மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

கமலை நோக்கி செருப்பு வீச்சு!

கமலை நோக்கி செருப்பு வீச்சு!

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையிலிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியதற்கு பாஜகவினரும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் எழுந்த சர்ச்சையால் கடந்த இரண்டு நாட்களாகப் பிரச்சாரத்திற்கு செல்லாமல் இருந்த கமல் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருப்பரங்குன்றம் வேட்பாளர் சக்திவேல் பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கோட்சேவை தீவிரவாதி என்று கூறியது சரித்திர உண்மை என்று கூறியிருந்தார்.

பின்னர் தனது பிரச்சாரத்தைச் சிறிது நேரம் தள்ளி வைத்த கமல், தன் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு போடப்பட்டது தொடர்பாகவும், முன் ஜாமீன் மனு தொடர்பாகவும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் வில்லாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலில் மேடையில் இருந்த கமல், நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு, பேசுவதற்காக எழுந்து மைக் அருகில் வந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த ஒருவர் கமலை நோக்கி செருப்பை வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்த சில இளைஞர்கள் கமலுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர்.

பிரச்சார கூட்டத்துக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கமலை நோக்கி செருப்பு வீசியவரையும், கோஷமிட்டவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக திமுக அதிமுகவை விமர்சித்து பேசும் கமல் நேற்றைய கூட்டத்தில், பெயரைக் குறிப்பிடாமல் பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஜாதியை வைத்து விளையாடுவது பழைய விளையாட்டு; மதத்தை வைத்து விளையாடுவது ரொம்ப பழைய விளையாட்டு என்ற கமல், "மக்கள் நீதி மய்யத்தில் எல்லா ஜாதியும், மதமும் அடங்கும். என் நாடு பிரித்தாளப் படக்கூடாது.

ஏற்கனவே ஒன்றைப் பிரித்து விட்டார்கள். இனி விடமாட்டோம். இனி இந்த கட்டுக்கோப்பை யாராலும் அசைக்க முடியாது. அதற்கான ஆரம்பம் இங்கே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அவர்களால் தமிழகத்துக்குள் காலெடுத்து வைக்க முடியவில்லை. இது பல வருடங்களாகப் போட்ட விதை"என்றார்.

தென்னக மக்களுக்கு வடநாடே தெரியாது என்று சொல்ல முடியாது என்ற கமல், "நாங்கள் நாட்டுக்காகப் பர்மாவில் சண்டை போட்டு இருக்கிறோம். டெல்லியில் சண்டை போட்டு இருக்கிறோம். விருதுநகரிலிருந்து டெல்லிக்குப் போய் கிங் மேக்கராக இருந்துவிட்டு இறந்தவர் காமராஜர். தமிழன் சவால் விடுபவன் அல்ல; செய்து காட்டுபவன்"என்றார்.

தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் அது ராவண ராஜ்யம் என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்கிறேன் என்று கூறிய கமல், " காந்தி என்ற பெயருடைய குழந்தைகள் எங்கள் ஊரில் நிறையப் பேர் இருக்கிறார்கள். போஸ் என்ற பெயர் வைத்திருப்பார்கள். ஜவகர் அல்லது நேரு என்று பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் வடநாட்டில் ஒரு காமராஜரை காட்டுங்கள் பார்ப்போம்.

தமிழனிடம் தேசத்தைக் கொடுத்தால் அதை தன் இதயம் போல காப்பான். எங்களுக்குத் தேசபக்தி சொல்லிக் கொடுக்க வேண்டாம். தேசிய கீதம் எந்த மொழி என்று கூட எங்களுக்குத்தெரியாது. ஆனால் நாங்கள் தேவகீதம் கேட்டது போல் எழுந்து நிற்போம். எனவே எங்களுக்கு புது பாடம் எடுக்க வேண்டாம். நாங்கள் கற்றவர்கள் என்று சொல்லவில்லை. இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எமக்கு கற்றுக் கொடுக்கும் அருகதை உமக்கு இல்லை.

நீங்கள் கற்றுக் கொடுக்க முயல்வது அடுக்கடுக்கான பொய்களை. அதை நாங்கள் நம்ப மாட்டோம். எங்களுக்குப் பொய்யைக் கேட்டவுடன் குமட்டும். அந்த குமட்டலின் சாயல்தான் உங்களால் தமிழகத்திற்குள் நுழைய முடியாததற்கான காரணம்" என்றார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon