மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

கமல் உயிருக்கு ஆபத்து: அமைச்சர் மீது புகார்!

கமல் உயிருக்கு ஆபத்து: அமைச்சர் மீது புகார்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகளும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒருபடி மேலே சென்ற தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டுமென பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். மேலும் கமல்ஹாசன் தான் பேசியதை திரும்பப்பெற்றால்தான் தனது வார்த்தையை திரும்பப் பெறுவேன் என்றும் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவிடம் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று (மே 16) புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சென்னை மத்திய வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பிரியதர்ஷினி அளித்துள்ள புகாரில், “கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என்றும் மக்களை குற்றம் செய்ய தூண்டும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். கமல்ஹாசன் நாக்கை அறுப்பார்கள் என்று பேசியிருப்பது ஏற்கனவே அதற்குண்டான ஏற்பாடுகள் செய்திருப்பதை காட்டுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் என்பதை மறந்து ஏதோ கட்டப்பஞ்சாயத்து செய்பவர் போல பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வாழ்நாள் முழுவதும் சட்டத்தை மீறாமல் ஒரு நல்ல குடிமகனாக கமல்ஹாசன் இருந்துவருவதாகவும், அவர் பேசியதற்கு ஜனநாயக முறையில் எதிர்ப்போ நல்லது மறுப்போ தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் அதில் கூறியுள்ளார்.

“கமல்ஹாசன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஒரு உயரிய பதவியில் இருக்கும் அமைச்சர் என்ற பொறுப்புடன் செயல்படாமல் நாகரீகமற்ற வார்த்தைகளை பிரயோகித்து கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது வேலியே பயிரை மேய்வதற்கு சமம். இதுபோன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்பற்ற முறையில் தனிநபர் தாக்குதல் செய்து பேட்டியளிப்பது இந்திய தண்டனைச் சட்டம் 503, 504 இன்படி குற்றமாகும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த புகார் மனுவில், இது தமிழக மக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். எனவே அதனை முனையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும், ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon