மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?

எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?

மக்களவைத் தேர்தல், மினி சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள் நாளை (மே 23) வெளிவர இருக்கும் நிலையில் அதிமுகவுக்குள்ளே சலசலப்புகளும் எதிர்ப்புக் குரல்களும் வெடிப்பதற்குத் தயாராக இருக்கின்றன.

ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக அணிதிரளும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை செய்தி வெளியிட்டிருந்தோம். ஒருவேளை தேர்தலில் அதிமுகவின் செல்வாக்கு சரியும் பட்சத்தில் அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பல்வேறு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எதிர்ப்பு குரல் எழுப்ப அணியமாகி வருகிறார்கள் என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் அந்த குரலைத் தொடங்கி வைத்திருக்கிறார் என்றே சொல்கிறார்கள் கொங்கு வட்டார அதிமுகவில். இதுபற்றி கொங்கு அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“2011- 16 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016 பொதுத்தேர்தலில் அவர் பெருந்துறையில் வெற்றி பெற்றாலும் அவருக்கு அமைச்சர் வாய்ப்பு இல்லை. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் அமைச்சராக்கப்பட்டார். தான் மீண்டும் அமைச்சர் ஆக்கப்படாததற்குக் காரணம் அப்போது கொங்கு மண்டலத்தில் இருந்து சசிகலாவிடம் செல்வாக்காக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கருதினார் தோப்பு வெங்கடாசலம்.

இந்நிலையில் தினகரனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்தபோது சைலண்ட்டாக தினகரன் பக்கம் இருந்தார் தோப்பு வெங்கடாசலம். ஆனால் அதன்பின் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதில் அதிமுகவுக்கு திரும்பினார்.ஆனபோதும் சொந்த மாவட்டத்தில் அமைச்சர் கருப்பணன் ஆதரவாளர்கள் மூலம் முழுதாக ஓரங்கட்டப்பட்டு வந்தார் தோப்பு வெங்கடாசலம். மாவட்ட செயலாளர், அமைச்சர் என இரு பெரும் பொறுப்பில் கருப்பணன் இருப்பதால் தோப்பு வெங்கடாச்சலத்தின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஈரோடு மாவட்டத்தில் தட்டி வைக்கப்பட்டது.

இந்நிலையில்தான் நடப்பது நடக்கட்டும் என வார இதழுக்கு பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம் அதே சூட்டோடு சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் எடப்பாடியின் வீட்டிற்கே சென்று நேற்று முன் தினம் (மே 20) அவரை சந்தித்தார்.

’என்ன பத்தி உங்ககிட்ட தவறான தகவல்களை கருப்பணன் தரப்புல கொடுத்து வெச்சிருக்காங்க . இந்தத் தேர்தல்ல அதிமுகவுக்கு பிரச்சாரம் பண்ண போன நான் பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டேன். ஏன் நீங்க ஈரோட்டுக்கு பிரசாரத்துக்கு வந்த போது நான் வரவேற்க 500 பேரோடு காத்திருந்தேன். ஆனால் நீங்க வேறு வழியாக மாற்றி அழைத்துச் செல்லப்பட்டீங்க. ஆனா நான் கட்சிக்கு வேலை செய்யலைனு உங்ககிட்ட புகார் சொல்லியிருக்காங்க. இப்படிப்பட்ட கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவி இருந்தும் ஒண்ணுதான் இல்லாமலும் ஒண்ணுதான். அதை நீங்களே வச்சுக்குங்க’ என்று எடப்பாடியிடம் காரசாரமாகப் பேசியிருக்கிறார் தோப்பு வெங்கடாசலம். அவரை சமாதானப்படுத்த பல வகைகளில் முதல்வர் முயன்றும் முடியவில்லை.

தோப்பு தனிமரம் அல்ல அவருக்கும் பல ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தை போல பல மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் மூலம் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், ஏன் சில அமைச்சர்களே கூட உள்ளுக்குள் வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெடிப்பு தேர்தல் முடிவுக்குப் பிறகு வீரியம் பெறலாம்” என்கிறார்கள் கொங்கு வட்டார அதிமுகவில்.

இந்த நிலையில் இன்று மே 22ஆம் தேதி பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நான் திமுகவுக்கு செல்லவுள்ளதாக நேற்று தகவல் பரப்பப்பட்டது. அது தவறான தகவல். அதிமுக தலைமைக்கும் தொகுதி மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் எனக்கு உரிய மரியாதை அளிக்கிறார்கள்” என்று தெரிவித்தார். முதல்வரை சந்தித்தபோது அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே தோப்பு வெங்கடாசலம் இவ்வாறு கூறுகிறார் என்றும், தேர்தல் முடிவுகளை பொறுத்து அவரின் நிலைப்பாடும் மாறும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

.

.

மேலும் படிக்க

.

.

அமித் ஷா பேரம்... ஆடிப் போன ஸ்டாலின்

.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

தேர்தல் முடிவுகளுக்கு அப்பால்…

.

இடைத்தேர்தல் கணிப்பு: முந்துவது யார்?

.

.

புதன், 22 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon