மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

முடிவுக்கு வந்த சகாப்தம் – தேவிபாரதி

முடிவுக்கு வந்த சகாப்தம் – தேவிபாரதி

சினிமா பாரடைசோ – 27

எழுபதுகளின் தொடக்கத்தில் ரசிகர்களை ஈர்த்த இந்தித் திரைப்படங்களின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் தமிழ்த் திரைப்படத் துறை திணறியது. இந்தி சினிமா உருவாக்கிய நாயக பிம்பம் முந்தைய கால் நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நாயகர்களால் உருவாக்கப்பட்டிருந்த பிம்பங்களைச் சிதைக்கத் தொடங்கியது. இருவருமே தாங்கள் ஏற்கும் கதாபாத்திரங்கள் தமிழ் வாழ்வை, அதன் வரலாறு சார்ந்த கற்பனைகளைப் போற்றுபவையாகவும் அதன் மரபையும் மதிப்பீடுகளையும் சிதைக்காதவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். சிவாஜியின் திரைப்படங்கள் தமிழ்க் குடும்ப அமைப்பு சந்திக்கும் நெருக்கடிகளை உணர்ச்சிகரமான முறையில் பரிசீலித்தது என்றால் எம்ஜிஆர் தமிழனின் வீரம், மானம் சார்ந்த அற விழுமியங்களைப் போற்றும் நாயகனின் வேடங்களை ஏற்றார். பொழுதுபோக்கு என்ற எல்லைகளை அதிகம் மீறாமல் அவர்களால் அதைச் செய்ய முடிந்தது.

பொழுதுபோக்கின் எல்லைகள் விரிவடைந்துகொண்டிருந்தன. மக்களின் ரசனையில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் திரைப்படக் கலைக்கு வலுவூட்டியன. புதிய சாத்தியங்களுக்கான வாய்ப்புகளைப் பற்றித் திரைப்படக் கலைஞர்கள் யோசித்தார்கள்.

தமிழ் ரசிகர்களை ஈர்த்த இந்தித் திரைப்படங்கள் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன. அவற்றின் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இசை, நடனம், பாடல்கள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தமிழ்த் திரைப்பட ரசிகர்களைத் தன் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயம் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு உருவானது. தமிழகத் திரையரங்குகளை ஷோலே, யாதோன் கீ பாரத், வகை திரைப்படங்கள் தங்கள் பிடிக்குள் கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருந்தன.

பல திரையரங்குகளில் ஷோலே வெள்ளி விழாவைக் கடந்து ஓடியது. தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காத நிலை உருவாகத் தொடங்கியது. இசைத்தட்டு விற்பனையில் இந்தித் திரைப்படப் பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. திருமண வீடுகளில் மட்டுமல்லாது கோயில் திருவிழாக்களிலும் ஆர்.டி.பர்மன் இசையமைத்த பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இளைஞர்களின் உதடுகள் ‘ஹம் தும்’ என அவற்றின் மெட்டுகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அவர்களது உடையலங்காரங்களிலும் சிகையலங்காரங்களிலும் அமிதாப்பச்சனின் சாயல்கள் தென்படத் தொடங்கின.

தமிழகத்தின் ஆடை வடிவமைப்பாளர்கள் இளைஞர்களுக்கு அமிதாப் பச்சனும் மிதுன் சக்ரவர்த்தியும் தங்கள் திரைப்படங்களில் உடுத்திய பெல்பாட்டம் என்ற புதிய வகை கால் சராயை அறிமுகப்படுத்தினார்கள். சிகையலங்கார நிபுணர்கள் அவர்களது நீண்ட கிருதாக்களை அறிமுகப்படுத்தினார்கள். இளைஞர்களும் கல்லூரி மாணவர்கள் பங்க் கிராப், பிச்சுவாக் கத்தியைப் போன்ற கிருதா, உதடுகளின் வழியே இறங்கி, முகவாயைத் தொடும் மீசை என அமிதாப் ஸ்டைலில் உலா வரத் தொடங்கியதைப் பார்த்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் திகைத்துப் போனார்கள்.

இந்த மாற்றம் அப்போது பெண்களை அதிகம் பாதிக்கவில்லை. சல்வார் கமீசும் சுடிதாரும் உடுத்திய இந்தித் திரைப்பட நாயகிகளிடமிருந்து தமிழ்ப் பெண்கள் விலகியே இருந்தார்கள். பெண்கள் சேலை, பாவாடை தாவணிகளிலிருந்து விடுபட்டு நவீன உடைகளுக்கு மாறிச் செல்வதற்கு அதற்குப் பிறகு ஏறத்தாழ பத்தாண்டுகள் பிடித்தன. 1960களின் தலைமுறையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் பாலும் பழமும் சேலையை உடுத்தினார்கள். பாலும் பழமும் படத்தின் நாயகியான சரோஜாதேவி உடுத்திய சிறிய கட்டங்களையுடைய சேலை. அந்தப் படத்தில் சரோஜாதேவி உடுத்திய வேறு சேலைகளைவிட அந்தச் சேலைதான் அந்தக் காலகட்டத்தின் இளம் பெண்களை ஈர்த்திருக்க வேண்டும். சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, லட்சுமி உள்ளிட்ட நாயகிகள் உடுத்திய சல்வார் கமீஸ் போன்ற நவநாகரிக உடைகளை அப்போதைய இளம் பெண்கள் உடுத்தியதுபோல் தெரியவில்லை. சேலையில் தமிழ் சினிமா பல புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. 1960களுக்கு முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் பின்கொசுவம் வைத்து உடுத்தினார்கள். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் உயிரோடிருந்த காலம்வரை பின்கொசுவத்தைக் கைவிடவில்லை.

1980 - 90களில் தேவராஜ் மோகன், பாரதிராஜா, மகேந்திரன், போன்ற இயக்குநர்கள் தம் திரைப்படங்களில் தமிழ் வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தபோது அவற்றில் இடம்பெற்றிருந்த பெண் பாத்திரங்கள் சேலையைப் பின்கொசுவம் வைத்து உடுத்தினார்கள். பாரதிராஜாவின் படங்களில் காந்திமதியும், வடிவுக்கரசியும் மட்டுமல்லாமல் ரேவதிகூடப் பின்கொசுவம் வைத்து உடுத்திய சேலைகளுடன் தோன்றியிருக்கிறார்.

1960களுக்குப் பிந்தைய நாயகிகள் உடையலங்காரத்தில் ஏற்படுத்திய புரட்சி சேலையோடு முடங்கிவிட்டது. ஆனால், ஹேர்பின்கள், கம்மல்கள், வளையல்கள், பாசிமணிகள் முதலான அழகு சாதனப் பொருட்களில் பெரும் மாற்றங்களைத் தமிழ் சினிமாவின் நாயகிகள் உருவாக்கினார்கள். 1980களில் அப்போதைய இளம் நாயகிகளில் ஒருவரான நதியா ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அப்போதைய இளம் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் நதியாவின் பெயரைத் தாங்கி வந்தன. நதியா பொட்டு, நதியா வளையல், நதியா கொண்டை என நதியா விளைவு பல வகைகளில் சில ஆண்டுகள் வரை நீடித்திருந்தது.

நதியா கொண்டைக்கு முன்னால் தமிழ் இளம் பெண்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது வாணிஸ்ரீ கொண்டைதான். சிவந்த மண், வசந்த மாளிகை போன்ற சில திரைப்படங்களில் அதுபோன்ற கொண்டைகளுடன் வாணிஸ்ரீ தோன்றினார். இன்று போல் மூலைக்கு மூலை அழகு நிலையங்கள் இல்லாத அந்தக் காலங்களில் அது போன்ற கொண்டைகளைப் போட்டுக்கொள்வது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கவில்லை.

ஆனால், வாணிஸ்ரீ கொண்டைக்கு மூலம் ஹேமமாலினிதான். ஹேமமாலினி மட்டுமல்லாமல் அப்போதைய இந்தி சினிமாவின் தாரகைகள் பலரும் அதுபோன்ற கொண்டைகளைத்தான் போட்டுக்கொண்டிருந்தார்கள். அவற்றைத் தமிழ் நாயகிகள் பின்பற்றினார்கள்.

ஹேமமாலினி போல் வாணிஸ்ரீ கொண்டைபோட்டுக்கொண்டது போல் எம்ஜிஆரும் சிவாஜியும் அமிதாப் போல் உடையணிந்துகொண்டார்கள். எம்ஜிஆருக்கும் சரி, சிவாஜிக்கும் சரி பெல்பாட்டம் பொருந்தவில்லை. அதே சமயம் இந்தி சினிமாவின் சவாலை எதிர்கொள்ளத் தங்கள் படங்களை இந்தி சினிமாவின் சாயல்களில் உருவாக்கினார்கள். பிரமாண்டமான காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகளுடன் வெளிவந்த அவர்களது சில திரைப்படங்கள் புகழ் பெற்றவை. யாதோன் கி பாரத் எம்ஜிஆரின் நடிப்பில் நாளை நமதே ஆகவும் ஆராதனா சிவாஜியின் நடிப்பில் சிவகாமியின் செல்வனாகவும் மறுஆக்கம் செய்யப்பட்டுத் தோல்வியடைந்ததைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற அந்த இரு நாயகர்களின் நடிப்பில் உருவான சில திரைப்படங்கள் இந்தித் திரைப்படங்களோடு போட்டியிட முயன்றன. சிவாஜி நாயகனாக நடித்த திரிசூலம் அச்சு அசலான இந்திப்படம். தமிழ் வாழ்வோடு எந்தத் தொடர்புமற்ற திரைக்கதை, பாத்திரப் படைப்புகள், மயிர்க் கூச்செரிய வைக்கும் சண்டைக் காட்சிகள், சென்டிமென்ட் நிறைந்த சிவாஜி

மூன்று வேடங்கள் ஏற்று நடித்த திரிசூலம் வசூலை வாரிக் குவித்தது. பல திரையரங்குகளில் வெள்ளி விழாவைக் கடந்து ஓடியது. ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நாயகனாக நடித்த சிவந்த மண்ணும் இந்தி சினிமாவின் சாயல்களைக் கொண்ட திரைப்படம். அது ஓரளவு வெற்றி பெற்றது.

எம்ஜிஆர் நாயகனாக நடித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் இந்தி சினிமாவின் அடையாளங்களைக் கொண்டது. எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம் அது. அவரது பிற்காலத் திரைப்படங்களில் பல இந்தி சினிமாவின் சாயல்களுடன் இருந்தன.

எம்ஜிஆர் தமிழக அரசியல் சார்ந்த சொல்லாடல்கள் மூலம் தனது திரைப்படங்களுக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தார். திரிசூலம், சிவந்த மண் போன்ற திரைப்படங்கள் இந்திப் படங்களுக்குச் சவால்விடுபவையாக இருந்தாலும் சிவாஜி தமிழ் வாழ்வைத் தன் திரைப்படங்களில் உணர்ச்சிகரமான முறையில் எதிரொலித்தார்.

சிவாஜியும் எம்ஜிஆரும் தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களை அவரவருக்கான தனித்த அடையாளங்களுடன் உருவாக்கியவர்கள். தமிழ் சினிமாவின் மகத்தான அவ்விரு நாயகர்களும் இந்தித் திரைப்படங்களின் ஆதிக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களை மீட்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.

அவர்களுக்குப் பின்னர் உருவான பாரதிராஜா, மகேந்திரன் போன்ற புதிய தலைமுறை இயக்குநர்கள் தமிழ் சினிமாவை நவீனப்படுத்த முயன்றார்கள். தமிழ் சினிமாவை தமிழ் வாழ்வுக்கு நெருக்கமாகக் கொண்டுவர முயன்றார்கள். எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நாயகர்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது அவர்கள்தாம்.

சதீஷ் பகதூரும் சந்திரலேகாவும்

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

வியாழன், 16 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon