மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

டிஜிட்டல் திண்ணை:   ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது.

“மக்களவைத் தேர்தலின் ஏழாவது- இறுதிகட்ட வாக்குப் பதிவு நேற்று (மே 19) மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் 6.30 மணியில் இருந்து எக்சிட் போல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. இந்தியாவின் பல்வேறு முன்னணி ஊடகங்கள் -ஆய்வு நிறுவனங்களின் கூட்டணியில் நடத்தப்பட்ட இந்த எக்சிட் போல் முடிவுகள் அத்தனையிலும் பாஜக தலைமையிலான தேஜகூவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்பட்டது.

சொல்லிவைத்தாற்போல் எல்லா மீடியாக்களும் ‘மோடியா’க்களாக மாறி மீண்டும் அவரே பிரதமர் என்று சொல்ல, மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு கண்டது. ஆனாலும் இந்த எக்சிட் போல் குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவோ பாஜக முக்கியப் புள்ளிகளோ கருத்து எதுவும் சொல்லவில்லை.

இதற்கு மிக முக்கியக் காரணம் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் என்று மீடியாக்கள் வாசித்துக் கொண்டிருந்தபோதிலும் அதற்கு பத்து தினங்களுக்கு முன்பே, மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரதமர் மோடிக்கு ஒரு பட்டியல் அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்த பிறகு மோடிக்கும் அமித் ஷாவுக்கும் மீடியாக்களின் எக்சிட் போல் பற்றிய எந்த பெருமிதமும் இல்லாமல் போய்விட்டது. மத்திய உளவுத் துறையை கைவசம் வைத்திருக்கும் உள்துறை அமைச்சகம் தேர்தல் நடந்த மொத்தம் 542 (வேலூர் தவிர்த்து) தொகுதிகளின் இறுதி நிலவரம் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு அளித்த பட்டியல் இதுதான்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 223, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 176 இந்த இரண்டு அணியிலும் இல்லாத மாநிலக் கட்சிகளுக்கு மொத்தம் 143 என்பதுதான் மோடியின் டேபிளில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருக்கும் ரிசல்ட்.

இப்படி ஒரு தகவல் கிடைத்ததும் அமித் ஷா, மோடி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்படி அந்த மற்ற கட்சிகள், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சில மாநிலக் கட்சிகளோடு இப்போதே பாஜக தரப்பில் இருந்து பேசத் தொடங்கிவிட்டனர். பாஜக பெரும்பான்மைக்கான எல்லையைத் தொட வேண்டும் என்றாலே இன்னும் முழுதாக 50 இடங்கள் தேவை என்பதை உணர்ந்த அமித் ஷா அந்த நம்பரை தேர்தலுக்குப் பிறகான கூட்டணி அமைப்பதன் மூலம் திரட்டும் வேலையில் இப்போதே இறங்கிவிட்டார்.

அந்த வகையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் தரப்போடு டெல்லியில் இருந்து முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். ஆனால் ஸ்டாலினிடமிருந்து எந்த பாசிடிவ் அப்ரோச்சும் இல்லை. சிலமுறை முயன்றபின் டெல்லி விவகாரங்களில் யார் சொன்னால் ஸ்டாலின் கேட்பார் என்று ஆலோசித்து திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு நெருக்கமான பாஜக எம்.பி.ஒருவர் பேசியிருக்கிறார்.

‘எக்சிட் போல் எல்லாம் உண்மையில்லைனு உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் திமுகதான் அதிக இடங்களில் ஜெயிக்கும் என்பது உறுதியாகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க திமுக உதவ வேண்டும். ஆட்சியில் பங்கேற்பதற்கு சிக்கல் இருந்தால் வெளியில் இருந்தாவது ஆதரிக்க வேண்டும்’ என்றெல்லாம் அந்த டெல்லி பிரமுகர் பேசிக் கொண்டே இருந்தார். திமுக புள்ளியோ, ‘இருங்க இருங்க அப்படிப்பட்ட ஆப்ஷன்ஸ் எதுவுமே இதுவரைக்கும் எங்களுக்கு இல்லை. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல எலக்‌ஷன் ரிசல்ட் வந்துடப் போகுது. அதுக்குப் பிறகுதான் என்ன நிலைமை என்றே தெரியும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

விடாத அந்த டெல்லிப் பிரமுகர், ‘தேவைப்பட்டால் உங்களோடு பாஜக தலைவர் அமித் ஷாவே போனில் பேசத் தயாராக இருக்கிறார். உங்க தலைவர்கிட்ட நீங்கள் பேசுங்கள். அப்படி திமுக இந்த ஆபரேஷனுக்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைவதற்கான சூழலையும் நாங்கள் உருவாக்கித் தர தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாமல், ‘வெயிட் ஃபார் மோர் த்ரீ டேஸ்’ என்று மட்டுமே சொல்லி போனை வைத்திருக்கிறார் அந்த திமுக பிரமுகர். டெல்லியில் இருந்து வந்த போன் விவரங்கள் பற்றி ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று முடிந்தது அந்த வாட்ஸ் அப் மெசேஜ்.

அதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது தகவலை பதிவிட்டது.

“எக்சிட் போல் முடிவுகள் வந்ததும் இதுபற்றி கலைஞரின் செயலாளர்களாக இருந்த ராஜமாணிக்கம், சண்முகநாதன் ஆகிய இருவரிடமும் நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர்கள் கலைஞர் காலத்திலேயே இப்படியெல்லாம் நிறைய எக்சிட் போல்கள் வந்து தோற்றுப் போயிருக்கிறது என்று பல்வேறு கணக்குகளையும் தரவுகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். மேலும், வாக்குப் பதிவு தினத்தன்று முதலில் ஓட்டு போட வரும் 5 நபர்களை மட்டுமே சந்தித்து இந்த எக்சிட் போல் எடுத்திருக்கிறார்கள். சில பேர் வரிசையில் ஒவ்வொரு மூன்றாவது நபரிடம் என்று ஒரே ஒரு எம்பி தொகுதியில் சில பூத்துகளில் மட்டும் கேட்டு அதை பொதுவான கணக்காகக் காட்ட முயல்கிறார்கள். எனவே அதெல்லாம் பலிக்காது என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஸ்டாலின் இதுபற்றி தெளிவாகவே மறுத்துள்ளார்” என்ற தகவலை போஸ்ட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது.

.

.

மேலும் படிக்க

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?

.

தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!

.

அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?

.

ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!

.

.

.

திங்கள், 20 மே 2019

அடுத்ததுchevronRight icon