மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள்!

மேற்கு வங்கத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே பிரச்சாரம் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கும் திருணமூல் காங்கிரஸுக்கும் இடையேயான மோதல் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 5ஆம் கட்ட தேர்தலின் போது பராக்போர், ஹூக்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் பாஜக, திருணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியில் இரு கட்சிகளுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முடிய வேண்டிய பிரச்சாரங்கள், இன்று இரவு 10 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு எதிரான மற்றும் ஒருதலைபட்சமான முடிவு என்று தெரிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஏனென்றால் மோடியின் இரு பேரணிகளுக்குப் பின்பே பிரச்சாரம் தடை செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இன்று காலை முதலே தடை விதித்திருக்கலாம். ஆனால் தடைவிதிக்கவில்லை. ஏனென்றால் பிரதமர் மோடி இன்று இரு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தல் ஆணையத்தின் செயல் நேர்மையான நடவடிக்கை அல்ல. நெருக்கடியின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மம்தாவை, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குறிவைத்துள்ளனர். இது நன்கு திட்டமிடப்பட்டது. அபாயகரமானது. என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்பது அரசியலமைப்புக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்யும் வகையில் இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ”தேர்தல் ஆணையம் தன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் 20 மணி நேரம் முன்பாக பிரச்சாரத்திற்குத் தடை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் மீதும் கறை படிந்துள்ளதைக் காட்டுகிறது. இதுவரை மோடி மற்றும் அமித்ஷா மீது தேர்தல் ஆணையத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் காங்கிரஸ் சார்பில் 11 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் நியமன நடைமுறைகள் குறித்து மீளாய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

”மேற்கு வங்கத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது பாரபட்சமானது. தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதி, ஆளுங்கட்சிக்கு ஒரு விதி என செயல்படுகிறது” என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜகவின் கைப்பொம்மையாகத் தேர்தல் ஆணையம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”மேற்கு வங்கம் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவே இருந்தன. நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாஜக மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனக்கும் மேற்கு வங்க மக்களுக்கும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநிலம் மாவில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ”கொல்கத்தாவில் நடந்த அமித் ஷா பேரணியில் கலவரத்தை ஏற்படுத்தி வித்யாசாகர் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் ஐம்பொன்களால் நிறுவப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

மீண்டும் வித்யாசாகர் சிலையை அமைத்து தருவதாக மோடி கூறியதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, ”சிலை அமைப்பதற்கு மேற்கு வங்க அரசிடம் போதுமான நிதி வசதி உள்ளது. பாஜகவின் பணம் தேவையில்லை. சிலைகளை சிதைப்பது பாஜகவுக்கு பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைத்தான் செய்தார்கள். பாஜக மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது” என்று கண்டித்துள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon