மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 16 செப் 2019

மாய உலகில் நிகழும் நிஜக் கொலைகள்!

மாய உலகில் நிகழும் நிஜக் கொலைகள்!

கேபிள் சங்கர்

மாய மந்திரக் கதைகள் எப்போதும் சுவாரஸ்யமே. அதிலும் வில்லன் வலுவாய் உள்ள கதைகள் படுசுவாரஸ்யம். காலம் மாற மாற, இந்திய அளவில் மாய மந்திரக் கதைகள் வருவது குறைந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட கதைகள் திரைப்படங்களாகவும், சீரிஸாகவும் வந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, நம்மூரில் மட்டும் அதன் பக்கமே போக விரும்புவதில்லை. காரணம், இன்றைய இளைஞர்களுக்குப் படிக்கும் பழக்கம் என்பது மிக அரிதாகிவிட்டது. முக்கியமாய் தமிழில் படிக்கத் தெரிந்த இளையோர்களின் சதவிகிதம் மிகக் குறைவு என்றாகிவிட்டது. புனைகதைகள் எல்லாம் விஷுவல் மீடியமான கேம்களின் மூலமாய் மாறி இருக்க, காட் ஆப் வார் போன்ற ஆட்டங்களின் நாயகப் பின்னணி, அவனின் தேடல், ராஜ்ஜியம் என பல ஃபேன்டஸி கதைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் இளைஞர்களை உங்களால் கண்டுகொள்ள முடியும். அவெஞ்சர்ஸின் வரலாறு பற்றி உங்கள் வீட்டு எட்டு வயதுப் பையனுக்குத் தெரிந்த அளவுக்கு, இலக்கியம் படிக்கும் உங்களுக்குத் தெரியாது. மக்கள் விரும்பும் விஷயத்தை வைத்து சுவாரஸ்யமாய் குடும்ப எமோஷன் கெடாமல் கதை பண்ணுவதில் கொரியக்காரர்கள் சமர்த்தர்கள். அப்படியான ஒரு வெப் சீரிஸ் மெமரீஸ் ஆஃப் தி ஆலம்பரா (Memories of the Alambara).

வெர்சுவல் ரியாலிட்டியின் உச்சமாய் ஒரு கேமைப் பற்றிய இமெயிலைத் தொடர்ந்து அந்த கேமின் கிரியேட்டரான ஜங்கைச் சந்திக்க ஸ்பெயினுக்குக் கிளம்புகிறான் ஜே ஒன் எனும் நிறுவனத்தின் சிஈஓவான யூஜின். படு திராபையான விடுதியில் தங்க நேருகிறது. ஜங்கைக் காணவில்லை. யூஜின் விர்சுவல் ரியாலிட்டி கேமை ஆட ஆரம்பிக்கிறான்.

நம்மோடு நேரடியாக மோதும் பாத்திரங்கள்

கண்களில் லென்ஸை மாட்டிக்கொண்டு கண்மூடிக் கண் திறந்தால் கேம் லாக்-இன் ஆகி நிஜத்திலேயே எதிரிகள் படையெடுத்து வந்து தாக்குகிறார்கள். அதிலும் நிஜ லொக்கேஷனில். நாம் எங்கே இருக்கிறோமோ அங்கே அந்த இடத்திலேயே கேம் கேரக்டர்கள் நம்மைத் தாக்குகிறார்கள். வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஆட்டம் ஆடுகிறவர் லூசு போல தெரிந்தாலும், ஆட்டம் ஆடுகிறவரின் எமோஷன் நிஜம்.

இப்படியான நேரத்தில் யூஜிங் தொடர்ந்து ஆடி எட்டாவது லெவல் போக, அங்கே அவனுடய முன்னாள் நண்பனும் இந்நாள் எதிரியுமான ஒருவனைச் சந்திக்கிறான். அவன் எதிரியானதற்குக் காரணம் யூஜிங் விவாகரத்து செய்த பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதும், கம்பெனியை விட்டு விலகிப் போட்டிக் கம்பெனி ஆரம்பித்ததும்தான். அவனும் அதே கேமை வாங்க ஸ்பெயினுக்கு வந்திருக்க, ஒருகட்டத்தில் கேமில் யூஜினுக்கும் அவனுக்கும் சண்டை வருகிறது. இரண்டொரு முறை தோற்ற யூஜின் தகுந்த லெவல்களைத் தாண்டி ஆக்ரோஷ ஆட்டத்தில் நண்பனை கேமில் கொன்று ஜெயிக்கிறான். ஆம் கேமில்தான் கொல்கிறான்.

ஆனால், அடுத்த நாள் காலையில் எந்த காயமும் இல்லாமல் யூஜினின் நண்பன் அவர்கள் ஆட்டம் ஆடிய இடத்தில் இறந்து கிடக்கிறான். எப்படி என்று புரியாமல் இருக்க, யூஜின் லாக்-இன் ஆகாமலேயே ஆட்டோ லாக்-இன் ஆகிறது கேம். எப்போதெல்லாம் ஆட்டோ லாக்-இன் ஆகிறதோ அப்போதெல்லாம் செத்துப்போன நண்பன் யூஜினைக் கொல்ல வருகிறான்.

முதல் நாள் இரவு நண்பன் இவனுக்கு போன் செய்திருப்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எனவே போலீஸ் யூஜின்மீது சந்தேகம் கொள்கிறது. இதற்கிடையில் தொடர் ஆட்டோ லாக்-இன் பிரச்சினையால் யூஜின் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மனநிலை பிழன்றவனாய் அவனை நினைக்க வைக்கின்றன. இதனால் அவனுடய சிஈஓ வேலைக்கும் ஆப்பு.

கேமில் உள்ள பக்கைச் (Bug) சரி செய்ய வேண்டுமானால் கேம் கிரியேட்டரான ஜங்கைக் கண்டுபிடிக்க வேண்டும். அவனைக் காணவில்லை. ஒருவேளை அவனும் பக்கில் மாட்டிக்கொண்டிருந்தால் அவன் எந்த லெவலில் இருக்கிறானோ அந்த லெவலுக்குப் போனால்தான் காப்பாற்ற முடியும். யூஜிங், நாயகியின் தம்பியான ஜங்கைக் காப்பாற்றினானா? நண்பனை எப்படி வென்றான்?

இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே காதல், தொழில் துரோகம், முன்னாள் மனைவியின் மூலம் வரும் பிரச்சினை என சென்டிமென்ட் ஆட்டம் வேறு.

டெக்னிக்கலாகவும் சரி, கதையாகச் சொன்ன விதமும் சரி நம்மை முழுமையாக ஈடுபடுத்தக்கூடிய பொக்கே ‘மெமரீஸ் ஆஃப் தி ஆலம்பரா’. கொஞ்சம் பிசகினாலும், குழம்ப அடிக்கக்கூடிய கதைக் களனை. சீரிஸ் என்பதால் தெள்ளத் தெளிவாக, மெதுவாய் ஆட்டத்தின் லெவல்களில் நாமும் சேர்ந்து ஆடுவது போலவே எழுதியிருக்கிறார் சாங் ஜா ஜங்க்.

கொரிய டிவி சீரியல் ரேட்டிங்கில் மிக அதிகமான ரேட்டிங் பெற்றிருக்கும் இந்த சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

மிரட்டும் அமானுஷ்யக் கதைகள்!

.

.

.

மேலும் படிக்க

.

.

அமித் ஷா பேரம்... ஆடிப் போன ஸ்டாலின்

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் ரிசல்ட் கவலை; ஆறுதல் சொன்ன மோடி

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

.

எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?

.

பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!

.

.

வியாழன், 23 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon