மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி, பேரறிவாளனுக்கு ஒரு நீதியா?

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி, பேரறிவாளனுக்கு ஒரு நீதியா?

இந்தி நடிகர் சஞ்சய் தத்தை மத்திய அரசின் அனுமதி பெறாமல் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எழுவரின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் அது தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் கடந்த 9ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. ஆளுநரே இதுதொடர்பாக முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பேரறிவாளன் தகவல் கோரியிருந்தார்.

அதில், சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மகராஷ்டிர அரசோ அல்லது எரவாடா சிறை அதிகாரிகளோ மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு, “மத்திய அரசிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை. சஞ்சய் தத் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். எனவே அவரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசிடமோ அல்லது மாநில அரசிடமோ கருத்துக்கள் கேட்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை” என்று எரவாடா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தகவலை பேரறிவாளன் தரப்பு வெளியிட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் உரிய ஆவணங்களின்றி ஆயுதம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் அதனை ஐந்து ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. ஆனால் தண்டனைக் காலம் முடியும் முன்பே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்தத் தீர்ப்பின்படி, மத்திய அரசு சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ்,

சஞ்சய் தத்தை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை. ஆனால், இவ்விஷயத்தில் மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது தான் மிகவும் வருத்தமளிக்கிறது. ஒருபுறம் மத்திய சட்டப்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மறுபுறம் மாநில சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப் பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2014ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும் இன்னும் விடுதலையாக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய மத்திய அரசு, தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்று விமர்சித்துள்ள அவர், “7 தமிழர்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஆளுனர் மூலமாக விடுதலை செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நேரடியாக விடுவிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவெடுக்கும்படி ஆளுனருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை தமிழக ஆளுனர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon