மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

காங்கிரஸ் மீதான வழக்கு: வாபஸ் வாங்கும் அம்பானி

காங்கிரஸ் மீதான வழக்கு: வாபஸ் வாங்கும் அம்பானி

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது அனில் அம்பானி தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியப் பொதுத் துறை விமானத் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஆஃப் இந்தியா தயாரிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு புதிய ஒப்பந்தத்தில் இந்தியப் பொதுத் துறை விமானத் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஆஃப் இந்தியாவுக்குப் பதிலாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது. மோடி அரசுதான் ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தது என்றும், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு போர் விமானங்கள் தயாரிக்கும் அளவுக்குப் போதிய அனுபவம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நேசனல் ஹெரால்டு பத்திரிகை மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அனில் அம்பானியின் சார்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் ரூ.5,000 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.ஜே.தாமகுவாலா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து, தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக அனில் அம்பானியின் வழக்கறிஞர் ராகேஷ் பாரிக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அனில் அம்பானியை இணைத்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் சுனில் ஜாகர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஒமன் சாண்டி, அசோக் சவான், அபிஷேக் மனு சிங்வி, சஞ்சய் நிருபம், சாக்டின்ஹ் கோஹில் ஆகியோர் மீதும், நேசனல் ஹெரால்டு ஆசிரியர் ஜாஃபர் ஆகா, விஸ்வதீபக் உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கை திரும்பப் பெற அம்பானி முடிவெடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

வழக்கை திரும்பப் பெறுவதற்கான சட்டப்பூர்வ பணிகளை அனில் அம்பானி தரப்பு வழக்கறிஞர் மேற்கொண்டு வருவதாகவும், கோடைகால விடுமுறை முடிந்த பிறகு வழக்கு திரும்பப் பெறப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன. ரஃபேல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில், இந்த வழக்கு தேவையற்றது எனக் கருதியே, அம்பானி தரப்பு வழக்கை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், அனில் அம்பானி காங்கிரஸ் மீதான வழக்கை திரும்பப் பெற திட்டமிட்டிருப்பது அரசியல் ரீதியான கவனத்தை உண்டாக்கியுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

.

எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!

.

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

.

.

செவ்வாய், 21 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon