மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 மே 2019

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தி எது?

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தி எது?

சமூக வலைதளங்களும் நாமும் - 6: நவீனா

இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்குக் காத்திருக்கும் இந்த வேளையில், கருத்துக் கணிப்பு, வாக்குக் கணிப்பு (Opinion poll, Exit poll) ஆகியவை பற்றிய பரபரப்பான பேச்சுக்களை அனைத்து சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. அது தொடர்பான விளம்பரங்கள், ட்ரோல்கள் மீம்கள் போன்றவை சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வகையான விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் காண நேரும்போது அவற்றின் பின்னணி என்ன என்பதை முற்றிலும் நாம் அறிந்துகொள்கிறோமா?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றும் சொல்லலாம். சமூக வலைதளங்களில் நம் கண்முன் காட்டப்படும் பகுதி மிகச் சிறியது, அதன் பின்னணியில் மறைந்திருக்கும் பெரும் பகுதியொன்று, அவை வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டும் அல்ல என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துகளைப் பதிவேற்றிக்கொண்டே இருந்தார். அது குறித்து அவரது முகநூல் நண்பர்கள் கேள்வி எழுப்பும்போது அவர்களுடன் மிகப் பெரிய வாக்குவாதமும் செய்துகொண்டிருந்தார். அவரிடம் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான பின்னணி என்ன என்று கேட்டபோது, அந்த குறிப்பிட்ட கட்சி மட்டுமே மக்கள்நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி வருவதாகவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் முன்னேற்றங்கள் இருக்கும் எனவும் தான் கருதுவதாகக் கூறினார். இப்படிச் சொல்வதற்கு உங்களிடம் என்ன முகாந்திரம் இருக்கிறது எனக் கேட்டதற்கு, அவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட தேர்தல் தொடர்பான பல விளம்பரங்களைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே அந்த குறிப்பிட்ட கட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

தவறாக வழிகாட்டும் ஃபேஸ்புக்

2016ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பில் ஃபேஸ்புக்கின் பங்கு அளப்பரியது என அப்சர்வர் பத்திரிகையின் நிருபரும் பிரிட்டிஷ் எழுத்தாளருமான கரோல் காட்வெலாடர் (Carole Cadwalladr) குறிப்பிடுகிறார். துருக்கி யூரோப்பியன் யூனியனில் இணையவிருப்பதாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பல விளம்பரங்கள் இங்கிலாந்து மக்களை ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகத் திருப்பியதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், உண்மையில் துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தவறான விளம்பரங்களால் இங்கிலாந்து மக்கள் திசைதிருப்பப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டப்பட்டிருக்கின்றனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 33 மில்லியன் பவுண்ட் செலவிலான கல்லூரி வளாகம், 350 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான விளையாட்டு நிலையம், 77 மில்லியன் பவுண்ட் செலவிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் என இவை அனைத்தும் ஐரோப்பிய யூனியனால் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்களினால் அதிகம் பயனடைந்த சவுத் வேல்ஸ் பள்ளத்தாக்கில் வசிக்கும் படித்த இளைஞர்களும் இளம் பெண்களுமாகச் சுமார் 62 சதவிகிதம் பேர் இந்தப் பகுதியிலிருந்து மட்டும் இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர் என கரோல் கூறுகிறார். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே, முகநூல் விளம்பரங்களைப் பார்த்துத் தவறான பரப்புரைகளை உண்மை என்று நம்பி வாக்களித்தவர்கள்.

ஃபேஸ்புக்கைப் பொறுத்தமட்டில் அதைப் பயன்படுத்துவோரின் டைம்லைனில் காட்டப்படும் விளம்பரங்களுக்கான ஆவணக் காப்பகங்கள் இதுவும் தனிப்பட்ட வகையில் கிடையாது. அதாவது ஒருவருடைய டைம்லைனில் காட்டப்படும் விளம்பரங்கள் அவருக்குக் காட்டப்பட்டதாக உறுதி செய்யக்கூடிய வகையில் எந்தவித ஆவணங்களையும் அதைப் பார்த்தவரால் சேகரித்துத் தர இயலாது. அதேபோல் அவருடைய நியூஸ் ஃபீடில் என்ன காட்டப்பட வேண்டும் என்பதையும் ஃபேஸ்புக்கே தீர்மானிக்கிறது. இவ்வாறான பரப்புரைகள் தவறா, சரியா என்று உறுதி செய்யப்படாமல் விடப்படுவதால், அந்தச் செய்திகள் சரியானவை என்று பெரும்பாலான மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அதுவே உண்மையாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.

அச்சத்தைத் தூண்டும் சமூக வலைதளங்கள்

2016 அமெரிக்கத் தேர்தலிலிருந்து 2019 இந்திய மக்களவைத் தேர்தல் வரை உலகில் நடைபெற்ற பல தேர்தல்களிலும், ஃபேஸ்புக் மறைமுகமாக அதிக பங்காற்றியுள்ளது எனப் பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கூடி இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கைக் கேட்டபோது அவர் இதற்கான விளக்கத்தைத் தருவதற்குத் தயாராக இல்லை.

மக்களிடம் உள்ள வெறுப்பைப் பயன்படுத்துவதும், அவர்களின் பயத்தைத் தூண்டுவதும்தான் இந்த சமூக வலைதளங்கள் தேர்தல் சார்ந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளாக இருக்கின்றன. தேர்தலை ஒட்டி எடுக்கப்படும் சர்வேக்களில் அந்தந்த நாடுகளில் மக்கள் அதிகப்படியாக வெறுக்கும் கட்சிகளையும், ஆதரிக்கும் கட்சிகளையும் பற்றிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களின் மனப் போக்கினை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குள் இருக்கும் பயத்தைத் தூண்டிவிட்டு, ஒட்டுமொத்தமாக மக்களின் ஆதரவை ஒரு குறிப்பிட்ட கட்சியின்பால் திருப்புவதே இந்தச் சமூக வலைதளங்களின் மறைமுக வேலை.

இதை அறியாமலேயே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முகநூல் பக்கங்களில் தேர்தல் சார்ந்த பதிவுகளை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பதிவேற்றி, நமது தனிப்பட்ட கருத்துகளை அறிந்துகொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமூக வலைதளங்களுக்கு நாமாகவே முன்வந்து நமது கருத்துகளையும் அள்ளிக் கொடுத்துவிடுகிறோம். இவ்வாறு தரப்பட்ட டேட்டாவை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்கள் இன்னும் விரைவாகவும், சாதுரியமாகவும் செயல்பட்டு மக்களின் ஒட்டுமொத்த மனப்போக்கை மாற்றும் வேலையைச் செய்து முடிக்கின்றன.

வாக்களிக்கும் உரிமை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நம்மைச் சுற்றி இருப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆயிரம் விமர்சனங்களை எழுப்பும் நாம், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான விளம்பரங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் நம்பிவிடுவது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் சிறு புள்ளியில் தான் ஜனநாயகத்தின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

பிறரைத் துன்புறுத்தும் தளங்கள்!

.

.

மேலும் படிக்க

.

.

அமித் ஷா பேரம்... ஆடிப் போன ஸ்டாலின்

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ரிசல்ட் கவலை; ஆறுதல் சொன்ன மோடி

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

.

எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?

.

பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!

.

.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வியாழன் 23 மே 2019