மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

பொய் என்னும் புதிர்!

பொய் என்னும் புதிர்!

நமக்குள் தேடுவோம் – 2: ஆசிஃபா

கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம். ஒரு பையனுக்குத் தொண்டை வலி என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவர் காரணம் கேட்டதற்கு, “மீன் முள் குத்திவிட்டது” என்று சொல்லியிருக்கிறான் அந்த ஐந்து வயதுச் சிறுவன். ஆனால், அவன் மீனே சாப்பிடவில்லை. கடையில் பாக்கெட் ஜூஸ் வாங்கிக் குடித்ததால் தொண்டை வலி ஏற்பட்டிருக்கிறது என்று அம்மா சொன்னார்.

எனக்கு என் சிறு வயது ஞாபகம் வந்தது. நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்தில் இந்தி இம்போஸிஷன் எழுதிவரச் சொன்னார்கள். அதுவும் அதில் அப்பாவின் கையெழுத்தும் வாங்கிவர வேண்டும். வீட்டில் சொன்னால் அவ்வளவுதான் என்று நானே அப்பாவின் கையெழுத்தைப் போட முயற்சித்தேன். வரவில்லை. வைட்னர் போட்டு அழித்து நான்கைந்து முறை போட்டுப் பார்த்தேன். ஆனால், சரியாக வரவில்லை. பிறகு, கையெழுத்துப் போட்டு வைட்னர் போட்டு அலங்கோலம் செய்த அந்தக் காகிதத்தையே நீட்டி, “என் ஃபிரண்டு கிறுக்கி வெச்சுட்டா. அதான் வைட்னர் போட்டேன்” என்று பச்சையாகப் பொய் சொன்னேன்.

நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஆனால் அப்போது அது வாழ்வா சாவா பிரச்சினையாக இருந்தது. என் அம்மாவிற்குப் ‘பொய்’ என்று சொன்னால்கூட பிடிக்காது. என்னுடன் 10 நாட்கள் ஆனாலும் பேச மாட்டார். பல முறை பொய் சொல்லி தண்டனை அனுபவித்திருக்கிறேன். ஆனாலும், பொய் சொல்லும் பழக்கம் பல காலம் என்னைவிட்டுப் போகவில்லை. கல்லூரிக் காலம் வரைகூட நான் அவ்வப்போது பொய் சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு, “என்னதான் நடந்துவிடும்?” என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த மீன் முள் சம்பவம் ஒரு கேள்வியை எழுப்பியது. நாம் ஏன் பொய் சொல்கிறோம்? சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பொய் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன், செய்திருக்கிறேன். ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? தவறே செய்திருந்தாலும், உண்மையைச் சொன்னால் என்ன கொன்றுவிடவா போகிறார்கள்? இது தெரிந்தும் ஏன் பொய் சொல்கிறோம்?

பொய் தொடர்பான எதிர்மறையான கருத்துக்களே அதிகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதை உடைக்காமல் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இப்போது என் கதையை எடுத்துக்கொள்ளுங்கள், 9 வயதில் இம்போஸிஷன் எழுதி கையெழுத்து வாங்காமல் போனால் வெளியில் நிற்க வைப்பார்கள்; எவ்வளவு பெரிய அவமானம். வீட்டில் சொன்னால், இம்போஸிஷன் எழுதும் அளவிற்கு ஏன் படிக்கவில்லை என்று கேட்பார்கள். உண்மையில், நான் படித்தேன், ஆனால் ஏனோ மார்க் வரவில்லை. இந்த இரு நிலைகளில் ஒரு குழந்தை எதை தேர்ந்தெடுக்கும்? கையெழுத்துப் போட்டுப் பார்ப்போம், மாட்டவில்லை என்றால் நல்லதுதானே? அதையே வீட்டில் சொல்ல முடியுமா? முடியாது. ஆனால், அச்சூழலில் தப்பிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் ஒரே வழி, பொய்.

இதை மறுமுனையிலிருந்து பார்த்தால், “இப்போவே இந்த சின்ன விஷயத்திற்கு பொய் சொல்றா… வளந்து என்னலாம் பண்ணுவா?” என்றும், “பொய் சொல்ற அளவுக்கு கெட்டுப்போய்ட்டா” என்றும் தோன்றும்.

யாருடைய கோணத்திலிருந்து அணுகுவது?

எந்தப் பொய்யும் குறைந்தது இரண்டு பேர் தொடர்புடையதாகவே இருக்கும். பொய் சொல்பவர்; அதைக் கேட்பவர். நம்முடைய முடிவுகளும் ஒழுக்க விதிகளும் பொய்யைக் கேட்பவர் பக்கத்தில் இருந்தே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. அதனால்தான் அவை அனைத்துமே பொய் சொல்பவர்களைக் குற்றம் மட்டுமே சொல்கின்றன.

குறிப்பிட்ட சூழலில் பொய் சொல்வதற்கான காரணங்கள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றன, இதில் மிக முக்கியமான, பரவலான காரணம் என்பது பயம். நாம் செய்ததை நினைத்து பயம், நம் செயலின் எதிர்வினை குறித்த பயம், என்ன நினைப்பார்களோ, என்ன நடக்குமோ என்று பல பயங்கள். குழந்தைகள் விஷயத்தில், அடிப்பார்களோ என்று தொடங்கும் பயம், வளர்ந்துகொண்டே வந்து, எங்கே நம்மை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற சூழலில் வந்து நிற்கும்.

நம்மைச் சுற்றி கவனித்துப் பாருங்கள். பொய்யை ஊக்குவிக்கும் விதமாகவே நாம் பல செயல்களைச் செய்துவருகிறோம். எடுத்துக்காட்டாக, காலையில் உறங்கிவிடுகிறோம். பத்து நிமிடம் தாமதமாக பள்ளி / கல்லூரிக்கு போகும் போது, ‘ஏன் லேட்?’ என்ற கேள்விக்கு, “தூங்கிவிட்டேன்” என்று சொன்னால் அந்த நாளே முடிந்துபோகும்! மாறாக, “பஸ் லேட்”, “சைக்கிள் பஞ்சர்”, என்ற பொய்கள் மறுகேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம், நம் மனதில் ஆழமாக ஒரு தகவல் பதிகிறது: “பொய் சொன்னால் உடனடிச் சிக்கலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.” மாட்டாமல் இருந்தால் போதும், மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பதே நம் அணுகுமுறையாக இருக்கிறது.

யாருக்குச் சின்ன விஷயம்?

“ஏன் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பொய் சொல்ற?” என்ற கேள்வி உண்மையில் அபத்தமானது. காரணம், ஒரு விஷயத்தைச் சிறியதாக நினைக்கும்போது நாம் பொய் சொல்ல மாட்டோம். 5 வயதுக் குழந்தைக்குத் தொண்டை வலி, அதுவும் வீட்டிற்குத் தெரியாமல் ஐஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட தொண்டை வலி. வலி ஒரு பக்கம். ஐஸ் சாப்பிட்டது தெரிந்தால் விழக்கூடிய தொட்டு ஒரு பக்கம். அந்தக் குழந்தைக்கு இது மிகவும் பெரிய பிரச்சினை. ஆனால், நமக்கு அது ஒன்றுமே இல்லாத விஷயம்!

இது அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். எனவே, சின்ன விஷயங்களுக்குப் பொய் என்ற ஒன்றே கிடையாது. பொய் சொல்லப்படும் விஷயங்கள் பலவும், தொடர்புடையவர்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நமக்கு முக்கியமானதாக இருக்கும் ஏதோ ஒரு பொருள், நிகழ்வு, நபருக்கு நம்மால் ஏதேனும் ஒரு வகையில் பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்தாலே நாம் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுகிறோம். ஒருவர் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றாலோ, தவிர்க்க வேண்டும் என்றாலோ, அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை நம் செயல்கள் எச்சூழலிலும் பாதிக்கக் கூடாது. அந்த நம்பிக்கையை ஒருவருக்கு ஏற்படுத்திவிட்டாலே, அங்கு பொய்கள் குறைந்துவிடுகின்றன.

இவைதவிர, பிறரைக் கவர்வதற்காக; நம் உண்மையான முகம் தெரிந்துவிட்டால், எங்கே நம்மைப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாக; பிறரின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக, பிறரின் மகிழ்ச்சிக்காக என்று பொய்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். சிலவற்றை நன்மை என்றும், சிலவற்றைத் தீயவை என்றும் நாமே அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

பொய் சொல்வது முதலில் சாதாரணமாகத் தெரிந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அது ஒருவிதமான போதையைத் தரத் தொடங்குகிறது. ஒரு பொய்யில் மாட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டால், அடுத்த பொய்யை எளிதாகச் சொல்லிவிடுகிறோம். அது அடுத்தடுத்த பொய்களுக்கு இட்டுச்செல்கிறது. கடைசியில் எது பொய், எது உண்மை என்றே தெரியாமல் குழப்பத்தில் நிற்கிறோம். எந்த நிலை வரை என்றால், நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ளத் தொடங்குகிறோம்…

(தொடர்ந்து தேடுவோம்…)

தொடரின் அடுத்த பகுதி வரும் சனிக்கிழமையன்று

.

.

மேலும் படிக்க

.

ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon