மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 மே 2019

பிறரைத் துன்புறுத்தும் தளங்கள்!

பிறரைத் துன்புறுத்தும் தளங்கள்!

சமூக வலைதளங்களும் நாமும் - 5: நவீனா

மனிதனின் ரசனை சார்ந்த விஷயங்களின் மீதான அறிவையும், ஈடுபாட்டையும் அதிகப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கொண்டே சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சமூக வலைதளமும் அதற்கான தனித்துவமான சிறப்பம்சங்கள் மூலம் மனிதனிடம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் அவற்றுக்கான இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சில சமயங்களில் அவற்றின் தனித்தன்மைகள் சில குறிப்பிட்ட பிரத்யேகமான பிரச்சினைகளைத் தூண்டவும் அசாதாரண சூழல்களை உருவாக்கவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

ட்விட்டர் மீது சமீபத்தில் சாட்டப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டுகளில், பெண்களின் மீதான குரூப் ஹராஸ்மண்ட் (Group Harassment) எனப்படும் கூட்டுத் துன்புறுத்தலும் ஒன்று. அடிப்படையில் ட்விட்டர் தனிமனித ஆர்வம் சார்ந்த சமூக வலைதளம். அதாவது, குறிப்பிட்ட துறையில் ஆர்வமுடைய ஒருவர் ட்விட்டர் கணக்கு ஒன்றைத் துவங்கி, தான் ஆர்வம்கொண்ட அதே துறை சார்ந்த கணக்குகளைத் தேடி, அவற்றில் பகிரப்படும் கருத்துகளை ரீடிவிட் அல்லது மறுபதிவு செய்வதற்கான தளம்தான் ட்விட்டர். ஆனால், கோடிக்கணக்கான ட்விட்டர் கணக்குகளில், இதுபோன்ற ஒருமித்த எண்ணங்களுடைய கணக்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பதே மிகவும் கடினமான காரியம்.

அவ்வாறான கணக்குகளைக் கண்டறிய முடியாத நிலையில், தனிமனித ஆர்வம் சார்ந்த சமூக வலைதளமான ட்விட்டர் இன்று தனிமனிதக் கணக்கு சார்ந்த சமூக வலைதளமாக மாறிவிட்டது. ஒருவர் பின்தொடரும் ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்படும் எந்த ஒரு கருத்தையும் சிறிதும் ஆய்வுக்கு உட்படுத்தாமல் மறு பதிவேற்றும் நிலையே தற்போது விஞ்சி நிற்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்து, அவர்கள் மீது அவதூறு பரப்பும்படியாகப் பதிவேற்றப்படும் கருத்துகள் மிக அதிகமாக மறுபதிவிடப்படுகின்றன. இப்படியாக ஒரு குறிப்பிட்ட தனி மனிதனுடைய கருத்து, ஒட்டுமொத்தக் குழுவின் கருத்தாக மாறி, அது பெண்கள் மீதான கூட்டுத் துன்புறுத்தலாக ஆகிவிடுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, ஆம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் (Amnesty International) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பத்தில் ஒன்று என்கிற விகிதத்தில், பெண்களைப் பற்றி அவதூறு பரப்புதல், சித்திரிக்கப்பட்ட கதைகள் அல்லது சம்பவங்கள், தனிப்பட்ட வக்கிரமான எண்ணங்கள், தவறான செய்திகள், பெண்களைத் துன்புறுத்தும்படியான கருத்துகள் கொண்ட ட்விட்டுகள் பதிவேற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இம்மாதிரியான பதிவுகள் அதிக லைக்குகளையும் ஃபாலோயர்களையும் பெறுவதற்கான குறுக்கு வழியாகக் கையாளப்பட்டு வருகின்றன.

ட்விட்டரின் சிஇஓ ஜாக் டோர்ஸியிடம் (Jack Dorsey), ஒரு நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டர் உருவாக்கப்பட்டபோது இது போன்ற பிரச்சினைகள் வரும் என முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று பதிலளித்த அவர், தற்போது ட்விட்டர் சமூக வலைதளத்தில் உரையாடல்களின் ஆரோக்கியத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடிய வகையில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவதூறு பரப்பக்கூடிய ட்விட்டுகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவற்றைப் பற்றி மேலும் விவரங்களை ட்விட்டர் கணக்கு வைத்திருப்போரிடமிருந்து சேகரித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் முடிவில் ஜாக் டோர்ஸி ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தார். ட்விட்டரின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சார்ந்து ட்விட்டர் குழுமம் துரிதமாக நடவடிக்கைகள் எடுத்துவருகிறது என்றாலும், குறிப்பிட்ட பதிவைப் பரப்புவது என்ற முடிவை எடுப்பது தனிப்பட்ட நபர்தான். எனவே ட்வீட்டர் குழுமத்தின் முயற்சிகள் வெற்றியடைய தனிமனிதர்களின் ஒத்துழைப்பும் அதிகமாகவே தேவைப்படுகிறது என்றார்.

ஆரோக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்காகவும், அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் பெரும்பாலும் இன்றைய நிலையில் அவதூறுகளைப் பரப்புவதற்கும், தனிமனிதனை துன்புறுத்துவதற்கும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்குமான தளமாக மாறிவிட்டது சமூக முன்னேற்றத்துக்கு ஒரு பின்னடைவுதான். உண்மைத்தன்மையை அறியாமல் பகிரப்படும் எந்த ஒரு செய்தியும், கருத்தும் மற்றொருவரை இரையாக்கித் துன்புறுத்திக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

திரும்பிய திசையெல்லாம் தசாவதானிகள்!

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

.

அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!

.

என்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை!

.

.

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

வியாழன் 16 மே 2019