மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 16 மே 2019

விருகம்பாக்கம் வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் கிடையாது: தேர்தல் ஆணையம்!

விருகம்பாக்கம் வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் கிடையாது: தேர்தல் ஆணையம்!

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று (மே 15) தெரிவித்துள்ளது.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தொடர்ந்துள்ள வழக்கில், விருகம்பாக்கத்தில் 109ஆவது வார்டுக்கு உட்பட்ட காவேரி பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை வாக்களிக்க அனுமதித்தது சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் சிவகார்த்திகேயனும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கத்தில் வாக்களித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க அனுமதிக்காத தேர்தல் அதிகாரிகள், பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும், அவர்களுடன் வருபவர்களுக்கும் வாக்களிக்க அனுமதியளிப்பது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும், தேர்தல் அதிகாரி பாரபட்சத்துடன் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீகாந்த் வாக்களித்த அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த ஆணையத்திடம் புகார் அளித்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளதால், காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஆணையத்தின் விளக்கத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon