மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 13 டிச 2019

கமல் கைதா? கோர்ட்டில் நடந்த விவாதம்!

கமல் கைதா? கோர்ட்டில் நடந்த விவாதம்!

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பேசிய பேச்சு, அரசியல் ரீதியாக இந்தியா முழுதும் எதிரொலித்து வரும் நிலையில், கமலின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 76 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மே 14ஆம் தேதி இந்து முன்னணி அளித்த புகாரின் அடிப்படையில் கமல் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கமல் நேற்று முறையீடு செய்தார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கமல் தரப்பில் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அந்த மனுவை விசாரிக்க முடியாது எனவும், முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து நேற்று பிற்பகல் கமல் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதி புகழேந்தி முன்பு இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது புகார் அளித்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூடுதல் மனுவை தாக்கல் செய்தனர்.

கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார். அவர் கூறுகையில், “சம்பவம் நடந்தது ஏப்ரல் 12ஆம் தேதி. ஆனால் அதற்கு 2 நாட்களுக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை விசாரணை கூட இல்லாமல் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காந்தி படுகொலைக்குப் பிறகு நாதுராம் கோட்சே எழுதிய நான் ஏன் காந்தியைக் கொலை செய்தேன்? என்ற புத்தகத்தில் அவரே காரணங்களைத் தெளிவாகக் கூறியுள்ளார். அந்தக் கருத்தைதான் கமல்ஹாசன் பிரச்சரத்தில் தெரிவித்தார்” என்றார்.

அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில், “அரவக்குறிச்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பள்ளப்பட்டியில் பிரச்சாரம் செய்தபோது, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்கைப் பெறும் நோக்கில் கமல்ஹாசன் அவ்வாறு பேசியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். தமிழகம் முழுவதும் இவரது பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜீயர் கூட இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இவருக்கு முன் ஜாமீன் அளித்தால், இவருடைய தொண்டர்களும் இதை முன்மாதிரியாக வைத்து பேச ஆரம்பித்து விடுவார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே; அவர் ஒரு இந்து என்று கூறியிருக்கலாம். ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று சொல்லியிருப்பது தவறானது. உள்நோக்கத்துடன் இந்தக் கருத்தைக் கமல் கூறியுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது” என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டிய கோரிக்கைகள் யாவும் இப்போது நீதி மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும், இந்த வழக்கு ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில் இவ்வளவு அவசரமாக முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் கோட்சேவுக்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லையா எனவும் நீதிபதி கேட்டார். அதற்குப் பதிலளித்த கமல் தரப்பு வழக்கறிஞர், “கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில், இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை; அவர் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது. கமலை போலீஸ் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்து ஜூன் 1 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக கமல் வருவதாக சொல்லியிருக்கிறார். அதற்குள் கமலுக்கு நெருக்கடியை அதிகரித்து அவரைக் கைது செய்வதற்கான சூழல் உண்டாக்கப்படலாம் என்று அஞ்சுகிறோம்” என்று தெரித்தார்.

அப்போது நீதிபதி அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘அவர்களின் அச்சம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அரசு வழக்கறிஞர், “நீதிமன்றம் இந்த முன் ஜாமீன் மனு மீது தீர்ப்பு அளிக்கும் வரை கைது நடவடிக்கை மேற்கொள்ளமாட்டோம்” என்று தெரிவித்தார்.

மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய வாதம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்துள்ளது. தேர்தல் முடியும் வரை கமல், அரசியல் கட்சியினர், நாளிதழ்கள், ஊடகங்கள் அனைத்தும் அந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எந்தவிதமான கருத்துகளையும், விவாதங்களையும் பதிவிட வேண்டாம் என அப்போது நீதிபதி கேட்டுக்கொண்டார். மேலும் வீடியோ பதிவு உள்ளிட்ட விவரங்களை முழுமையாகக் கேட்ட பிறகு முன் ஜாமீன் குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக அவர் தெரிவித்தார். இன்று மாலை வரை நீதிபதி தன் அறையில் இருந்த நிலையில் கமலின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon