மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்

அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம், தான் வகித்துவந்த அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியிலிருந்து இன்று (மே 20) திடீரென விலகியுள்ளார். அமைச்சர் கே.சி.கருப்பணன் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இம்முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்பு ஊடகங்களிடம் பேட்டியளித்த தோப்பு வெங்கடாசலம், “மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கருப்பணன் அதிமுகவுக்கு வாக்கு கேட்காமல் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக உள்ளடி வேலை செய்து வருகிறார்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் கருப்பணன் மறுத்திருந்தார். இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள தோப்பு வெங்கடாசலம், கட்சியிலிருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பவர்புல்லாக வலம் வந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான புதிய அமைச்சரவைப் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. அவர் வகித்துவந்த சுற்றுச்சூழல் துறை மற்றும் ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பு கே.சி.கருப்பணனுக்கு வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே இருவருக்கும் முட்டல் மோதல்கள் இருந்துவருகிறது.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வந்தநிலையில், தோப்பு வெங்கடாசலம் தினகரன் ஆதரவாளராக இருந்தார். அதன் பிறகு முதல்வர் எடப்பாடி தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றார். அவருக்கு அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலத்தின் இந்த நிலைப்பாடு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி வெளியானதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரை தோப்பு வெங்கடாசலம் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுகிறேன். அதற்கான கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளேன். இதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அதிமுகவின் அடிப்படை தொண்டனாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

.

.

மேலும் படிக்க

.

சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?

.

வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?

.

தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!

.

அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?

.

ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!

.

.

.

திங்கள், 20 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon