மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!

எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பல ஊடகங்கள் நடத்திய எக்சிட் போல் முடிவுகள் மே 19 ஆம் தேதி மாலை வெளிவந்தன. இந்த வாக்குக் கணிப்புகளில் இந்திய அளவில் முக்கியமான ஊடகங்கள் கூட பெருந்தவறுகளை இழைத்துள்ளன.

சமூக வலை தளங்களில் இது கேலியாகவும் கிண்டலாகவும் பகிரப்படுவதுடன் இப்படிப்பட்ட வாக்குக் கணிப்புகளை எப்படி நம்புவது என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

தந்தி டிவியின் சொதப்பல்

குறிப்பாக தமிழகத்தில் தந்தி டிவி வெளியிட்ட வாக்குக் கணிப்பில் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3% முதல் 6% வரை வாக்குகளைப் பெறும் என்று வெளியிட்டது. இதில் என்ன கொடுமை என்றால் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளரே போட்டியிடவில்லை.

மக்கள் நீதிமய்யம் கட்சி வெளியிட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு தங்கராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சி கமலுடன் கூட்டணி வைத்த நிலையில் அவர் காஞ்சிபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு பரிசீலனையின் போது தனித் தொகுதியில் வேட்பு மனு செய்பவர் தனது வேட்பு மனுவுடன் சாதிச் சான்றிதழ் இணைக்காததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரும் போட்டியிடவில்லை.

இந்த அடிப்படைத் தகவல் கூட அறியாமல்தான் தந்தி தொலைக்காட்சியில் மக்கள் நீதி மய்யம் 3 முதல் 6% வரை ஓட்டு வாங்கும் என்று கூறப்பட்டது.

டைம்ஸ் நவ் சறுக்கல்

இதேபோல டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி 2.9% வாக்குகளைப் பெறும் என்று குறிப்பிட்டுள்ளது. இதைப் பார்த்து ஆம் ஆத்மி கட்சியினர் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் சிரிக்கிறார்கள். ஏனெனில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை களமிறக்கவே இல்லை.

அடிப்படைத் தகவல்களே பிழையாக இருக்கும் இப்படிப்பட்ட நிலையில் இந்த ஊடகங்களின் ஒட்டுமொத்த எக்சிட் போல் முடிவுகளின் நம்பகத் தன்மை மீதும் கேள்விகள் வீசப்படுகின்றன.

.

.

மேலும் படிக்க

.

.

வளர்மதியிடம் சீறிய எடப்பாடி

.

.

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

.

சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!

.

.

செவ்வாய், 21 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon