மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 24 மே 2019

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!

ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி என நேரு குடும்பத்தினரின் பாரம்பரிய சொத்தாக அடையாளப்படுத்தப்பட்ட அமேதி தொகுதியை, காங்கிரஸின் தலைவரான ராகுல் காந்தி இழந்திருப்பது வடஇந்தியாவில் பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

4 லட்சத்து 68 ஆயிரத்து 514 வாக்குகள் பெற்றார் ஸ்மிருதி இரானி. ஆனால், ராகுல் காந்தி 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

அமேதியை இழந்த அதே நேரத்தில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் வரலாற்று வெற்றியைப் பெற்றிருந்தாலும், ‘சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்திவிட்டார்களே’ என்று காங்கிரஸார் கவலையில் இருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி அமேதியை சுற்றிச் சுற்றி வந்தும் அமேதியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸால் முடியவில்லை.

ராகுல் காந்தியின் அடையாளச் செல்வாக்கையும், அவரது தலைமைத்துவத்தையும் வீழ்த்தும் வகையில் பாஜக கடந்த ஐந்து வருடங்களாகத் திட்டமிட்டு நடத்திய ஆபரேஷன் இது என்கிறார்கள் பாஜகவின் தேசிய நிர்வாகிகள்.

இதுகுறித்து அமேதியில் பணியாற்றிய பாஜக இளைஞரணி தேசிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அந்தத் தகவல்களைத் தொகுத்துத் தருகிறோம்.

ராகுல் காந்தியிடம் 2014ஆம் ஆண்டு இதே அமேதியில் ஸ்மிருதி இரானி தோற்றார். அதன் பின் அவரை அழைத்த மோடி, ‘அடுத்த முறையும் ராகுல் காந்தியை எதிர்த்து நீதான் வேட்பாளர். இப்போது நீ தோற்றாலும் அடுத்த முறை அவரை உன்னால் வெல்ல முடியும். எனவே அதற்கான வேலைகளைத் தொடங்கு. அதற்காக அட்வான்ஸாகவே உனக்கு மத்திய அமைச்சர் பதவி’ என்று கூறினார். அதன்படியே தேர்தலில் தோற்ற ஸ்மிருதி இரானியை மத்திய அமைச்சர் ஆகவும் ஆக்கினார். இது அப்போது பாஜகவுக்குள்ளேயே விமர்சனங்களைக் கிளப்பின. ஆனால், ராகுலை வீழ்த்துவதற்கான அட்வான்ஸ் ஆபரேஷன்தான் இதெல்லாம்.

அமித் ஷா பாஜக தலைவரான பிறகு ராகுல் காந்தியின் அமேதி தொகுதி மீது சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார். மாதத்தில் அதிகபட்சம் 14 நாட்கள் அமேதி தொகுதியில்தான் இருக்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானிக்கு உத்தரவிட்டார். அதை ஏற்று தான் ஒரு மத்திய அமைச்சராக இருந்தாலும்கூட மாதத்தில் அதிகபட்சம் இரு வாரம், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அமேதியிலேயே தங்கினார் இரானி.

ஒவ்வொரு முறை அமேதி செல்லும்போதும் சாலையோர உணவகங்களிலேயே உண்ணுவது, கிராம மக்களோடு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவர்கள் குடிக்கும் குடி தண்ணீரையே குடிப்பது என்று அமேதியின் நகரம் முதல் கிராமம் வரை சகல மக்களோடும் பழகினார் ஸ்மிருதி இரானி. இரானிக்கு வலு சேர்க்கும் வகையில் ஏற்ற வகையில் ராகுல் காந்தி அமேதி தொகுதியை எட்டிப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

ராகுல் காந்தி அமேதிக்கு வருவது என்பது கடந்த ஐந்தாண்டுகளில் ஏதோ விண்கல் விழுவதைப் போல அரிதாகிவிட்டது.

ஒரே ஓர் உதாரணம். எம்.பி.க்கள் எல்லாம் தங்கள் தொகுதியில் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அமேதி தொகுதியிலுள்ள ஜெகதீஷ்பூர் கிராமத்தை ராகுல் காந்தி தத்தெடுத்தார். இந்த விழாவுக்காக அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெகதீஷ்பூருக்கு வந்தார். அதன்பின் இந்தத் தேர்தல் சமயம் வரை அவர் தான் தத்தெடுத்த கிராமத்துக்கே வரவில்லை.

இந்த ஒரு கிராமத்தையே பார்க்க வராத ராகுல், இந்தத் தொகுதியை எப்படிப் பார்ப்பார், இந்த நாட்டை எப்படிப் பார்த்துக் கொள்வார் என்று அமேதியில் ஸ்மிருதி இரானி கேட்ட கேள்விகள் 39% கல்வியறிவு கொண்ட அமேதி தொகுதி மக்களை நன்றாக யோசிக்க வைத்திருக்கின்றன.

ஸ்மிருதி இரானியின் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்தது இதுதான். ‘கிராமங்களின் முகங்களை மாற்ற முடியாத ராகுல் காந்தி, தனக்குப் பதில் பிரியங்கா என்ற முகத்தை உங்களிடம் அனுப்புகிறார். அவருக்கா ஓட்டுப் போடப் போடுகிறீர்கள்? அல்லது உங்களோடு ஐந்து வருட காலம் இருந்த எனக்கு ஓட்டுப் போடப் போகிறீர்களா?’ என இரானி கேட்ட கேள்விகள் அமேதி வாக்காளர்களிடம் எடுபட்டன.

தவிர, ராகுல் காந்தி தத்தெடுத்த கிராமத்துக்கு இரானி அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுக்குத் தகவல் கொடுத்தும் அவரது அணுகுமுறையில் மாற்றமில்லை. மேலும், கடந்த தேர்தலில் ராகுலின் வெற்றி வித்தியாசம் வெகுவாகக் குறைந்துவிட்டது, வரும் தேர்தலில் அது கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று தேர்தலுக்கு முன்பே ராகுலுக்குத் தகவல்கள் சென்றன. அப்போதுகூட அவர் அமேதியை நோக்கித் திரும்பாமல் தென்னிந்தியா மீது அன்பு செலுத்துகிறேன் என்று சொல்லி தனக்கு ‘பாதுகாப்பான’ வயநாட்டை தேர்ந்தெடுத்தாரே தவிர அமேதி மக்களிடம் இறங்கி வரவில்லை என்கிறார்கள் உபி நிலவரம் அறிந்த பாஜக இளைஞரணி தேசியப் பிரமுகர்கள்.

அதேநேரம் காங்கிரஸ் தரப்பிலோ, “ராகுலை வீழ்த்த ஐந்தாண்டுகள் திட்டமிட்டு பாஜக பணியாற்றியிருக்கிறது. காங்கிரஸ் தலைவரான ராகுல் தனது பல பணிச் சுமைகளுக்கு இடையில் அமேதி மீது ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருந்தார். ராகுலின் பிரதிநிதிகள் அமேதியில் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அரசு இயந்திரம் மூலம் அமேதி தொகுதிக்கான மேம்பாட்டுப் பணிகள் எதையும் செய்ய விடாமல் மத்திய அரசும், உபி. பாஜக அரசும் சதி செய்தன. இதை அவர் அமேதி மக்களுக்குக் கடிதமாகவும் எழுதியிருந்தார். ஆனால் மக்கள் பொய்ப் பிரச்சாரத்தை நம்பிவிட்டார்கள்” என்கிறார்கள்.

ஆக, அமேதி மீது ராகுல் காட்டிய அலட்சியமும், அதை முன்னெடுத்து ஸ்மிருதி இரானி காட்டிய வேகமும்தான் 38 வருட காங்கிரஸ் சொத்தாக இருந்த அமேதியை பாஜக பெயரில் எழுதி வைத்துவிட்டது.

அமேதி ஃபார்முலாவை வயநாட்டிலும் ராகுல் பின்பற்றாமல் இருக்க வேண்டும்!

- ஆரா

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

வெள்ளி 24 மே 2019