மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 மே 2019

திரை தரிசனம்: அவ் ஹசர்ட் பேல்தஸார்!

திரை தரிசனம்: அவ் ஹசர்ட் பேல்தஸார்!

உங்களால் அழகு, புனிதம், உற்பத்தி போன்ற கற்பிதங்களுக்கும் தேவைகளுக்கும் அப்பாற்பட்டு ஒரு ஜீவனை வளர்ப்புப் பிராணியாக வைத்து அன்பு செய்ய முடியுமா? அப்படி அன்பு கிடைக்காமல் போகும்போது அந்த ஜீவனின் நிலை என்னவாகயிருக்கும்? பேல்தஸார் என்ற கழுதை அப்படிப்பட்ட சீரற்ற நிலையில் வாழும் வாழ்வைத்தான் இந்த வாரத் திரை தரிசனத்தில் பார்க்கப்போகிறோம்.

டைட்டிலில் ஷூபர்ட்டின் சொனாட்டா இசைந்துகொண்டிருக்க, இடையில் ஒரு கழுதையின் கணைக்கும் குரலைக் கேட்கிறோம். திரை தொடங்குகிறது.

மலைப் பகுதியில் தாய் மடியில் பால் குடித்துக்கொண்டிருக்கும் ஒரு குட்டிக் கழுதையைப் பார்க்கும் மூன்று பிள்ளைகள் அதை வாங்கி வருகின்றனர். அதற்கு ஞானஸ்நானம் செய்கின்றனர். மேரி எனும் சிறுமி அதற்கு பேல்தஸார் எனப் பெயரிடுகிறாள். மேரியுடன் விளையாடும் சிறுவனின் தாய் இறந்து போக, அவன் தந்தை அவனை வெளியூருக்கு அழைத்துச் செல்கிறார். புறப்படுவதற்கு முன் நாம் வளர்ந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறான். அவனது தந்தையும் மேரியின் தந்தையும் நண்பர்கள் என்பதால் அவர்களிடமே தங்களது தோட்டத்தை ஒப்படைத்துவிட்டு செல்கின்றனர். விளையாட துணையற்ற மேரி பேல்தஸார் மீது நேசமாகயிருக்கிறாள், அரவணைக்கிறாள், அதற்கு காட்டு மலர்களைச் சூடுகிறாள். நாட்கள் செல்கின்றன. அனைவரும் வளர்கிறார்கள்.

தோட்டத்தை மேரியின் தந்தை அபகரிக்க பார்க்கிறார் என அண்டை வீட்டார் அதன் உரிமையாளரிடம் சொல்கிறார்கள். அதை நம்பி அவர் வழக்கு தொடர கொதிப்படையும் மேரியின் தந்தை தனது நேர்மையை நிரூபிக்க முடியாதென அங்கிருந்து மேரி மற்றும் பேல்தஸாருடன் வெளியேறுகிறார். நெருக்கடியால் பேல்தஸாரை விற்க, அதன் பின் பேல்தஸார் ஒவ்வொரு உரிமையாளர்களிடமும் கை மாறுகிறது. பெரும்பாலும் அதன் உரிமையாளர்களால் குரூரமாகவே நடத்தப்படுகிறது. வேலைப்பளு அதிகமானால் களைத்துவிடும், இளைஞர்கள் அதன் வாலில் நெருப்பு வைக்கும்போது பயந்து ஓடும், பொதி சுமக்கும், சமயத்தில் அதன் குடிகார உரிமையாளர்களைக் கூட அழைத்துச் செல்லும். எதற்கும் விருப்போ வெறுப்போ காட்டத் தெரியாது. பேல்தஸாருக்குத் தெரிந்த ஒரே உணர்ச்சி வெளிப்பாடு என்றால் கனைப்பது மட்டுமே. ஆனால், அதுகூட மனிதர்களின் காதுகளுக்கு உவப்பாய் இருக்காது.

பேல்தஸார் போலவே மேரியின் வாழ்வும் அமைந்துவிட்டது. சிறு வயதுத் தோழன் மேரியைத் தேடி வர, அவனை மறுக்கிறாள். ஆனால் தீயவன் எனத் தெரிந்தும் வசீகரிக்கும் இளைஞன் ஒருவனின் மீது மையல் கொள்கிறாள். அவள் நேசித்த அந்த இளைஞனும் அவளை தவறாக நடத்த, அவளும் பேல்தஸார் போல ஒவ்வோர் இடமாக செல்கிறாள். பேல்தஸாரை வளர்க்கும் அதன் உரிமையாளர்களும் அந்தக் கிராமமும் மிக பலவீனமாகவே இருக்கின்றன. குறிப்பாக மேரி, எந்த எதிர்ப்பையும் காட்டத் தெரியாத பெண்ணாகவே இருக்க, ஆண்களின் வன்முறைக்கு பேல்தஸாரும் மேரியும் அந்தக் கிராமத்தில் நேரடி பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கடைசியாக பேல்தஸாரை இளைஞர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்த, எல்லையைக் கடந்து செல்கையில் அது சுடப்படுகிறது. தான் பிறந்த இடமான மலைப்பகுதியிலேயே பேல்தஸார் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் பகுதியில் வீழ்கிறது. ஆடுகள் அதைச் சுற்றி வட்டமிடுகின்றன. ஷூபர்ட்டின் சொனாட்டா மீண்டும் ஒலிக்கிறது, கூடவே ஆடுகளின் கழுத்து மணி சப்தமும். ஆடுகள் கலைந்து செல்கின்றன. இசை அடங்கி நிசப்தமாகிறது. பேல்தஸார் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடக்கிறது.

1966ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘அவ் ஹசார்ட் பேல்தஸார்’ (Au Hasard Balthazar) படத்தில் இன்னமும் பேல்தஸார் தாய் மடியில் பால்குடித்து, துன்புற்று, மரணத்தைத் தழுவிக் கொண்டேயிருக்கிறது, மனிதனைப் போல. சினிமாவின் துறவியாகக் கருதப்படும் பிரஞ்சு இயக்குநர் ராபர்ட் பிரஸ்ஸான் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘தி இடியட்’ என்ற நாவலின் ஒரு சிறு பகுதியின் தாக்கத்தில் உருவாகியது. மேலும் பைபிள் மற்றும் அதன் கதாபாத்திரங்களின் தாக்கமும் இப்படத்துக்கு உதவியுள்ளது. ஜான் அப்ரஹாமின் ‘அக்ரஹாரத்தின் கழுதை’ படத்துக்கு உத்வேகமாக அமைந்ததும் பேல்தஸாரே.

முழுக்க தொழில்முறை அல்லாத நடிகர்களை இந்தப் படத்தில் பிரஸ்ஸான் பயன்படுத்தியிருப்பார். நவீன கதை சொல்லும் முறையில் ஆசானாகக் கருதப்படும் பிரஸ்ஸான், கழுதையின் மூலம் மனித வாழ்வின் அவலங்களை இந்தப் படத்தில் கேள்விக்குள்ளாக்கியிருப்பார். வலிந்து திணிக்கப்படாத உணர்ச்சிகளாலும், மினிமலிஸ்டிக் முறையினாலும் கட்டமைக்கப்பட்ட இந்தப் படத்தின் திரைமொழி முற்றிலும் புதிய அனுபவத்தைப் பார்வையாளருக்கு அளிக்கும்.

கருணையற்ற மனிதர்கள் சூழ்ந்த பேல்தஸார் உலகில், அனைத்தையும் (நன்மை, தீமை) உன்னதமாக ஏற்றுக்கொண்டு அதன் குணாதிசயங்களோடு வாழும் அதன் வாழ்வுதான் பெரும்கருணையை நமக்குள் ஏற்படுத்துகிறது. முற்றிலும் புதியதொரு ஆன்மிக அனுபவத்தை ஏற்படுத்தும் இந்தப் படம், பிடித்த நகரத்துக்கு மீண்டும் மீண்டும் செல்வதைப் போல மறுபார்வைக்கு நம்மை அழைத்துக்கொண்டேயிருக்கும்.

- முகேஷ் சுப்ரமணியன்

துவிதா: பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணின் கதை!

பேலட் ஆப் நரயாமா

.

.

மேலும் படிக்க

.

.

அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?

.

ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!

.

.

வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?

.

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

.

டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!

.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 20 மே 2019