மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!

டிஜிட்டல் திண்ணை:  ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“மக்களவைத் தேர்தல், 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வந்துவிட்டன. காலையில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலுள்ள தனது வீட்டில் இருந்தபடியே முடிவுகளை கவனித்துக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே வராமல் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி நிலவரங்களை கவனித்தபடியே இருந்தார் எடப்பாடி. நண்பகலில் மோடியின் வெற்றி உறுதியானதும் அவருக்கு வாழ்த்து செய்தியை வெளியிட்டார்.

இந்தியா முழுதும் வெற்றிப் பட்டாசு கொளுத்திய பாஜக தமிழகத்தில் வழக்கம்போல சொதப்பிவிட்ட நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசியிருக்கிறார். ‘என்ன தமிழ்நாட்ல மட்டும் இப்படி ஆயிடுச்சே?’ என்று கோயல் கேட்க, ‘எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்ல தன் ஆட்சியை தக்க வச்சிக்குறதுல காட்டின ஈடுபாட்டை பார்லிமெண்ட் எலக்‌ஷன்ல காட்டல. அதான் காரணம்’ என சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர். அதற்கு பியூஷ் கோயல், ‘தேர்தலின் போதே இதுபத்தி எனக்கு பாஜக வேட்பாளர்கள் புகார் செஞ்சு, நானே சிஎம்கிட்ட பேசினேன். ஆனா இப்படி கோட்டை விட்டுட்டீங்களே’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் கோயல். ஏனெனில் டெல்லியில் எல்லா மாநில பொறுப்பாளர்களும் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்க, தமிழகப் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தமிழகத்தில் பாஜகவுக்கென இருந்த ஒரு சீட்டும் போய்விட்டதால் வருத்தத்தில் இருக்கிறார்.

இதற்கிடையே காலை முதலே வீட்டிலிருந்தபடி தேர்தல் முடிவுகளை கவனித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் பெரு வெற்றி கொண்டிருந்த சந்தோஷத்தில் இருந்தாலும் மத்தியில் காங்கிரஸ் அணி படுதோல்வி அடைந்த நிலையில் கலவையான உணர்வில் இருந்திருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அது தொடர்பாக தீவிரமான ஆலோசனையில் இறங்கிவிட்டார் ஸ்டாலின். பிற்பகலுக்குப் பின் 22 தொகுதிகளில் திமுக 13 தொகுதிகளில் முன்னிலை வகித்துக்கொண்டிருந்தது.

குறிப்பாக சூலூர், பரமக்குடி, ஆண்டிபட்டி, சாத்தூர் போன்ற தொகுதிகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் சில ஆயிரங்கள், நூறுகள்தான் என்ற நிலைமை நீடித்துக்கொண்டிருக்க,வீட்டில் அமர்ந்து கணக்கு போட ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். 22 தொகுதி இடைத்தேர்தலில் 16 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுவிட்டால் அதிமுக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது ஸ்டாலின் கணக்கு. ஆனால் 13 தொகுதிகளே மாலை வரைக்கும் முன்னிலை இருந்ததால் வேறு வகைகளில் ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி என விவாதிக்க ஆரம்பித்தார்.

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தினகரன், ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது அதிமுக அரசுக்கு எதிராக இருக்கிறார்கள். இப்போது திமுக வெற்றிபெற்ற இடங்களையும் சேர்த்தால் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். இவர்களில் தினகரன் தவிர்த்த நான்கு பேருக்கும் மீண்டும் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவர்கள் எடப்பாடி அரசை எதிர்த்து வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதே இப்போதைய நிலைமை. இதுபோன்ற கணக்குகளை தயார் செய்தபடியே மாலை 6 மணிக்கு மேல் அறிவாலயம் வந்தார் ஸ்டாலின்.

அங்கே திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்த நிலையில் மீண்டும் அறிவாலயத்தில் அமர்ந்து எடப்பாடி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து மேலும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின். அடுத்தடுத்த நாட்களில் திமுக தரப்பில் இருந்து சில அதிரடிகள் அரங்கேற்றப்படலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

வியாழன், 23 மே 2019

அடுத்ததுchevronRight icon