மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 13 டிச 2019

டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!

டிஜிட்டல் திண்ணை:  சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. லொக்கேஷன் ஆந்திரத் தலைநகர் அமராவதி என்று காட்டியது. கொஞ்ச நேரத்தில் மெசேஜ் வந்தது.

“திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த மே 14ஆம் தேதியன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதியில் உள்ள முதல்வர் இல்லத்தில் சென்று சந்தித்த நிகழ்வு, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே மட்டுமல்ல, திமுகவிலும் கூட பலமாக எதிரொலித்திருக்கிறது.

மே 13 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் சென்னையில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்டாலினுடன் துரைமுருகன், டி ஆர் பாலு ஆகியோரும் இருந்தனர். ஏற்கனவே சில முறை ஸ்டாலினை கேசிஆர் சந்திக்க முயன்று முடியாமல் போன நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் குடும்பத்தினருடன் கே.சி.ஆர். நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர் என்பதால், அவர் ஸ்டாலினை சந்தித்ததில் பாஜக சார்பான அரசியல் இருக்குமோ என்றும் விவாதம் கிளம்பியது. ஆனால் ஸ்டாலின் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விளக்கம் கொடுத்த பின்னரும் யூகங்கள் அடங்கவில்லை.

இந்த நிலையில் கேசிஆர் ஸ்டாலின் சந்திப்புக்கு அடுத்த நாள் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்த புகைப்படங்கள் வெளியாக ஸ்டாலினுக்கே அதிர்ச்சியாக இருந்தது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துகளை கூறிவரும் நிலையில் அந்த விவாதத்துக்கு மேலும் எரிபொருள் ஊற்றியது துரைமுருகன் -சந்திரபாபு நாயுடு சந்திப்பு.

இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்று உடனடியாக துரைமுருகன் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தாலும், ஸ்டாலினுக்கு துரைமுருகன் மீது மிகுந்த வருத்தம். ஏற்கனவே வேலூர் ரெய்டு முதல் ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையே ஒரு முறுகல் போக்கு நிலவிவருகிறது. அதுபற்றி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தனக்குத் தெரியாமல் இன்னொரு மாநில முதல்வரை, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத ஒரு கட்சியின் தலைவரை துரைமுருகன் சந்தித்தது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை.

உடனடியாக ஸ்டாலினின் வீட்டில் இருந்து இருந்து துரைமுருகனுக்கு போன் போட்டிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து தொடர்புகொண்டபோதுதான் சிரித்த துரைமுருகன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நேர்ந்த சூழலை விளக்கியிருக்கிறார்

துரைமுருகனும் ஜெகத்ரட்சகன் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் மட்டுமல்ல தீவிர ஆன்மீக பற்றாளர்கள். தனது கல்லூரியை ஆந்திராவில் துவக்க ஏற்பாடுகள் செய்து வரும் ஜெகத்ரட்சகன் அது தொடர்பாக ஆந்திர முதல்வரின் சந்திப்புக்கு நேரம் கேட்டிருந்தார். அதன்படி 14 ஆம் தேதி காலை 11.30க்கு ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் தன்னை சந்திக்க நேரம் கொடுத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. இதன் அடிப்படையில் ஆந்திரப் பயணத்துக்கு திட்டம் தீட்டிய ஜெகத்ரட்சகன் தனது நண்பரான துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு அப்படியே சில கோயில்களுக்கும் செல்ல திட்டமிட்டார்.

ஏற்கனவே கோட்டூர்புரம் வீட்டில் தங்காமல் சில நாட்கள் ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலில் சில நாட்கள் தங்கியிருந்த துரைமுருகனுக்கு இது ஒரு ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்று கருதிதான் பயணத் திட்டம் வகுத்திருக்கிறார்ஜெகத்ரட்சகன். ஆனால் கடைசி நேரத்தில் சந்திரபாபு நாயுடு கொடுத்த அப்பாயின்ட்மென்ட்டை காலை 11.30 மணியிலிருந்து மதியம் 2.30 ஆக மாற்றிவிட்டார். இது ஜெகத்ரட்சகனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அன்று மாலை சென்னையில் ஏற்கனவே முக்கியமான சந்திப்பு இருந்ததால் ஆந்திர பயணத்தை ரத்து செய்துவிட்டார் ஜெகத்ரட்சகன். அவருடைய நண்பர்களும் செல்லவில்லை. எனவே துரைமுருகன் குடும்பத்தினர் மட்டும் ஆந்திரா சென்றிருக்கிறார்கள்.

விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவில் உட்பட சில கோயில்களில் வழிபாடு நடத்த வருவதாக ஜெகத்ரட்சகன் தனது நண்பரும் விஜயவாடா தெலுங்குதேச எம்.பி.யுமான கேசினேனி சீனிவாஸிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சீனிவாஸ் தனது தம்பி ரமேஷை இதற்கான பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். ஜெகத்ரட்சகன் செல்லவில்லை என்றாலும் துரைமுருகன் குடும்பத்தினரை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுத்திருக்கிறார் ரமேஷ். அந்த நிலையில்தான் ஜெகத்ரட்சகனுக்கு சந்திரபாபு நாயுடு கொடுத்திருந்த அப்பாயின்ட்மென்ட் பற்றி பேச்சு வந்த நிலையில், ‘நாங்க இப்ப முதல்வரை பாக்க போயிட்டிருக்கோம். நீங்களும் வாங்களேன். ஒரு கர்டஸி விசிட்டா இருக்கட்டும்’ என்று துரைமுருகனை அழைத்திருக்கிறார் எம்.பி. சீனிவாஸ்.

வேலூரை அடுத்த குப்பம் தொகுதிதான் ஆந்திர முதல்வரின் தொகுதி. அந்த வகையிலும் ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில் ஆந்திர அரசுடன் பேசிய வகையிலும் சந்திரபாபு நாயுடு துரைமுருகனுக்கு நன்கு அறிமுகமானவர்தான். அந்த அடிப்படையில் துரைமுருகனும் ஏற்றுக் கொண்டு அவர்களோடு சென்றார். தனது மனைவி,மகனுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் ஸ்டாலின் வீட்டில் இருந்து பேசியவர்களிடம் விளக்கிய துரைமுருகன், ‘நாயுடு என் ஃபிரண்டுதான். திடீர்னு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சு பாத்ததுதான். வேற ஒண்ணுமில்லை’ என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் ஸ்டாலினுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரும் கேட்டுக் கொண்டு, ‘திடீர் சந்திப்புனு இவர் சொல்றாரு. திட்டம் போட்டு நான் தான் அனுப்பிவச்சேன்னு வெளியே சொல்லுறாங்க என்று சலித்துக் கொண்டாராம் ஸ்டாலின்’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

இதை அப்படியே காப்பி செய்து தனது சுவரிலும் பேஸ்ட் செய்த ஃபேஸ்புக் இன்னொரு தகவலை பதிவிட்டது.

“இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபடியே தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் அமைச்சர் வேலுமணியிடம் பேசியபோது, தொகுதி நிலவரம் பற்றி கலந்து ஆலோசித்திருக்கிறார். இதுபோல் நான்கு தொகுதி பொறுப்பாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது முதல்வரிடமிருந்து சில முக்கிய உத்தரவுகள் வந்திருப்பதாக அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. இதுவரை அமமுகவினர் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அதைவிட அதிகமாய் அதிமுக கொடுக்க வேண்டும் என்பதுதான் அமைச்சர்களுக்கு வந்திருக்கும் உத்தரவு. ஏற்கனவே அதிமுக தரப்பில் பணம் கொடுத்து முடித்துவிட்ட நிலையில், இந்த உத்தரவை அடுத்து அமமுகவின் டெலிவரி எவ்வளவு என்று விசாரித்து அதை மிஞ்சும் வகையில் இரண்டாவது ரவுண்டு தொகையை அதிமுக வழங்கத் தொடங்கியிருக்கிறது” என்ற தகவலைப் பதிவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

அடுத்ததுchevronRight icon