மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?

வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்:  தேர்தல் வரலாறு சொல்வது என்ன?

வாக்குக் கணிப்புகள் எனப்படும் எக்சிட் போல் கடந்த சில தேர்தல்களாக ஊடகங்களால் பரபரப்பாக பேசப்படுகின்றன.

கருத்துக் கணிப்பு என்பது யாருக்கு ஓட்டுப் போடும் முடிவில் இருக்கிறார்கள் என்பது பற்றிய மக்களின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையானது. ஆனால் வாக்குக் கணிப்பு என்பது யாருக்கு ஓட்டளித்தோம் என்று மக்களே சொல்வதன் அடிப்படையில் கணிக்கப்படுவது.

எனவே வாக்குக் கணிப்புகளின் துல்லியத் தன்மையை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. கணக்கெடுக்கும் நிறுவனங்களின் மாதிரி அளவு கணக்கீடுகளின் வேறுபாடு, பல்வேறு மாநிலங்களின் மக்கள் பிர்ச்சினைகள், மக்கள் திறந்த மனதோடு பதிலளிக்கிறார்களா என்ற கேள்வி இப்படி பல காரணிகள் வாக்குக் கணிப்புகளின் துல்லியத்தை முடிவு செய்கின்றன.

மக்கள் கொத்துக் கொத்தாக சாரை சாரையாக திரண்டு சென்று வாக்களித்தார்கள் என்றால் அது ஆதரவு அலையா, அல்லது எதிர்ப்பு அலையா என்றும் காற்று யார் பக்கம் வீசுகிறது என்றும் எளிதில் கணிக்க முடிகிற விஷயமாக இருக்கும். ஆனால் அளவான, சராசரியான வாக்குப் பதிவு நடந்திருப்பது இந்தத் தேர்தலில் கணிப்பாளர்களுக்கு சவாலான விஷயமாக மாறியுள்ளது.

அதுவும் குறிப்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியே சொல்வது தவறு என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில் எக்சிட் போல் எனப்படும் வாக்குக் கணிப்பு முடிவுகள் சில சமயங்களில் சரியாகவோ, சில சமயங்களில் தவறாகவோ முடியும்.

கடந்த சில தேர்தல்களை முன் வைத்து நடந்த வாக்குக் கணிப்புகளின் முடிவுகளை உதாரணங்களாகப் பார்ப்போம்.

2004 வாக்குக் கணிப்புகள்

1999 முதல் 2004 வரை ஐந்தாண்டு காலம் பிரதமர் பதவியில் இருந்த வாஜ்பாயை முன்னிறுத்தி மீண்டும் தேர்தலை சந்தித்தது பாஜக. இந்தியா ஒளிர்கிறது, நிலையான ஆட்சி- திறமையான பிரதமர் என்ற வாசகத்தையும், கார்கில் போரையும் முன் வைத்து தேர்தலைச் சந்தித்தது பாஜக.

இந்தத் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட வாக்குக் கணிப்புகளில் பெரும்பாலான கணிப்புகள் வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆவார் என்றே தெரிவித்தன.

என்டிடிவி- ஏசி நெய்ல்சன் நிறுவனம் நடத்திய வாக்குக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 250 இடங்கள் வரை பெறும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 205 இடங்கள் வரையே பெறும் என்றும் கணித்தது. மற்ற கட்சிகள் 100 முதல் 120 இடங்கள் பெறலாம் என்றது அந்த வாக்குக் கணிப்பு.

ஸ்டார் நியூஸ்- சிவோட்டர்ஸ் நிறுவனங்களின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மீண்டும் வாஜ்பாயே பிரதமர் என்று கூறின. அதன்படி தேஜகூ 263-275 இடங்கள் பிடிக்கும் என்றும், ஐமுகூ 174-186 இடங்களே பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகள் 98 இடங்கள் வரை பிடிக்கலாம் என்றும் வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியிட்டன.

ஆஜ்தக் வாக்குக் கணிப்பும் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கும் என்று கூறியது.

ஆனால் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளுக்கு பெரும் முரண்பாடாக அமைந்தது தேர்தல் முடிவு.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 208 இடங்கள் பிடித்தது, ஆளுங்கட்சியாக இருந்த தேஜகூ 181 இடங்களே பெற்று தோற்றது. இடது சாரிகள் 59 இடங்கள் பெற்றனர். கூட்டணி அரசில் காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.

2004 தேர்தலில் வாக்குக் கணிப்புகள் வாக்காளர்களின் முடிவுகளுக்கு முன் தோற்றன.

2009 வாக்குக் கணிப்புகள்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை முன் வைத்து 2009 ஆம் ஆண்டு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலுக்குப் பின் வெளியான வாக்குக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே இழையளவில்தான் வேறுபாடு இருக்கும் என்று தெரிவித்தன.

சிஎன்என் ஐபிஎன் நடத்திய வாக்குக் கணிப்பு முடிவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 205 இடங்கள் வரையிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 185 இடங்கள் வரையிலும், மூன்றாவது அணி 130 இடங்கள் வரையிலும் பெறும் என்றும் வெளியிட்டது.

ஸ்டார் டிவி-நெய்ல்சன் வாக்குக் கணிப்பில் ஐமுகூ 199 தேஜகூ 196 மூன்றாவது அணி 100 என முடிவுகள் தந்தது.

இதேபோலவே சிவோட்டர்ஸ் ஐமுகூ 201 தேஜகூ 195 மூன்றாவது அணி 121 வரை பெறும் என்று எக்சிட் போல் வெளியிட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகள் இதற்கு மாறாகவே இருந்தன. 2009 தேர்தலில் காங்கிரஸ் 206 இடங்களைப் பெற்று ஐமுகூ 262 இடங்களைப் பிடித்தது.

பாஜக 116 இடங்களைப் பிடித்து தேஜகூ 159 இடங்களைப் பெற்றது. மூன்றாவது அணி 79 இடங்களைப் பிடித்தது. வாக்குக் கணிப்பு முடிவுகளுக்கு மாறாக மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக பிரதமரானார்.

2014 வாக்குக் கணிப்புகள்

மன்மோகன் சிங்கின் தொடர் 10 ஆண்டு கால ஆட்சியில் நடந்த ஊழல்களும், வறுமை தொடர்பாக ஆட்சியாளர்கள் பேசிய வசனங்களும் மக்களிடையே கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. கூடவே தொடர்ந்து குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தி பிரச்சாரங்களில் பல புதுமைகளைச் செய்தது பாஜக. ஆனால் காங்கிரஸ் ஆளுமைகளை அடையாளப்படுத்த முடியாமல் திணறியது.

இந்தத் தேர்தலில் மக்களின் காங்கிரஸ் மீதான அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்ததால் எக்சிட் போல் கணக்கு கச்சிதமாக பலித்தது.

2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி சிஎன்என்- ஐபிஎன்-சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி நடத்திய வாக்குக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 276, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 97, மற்ற கட்சிகள் 148 என்று தெரிவிக்கப்பட்டது.

டைம்ஸ் நவ் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் தேஜகூ-249, ஐமுகூ -148 மற்றவை 146 என்று கணக்கிடப்பட்டது.

நியூஸ் 23- சாணக்யா நிறுவனம் வெளியிட்ட வாக்குக் கணிப்பில் தேஜக கூ மிக அதிகமாக 340 இடங்கள் பிடிக்கும் என்று, காங்கிரஸ் கூட்டணி கடுமையான சரிவைச் சந்தித்து 70 இடங்களையே பிடிக்கும் என்றும் மற்றவர்கள் 133 இடங்கள் பிடிப்பார்கள் என்றும் தெரிவித்தது.

ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலை அப்போது எளிதாக உணரமுடியும் வகையில் இருந்ததால் வாக்குக் கணிப்புகள் பெரும்பாலும் நிஜமாயின.

2014 தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 66 இடங்களையும், மற்றவர்கள் 147 இடங்களையும் பெற்றனர். மோடி பிரதமர் ஆனார்.

வாக்குக் கணிப்புகள் இவ்வாறு 2004,2009 தேர்தல்களில் தோற்றிருக்கின்றன. 2014 தேர்தலில் ஜெயித்திருக்கின்றன. 2019 தேர்தலில் என்ன ஆகும் என்பதை இன்னும் மூன்றே தினங்களில் அறிந்துகொள்ளலாம்.

.

.

மேலும் படிக்க

.

.

அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?

.

ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!

.

.

வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?

.

ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்

.

டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!

.

.

திங்கள், 20 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon