மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள்: கமல்ஹாசன்

எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள்: கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழகத்தில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம், பல இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. சென்னையின் 3 தொகுதிகள், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்குப் பகுதிகள், மதுரை, திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் மநீம 3ஆவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 24) செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“14 மாதங்களே ஆன கைக்குழந்தையை மக்கள் நடக்க, ஓட விட்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கரிசனம் காட்டியுள்ளனர். கடமையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வாக்குகளைப் பெறுவதற்கு நேர்மையான முறையில் முயன்று ஓட்டுக்களைக் குவித்திருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை நாளைய வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், “நல்ல வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையையும், நேர் வழியில் சென்றால் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையையும் மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். எனவே நேர்மை வென்றதாக நாங்கள் மார்தட்டிக்கொள்கிறோம், மக்களும் சந்தோஷப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

தேர்தல் தோல்வி உங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதா என்ற கேள்விக்கு, “அரசியலில் அப்படியெல்லாம் இருக்க முடியாது. 14 வருடங்கள் வனவாசம் இருந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். நாங்கள் வந்து 14 மாதம்தான் ஆகிறது. எனவே எங்களுக்கு இது எந்த வித அயர்ச்சியையோ துவளலையோ ஏற்படுத்தவில்லை. கிராமப்புறங்களில் எங்கள் கட்சி அதிக வாக்குகள் பெறாமல் போனதற்கு, பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே காரணம்” என்றார்.

மேலும், “பாஜகவின் வெற்றி என்பது மக்களின் தீர்ப்பு. ஆனால் அது தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல. நாங்கள் பாஜகவின் ‘பி’ டீம் அல்ல, நேர்மைக்கு ‘ஏ’ டீம். தமிழகத்தை வளமாக வைத்திருக்க வேண்டியது பாஜகவின் கடமை. அக்கட்சி வெற்றிபெற்ற மாநிலங்களுக்கு நிகராகத் தமிழகத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் கருத்து. தமிழகத்தின் எழுச்சிதான் எங்களின் இலக்கு. முன்னோடி இந்திய மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்றும் தனது பேட்டியில் கமல்ஹாசன் கூறினார்.

.

.

மேலும் படிக்க

.

.

ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!

.

.

திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!

.

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!

.

மோடிகளை உருவாக்கும் மோடி

.

.

வெள்ளி, 24 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon