மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

இந்திய மாநிலங்களிடையே நிலவும் பொருளாதார இடைவெளிகள்!

இந்திய மாநிலங்களிடையே நிலவும் பொருளாதார இடைவெளிகள்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பின் மேற்கத்திய நாடுகள் வேகமாக வளரத் தொடங்கியதால், அவர்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார வேறுபாடு அதிகரித்தது எனவும், இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஆசிய நாடுகள், முன்னேறிய நாடுகளின் பொருளாதார நிலையை “எட்டிப்பிடிக்கும்” (Catch-up growth) போக்கு தொடங்கியது எனவும் பொருளாதார அறிஞர்கள் ஆய்வுகளின் வழியே காட்டியுள்ளனர்.

நாடுகளுக்கிடையே மட்டுமின்றி, ஒரு நாட்டிலுள்ள பின்தங்கிய பகுதிகளும் வேகமாக வளர்ந்து, பொருளாதார ரீதியில் முன்னேறிய பகுதிகளின் சாதனைகளைக் காலப்போக்கில் எட்டிப்பிடிக்க முடியும் என்றும் பொருளாதார அறிஞர்கள் நம்புகின்றனர். இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையே இந்த “எட்டிப்பிடிக்கும்” போக்கு தொடங்கிவிட்டதா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் பொருளாதார ஆய்வறிக்கை 2016-17 ஈடுபட்டு, சில முக்கியமான போக்குகளை அடையாளம் கண்டது.

தனிநபர் வருமானம் எனும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த குறியீடு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு சார்ந்த குறியீடு எனும் இரு குறியீடுகளின் அடிப்படையில் இந்திய மாநிலங்களில் கடந்த நாற்பதாண்டுகளில் எவ்வகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை கவனமாக ஆராய்ந்துள்ளது இந்த அறிக்கை. இந்திய மாநிலங்களிடையே இவ்விரு குறியீடுகளிலும் பெரும் இடைவெளி இருப்பது மட்டுமின்றி, இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. மேலும், இந்த நூற்றாண்டில் மட்டுமின்றி, 1970களிலிருந்தே இந்த போக்கை நாம் காண முடியும் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. இதனால், இந்தியாவின் மாநிலங்களிடையே குறிப்பிடும்படியான “எட்டிப்பிடித்தல்” ஏற்பட்டு விடவில்லை என்பது தெரிகிறது.

மாநிலங்களுக்கிடையே பொருளாதார வேறுபாடுகள் குறைய, பின்தங்கிய மாநிலங்கள் வேகமாக வளர வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால், மூலதனம் பின்தங்கிய பகுதிகள் நோக்கி நகர வேண்டும். மேலும், சரக்கு மற்றும் மக்கள் நடமாட்டமும் தங்குதடையின்றி ஏற்பட்டால் “எட்டிப்பிடித்தல்” சாத்தியம். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் தடையற்ற சரக்கு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகரித்தும் மாநிலங்களுக்கிடையே நிலவும் இடைவெளிகள், ஏற்றத்தாழ்வுகள் குறையவில்லை என்கிறது ஆய்வறிக்கை.

இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கக்கூடும். முதலாவதாக, பின்தங்கிய மாநிலங்களின் ஆட்சிமுறையில் காணப்படும் குறைகள், நிச்சயமற்ற பொருளாதாரக் கொள்கைகள் போன்ற காரணங்களால் மூலதனம் அங்கு அதிகம் செல்வதில்லை. அடுத்து, பின்தங்கிய மாநிலங்களிலிருந்து உழைக்கும் மக்கள் வளர்ந்த மாநிலங்களுக்கு வேலை தேடி புலம்பெயரும் போக்கு வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டும் ஏற்படும்போது மாநிலங்களுக்கிடையே சமமின்மை அதிகரிக்கக்கூடும், அதனால் பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சி ஏற்படுவதில் மேலும் தொய்வு காணப்படும்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon