மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?

மே 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் வெளியாகின. பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் என்றே எல்லா வாக்குக் கணிப்புகளும் கூறியுள்ளன. ஆனால், தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று எந்த வாக்குக் கணிப்பும் கூறவில்லை.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் என மொத்தம் 129 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை இடங்களை மாநிலக் கட்சிகள் பெறும் என்பதுதான் மே 19ஆம் தேதி வெளியான வாக்குக் கணிப்பு முடிவுகளின் சராசரியாக உள்ளது என்று என்டிடிவி ஊடகம் கூறியுள்ளது.

வாக்குக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையிலான சராசரியைக் கணக்கிட்டு தென்னிந்திய நிலவரம் குறித்து என்டிடிவி ஊடகம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ‘ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி ஆகிய கட்சிகள்தான் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்கும் மேலான இடங்களை வெல்லும். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 16 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 9 இடங்களையும் வெல்லும். தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி 12 தொகுதிகளையும், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளையும், பாஜக ஒரு தொகுதியையும் வெல்லும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மொத்தமுள்ள 38 தொகுதிகளில் 27 தொகுதிகளை வெல்லும். பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி 10 இடங்களிலும் வெல்லும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் பாஜக ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெல்லும் என்று 19ஆம் தேதி வெளியான எல்லா வாக்குக் கணிப்புகளும் கூறியுள்ளன. மேலும், என்டிடிவி வெளியிட்டுள்ள வாக்குக் கணிப்புகளின் சராசரி கணக்கீட்டின்படி, ‘கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி 13 தொகுதிகளிலும், ஆளும் இடதுசாரி தலைமையிலான முன்னணி ஐந்து தொகுதிகளிலும் வெல்லும். பாஜக முதன்முறையாக ஒரு தொகுதியை வெல்லும்’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே கேரளம், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு கிடைக்கும் என்பதே வாக்குக் கணிப்புகளின் முடிவாக உள்ளது.

ஆனால், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியான பாஜக, அம்மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 19 தொகுதிகளைக் கைப்பற்றும் என்பது வாக்குக் கணிப்புகளின் சராசரியாக உள்ளது. வாக்குக் கணிப்புகள் அனைத்தும் கர்நாடகாவில் 18 முதல் 25 தொகுதிகள் பாஜகவுக்குக் கிடைக்கும் என்று மதிப்பிட்டுள்ளன. எனவே கர்நாடகாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜகவுக்குப் பின்னடைவு கிடைக்கும் என்பதுதான் வாக்குக் கணிப்புகளின் முடிவாக உள்ளது.

.

.

மேலும் படிக்க

.

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

.

அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்

.

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?

.

தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!

.

செவ்வாய், 21 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon