மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

தாத்தா, பாட்டியாகும் கூகுள்

தாத்தா, பாட்டியாகும் கூகுள்

டிஜிட்டல் டைரி! - சைபர் சிம்மன்

ஸ்லேக் போலவே, கூகுளும் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வசதிதான் இது. இனி உங்கள் போனில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில், “ஹே கூகுள், ஒரு கதை சொல்லு” என்றால், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட கதைகளிலிருந்து ஒரு கதையைத் தேர்வு செய்து வாசித்துக்காட்டும்.

கூகுள், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த ‘டெல் மீ ஏ ஸ்டோரி’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. இப்போதைக்கு ஆங்கிலத்தில்தான் கதை கேட்க முடியும். கூகுள் அசிஸ்டெண்டிடம் கதை கேட்க வேண்டும் எனில் உங்கள் போனில் கூகுள் பிளே புக்ஸை வைத்திருக்க வேண்டும்.

கூகுள் அசிஸ்டென்ட்டுக்குக் கட்டளையிட்டுப் பழகியவர்களுக்கு இந்தக் கதை சொல்லும் வசதி இன்னும் உற்சாகம் அளிக்கக்கூடும்.

இன்ஸ்டகிராம்: ஒரு லைக்குக்கு ஒரு மரக்கன்று!

இன்ஸ்டகிராமை ரசித்த சிம்பன்சி பற்றிக் கடந்த பத்தியில் பார்த்தோம். இன்ஸ்டகிராம் தொடர்பாக இன்னொரு செய்தியையும் பார்க்கலாம். இதுவும் இன்ஸ்டகிராமை மார்க்கெட்டிங்கிற்குப் பயன்படுத்தும் முயற்சி என்றாலும் கொஞ்சம் பாசிட்டிவானது.

கடந்த மாதத்தின் 22ஆம் தேதி பூமி தினமாக அமைந்தது. இதை முன்னிட்டு கனடா நாட்டின் டென்ட்ரி (Tentree) எனும் ஆடைத் தயாரிப்பு நிறுவனம், இன்ஸ்டகிராமில் சிறிய மரம் ஒன்றின் படத்தை வெளியிட்டு, அந்தப் படத்தை ஐந்து மில்லியன் பேர் லைக் செய்தால், ஐந்து மில்லியன் மரக்கன்றுகளை நடுவதாகக் கூறியது. நிறுவனம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 24 மணி நேரத்தில் இந்தப் படத்திற்கு இன்ஸ்டகிராமில் 5 மில்லியனுக்கு மேல் லைக் குவிந்துவிட்டது. அந்த அளவு நிறுவன பிராண்டுக்கு விளம்பர வெளிச்சம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நிறுவனம், 20 லட்சம் லைக்குகள் கிடைத்தால் மேலும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதாக வாக்குறுதி அளித்தது.

விளைவு, மேலும் லைக்குகள் குவிந்து, இன்ஸ்டகிராமில் அதிக லைக்குகள் பெற்ற படங்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், ஒரு முட்டையின் படம் இன்ஸ்டகிராமில் இதேபோல் கலக்கி லைக்குகளை அள்ளிக் குவித்தது. உலக சாதனை முட்டை எனும் வர்ணனையோடு இது இணையத்தில் வைரலானது. இந்த முட்டை படமும் விளம்பரப் பிரச்சாரம் என்பது பின்னர் தெரியவந்தது வேறு விஷயம். ஆனால், மனநலம் தொடர்பான விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாக அது அமைந்தது.

பொதுவாக, நட்சத்திரங்களும் பிரபலங்களும்தான் இன்ஸ்டகிராமில் லைக்குகளைக் குவிப்பதில் முன்னிலை பெறுவார்கள் என்பதைத் தகர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு முயற்சிகள் சமூக ஊடகப் பரப்பில் வெற்றிக்கொடி நாட்டி நல்ல நோக்கங்களுக்காக கவனத்தை ஈர்த்துவருவது பாராட்டத்தக்கதுதான்!.

ஃபேஸ்புக் அசிஸ்டெண்ட்

கூகுளின் டிஜிட்டல் உதவியாளர் சேவை போலவே, அமேசான் அலெக்சா, ஆப்பிள் சிறி ஆகியவை டிஜிட்டல் உதவியாளர்களைப் பெற்றிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போது ஃபேஸ்புக்கும் தன் பங்கிற்கு டிஜிட்டல் உதவியாளர் சேவை ஒன்றை உருவாக்க ஆயத்தமாகியிருப்பதாகச் செய்தி கசிந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் உதவியாளர் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. குரல் வழியாக இயக்கக்கூடிய இந்தச் சேவை, ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள போர்ட்டல் உள்ளிட்ட சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும் எனத் தெரிகிறது.

வருங்காலத்தில் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல் வெளியிடவும், லைக் செய்யவும்கூட டிஜிட்டல் உதவியாளரை நாடும் சூழல் வரலாம்.

இனி அட்மினுக்குப் பதிலாக டிஜிட்டல் உதவியாளரின் ‘தலை’ உருளலாம்!

*

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon