எனப் பிரித்து எழுதக் கூடாது.

வந்து இருக்கிறது, போய் இருக்கிறது. நின்றுகொண்டு இருக்கிறது என்றெல்லாம் பிரிப்பதும் இதே காரணத்தினால் தவறுதான்.

பொதுவாகவே, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வரும் சமயத்தில் பயன்படுத்தப்படும் இருந்து என்னும் சொல்லைச் சேர்த்து எழுத வேண்டும்.

மதுரையிலிருந்து, தில்லியிலிருந்து…

இந்தச் சொல்லை, தில்லியில் இருந்து எனப் பிரித்தால் தில்லியில் இருத்தல் எனப் பொருள் தரும். எனவே பிரிக்கக் கூடாது.

காலம், கொள்கை மாற்றம், நிலை மாற்றம் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

காலம்

காலையிலிருந்து, நேற்றிலிருந்து, அடுத்த வாரத்திலிருந்து, 2001இலிருந்து…

கொள்கை

அவர் திராவிடக் கருத்தியலிலிருந்து விலகி மார்க்ஸியத்தை வரித்துக்கொண்டார்.

நிலை

என் தந்தை, நாளைமுதல் மேல் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

அந்த இலை பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறியது.

ஒன்றிலிருந்து இன்னொன்றாக

ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு

ஒரு கொள்கையிலிருந்து இன்னொரு கொள்கைக்கு

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு

இப்படியெல்லாம் மாறும் நிகழ்வுகளைக் குறிக்கும்போது இருந்து என்பதைச் சேர்த்தே எழுத வேண்டும்.

உள்ளது என்னும் சொல்லும் இதேபோலத்தான். செய்துள்ளார் என்பதைச் செய்து உள்ளார் எனப் பிரிக்க வேண்டாம். கூறியுள்ளீர்கள் என்பதைக் கூறி உள்ளீர்கள் எனப் பிரிக்க வேண்டாம். பொருள் குழப்பம் ஏற்படும்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?

ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!

இது யாருடைய செய்வினை?

சொன்னது சொன்னபடி

எதற்கு இத்தனை கேள்விக் குறிகள்?!

பொருள் தரும் பின்னொட்டுக்கள்

சேரிடம் அறிந்து சேர்

வியாழன், 23 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon