மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

மேற்கு வங்காள வன்முறை: ஒரு நாள் முன்பே முடிகிறது பிரச்சாரம்!

மேற்கு வங்காள வன்முறை: ஒரு நாள் முன்பே முடிகிறது பிரச்சாரம்!

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே பிரச்சாரம் முடிவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஏற்பட்ட தேர்தல் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் நாளை (மே17) முடிய இருந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மே 16 ஆம் தேதி இரவு 10 மணியோடு முடிவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் ஏழாவது கட்டம் மற்றும் நிறைவு கட்டமாக மேற்கு வங்காள மாநிலத்தில் தெற்கு கொல்கத்தா, வடக்கு கொல்கத்தா, டம் டம், பர்சாட், பசிர்ஹாத், ஜெய் நகர், மதுராபூர், ஜாதவ்பூர், வைரத் துறைமுகம் ஆகிய 9 தொகுதிகளில் மே 19ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

நேற்று டெல்லியில் அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார் இதை அறிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின் 324 ஆவது பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே நிறுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.

மே 14-ஆம் தேதி கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியின்போது பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வன்முறையாக வெடித்தது. கொல்கத்தா பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற இவ் வன்முறையின்போது மேற்கு வங்காளத்தின் தத்துவமேதை ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையும் வன்முறையாளர்களால் தகர்க்கப்பட்டது.

இதுபற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ள தேர்தல் ஆணையம் வன்முறையாளர்களை மாநில அரசு நிர்வாகம் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த வன்முறைக்கு பின் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட மனுவில் மம்தா பானர்ஜியின் பிரச்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. திருணமூல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் வன்முறைக்கு பாஜக காரணம் என்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேர்தல் பரப்புரையில் ஒரு நாள் முன்னதாகவே முடித்து வைத்து விட்டது தேர்தல் ஆணையம்.

”இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இப்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இது கடைசி முறையாக இருக்காது” என்றும் கூறியுள்ளார் துணைத் தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார்.

மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அத்திரி பட்டாச்சாரியா, ‌ சிஐடி போலீஸ் பிரிவின் ஏடிஜிபி ராஜ்குமார் ஆகிய உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தை ஒருநாள் முன்னதாகவே முடிக்கும் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் முடிவை மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார். நேற்று (மே 15) கொல்கத்தாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது, நீதி நெறிகளுக்கும் மாறானது” என்று விமர்சித்துள்ளார். மேலும் இந்தத் தடை என்பது மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவை பயன்படுத்தும் அளவுக்கு மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் இந்த தடைக்கு பின் சதி இருக்கிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மே 14 ஆம் தேதி நடந்த வன்முறையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் கருதும் பட்சத்தில் உடனடியாக பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் ஏன் நிறுத்தவில்லை? பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்கள் முடிந்த பிறகுதான் இந்த தடை அமலுக்கு வருகிறது. அப்படி என்றால் தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

மே 14-ஆம் தேதி நடந்த வன்முறைக்கு காரணம் அமித் ஷா தான். ஆனால் அவருக்கு ஒரு நோட்டீஸ் கூட தேர்தல் ஆணையம் அனுப்பாதது ஏன்?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு புகாருக்கு கூட இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் பாஜக செய்யும் வன்முறைக்கு ஒட்டுமொத்த பிரச்சாரத்தையே தடை செய்கிறது தேர்தல் ஆணையம்” என்று குற்றம் சாட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.

முன்னதாக நேற்று (மே 15) மேற்கு வங்க மாநிலம் பசிர்ஹாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவை பழி வாங்குவேன் என்று மம்தா பானர்ஜி வெளிப்படையாக அறிவித்தார். 24 மணி நேரத்திலேயே அவர் அதை நிறைவேற்றிவிட்டார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பேரணியில் திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். திருணமூல் காங்கிரஸ் குண்டர்கள் நடத்திய இத்தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் சாட்சி. மக்கள் இந்தக் கொடூர ஆட்சியை அகற்றுவார்கள். மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு மம்தா பானர்ஜி அச்சத்தில் உள்ளார்.

மம்தா பானர்ஜி அதிகார போதையில் ஜனநாயகத்தைத் திணற வைக்கிறார்.

ஜனநாயகம்தான் அவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளது. அதை அவர் கொலை செய்துகொண்டு இருக்கிறார். மம்தா பானர்ஜியின் செயல்களை ஒட்டுமொத்த நாடே கவனித்து வருகிறது. அவரை அதிகாரத்தில் மேலும் வைத்திருக்கக் கூடாது. கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அவர் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார்” என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon