மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 மே 2019

விமர்சனம்: அயோக்யா

விமர்சனம்: அயோக்யா

பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை உடனே அளிக்க வேண்டுமென விஷால் ஆடும் கர்ண தாண்டவமே அயோக்யா.

பி.மது தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: வி.ஐ. கார்த்திக், படத்தொகுப்பு: ரூபன், சண்டைப் பயிற்சி: ராம்-லக்‌ஷ்மன், கலை: எஸ்.எஸ்.மூர்த்தி.

நிராதரவான கர்ணன் (விஷால்) சிறு வயதிலிருந்தே திருட்டைத் தொழிலாகச் செய்துவருகிறார். திருடனிடம் திருடும் போலீஸைக் கண்டவுடன் போலீஸாக மாற அனைத்து ‘முயற்சி’களையும் மேற்கொள்கிறார், லட்சியத்தை அடைகிறார். பணம் மட்டுமே பிரதானம் என வாழும் விஷாலைத் தனது ஹெராயின் தொழில் தடையின்றி நடக்க மந்திரியிடம் (சந்தான பாரதி) பேசி, தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் வாங்கி வரச்செய்கிறார் பார்த்திபன். பார்த்திபனுக்குக் காவல் கரம் நீட்டுகிறார் விஷால். லஞ்சம், காதல் என வாழும் விஷாலுக்கு நீதி ஒரு தடையாய் வருகிறது.

கூட்டு வல்லுறவால் பலியான தன் தங்கையின் கொலைக்குக் காரணமான பார்த்திபனின் நான்கு தம்பிகளைக் கைது செய்ய பூஜா திவாரியா சட்டத்தை அணுகுகிறார். சட்டம் பார்த்திபன் பக்கமிருக்க, பூஜாவைக் கொல்ல முயல்கிறார். காதலி ராஷி கண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பூஜாவைக் காப்பாற்றும் விஷாலிடம் வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்கிறார் பூஜா. குற்றத்தின் பின்னணியை அறிந்த பின்னும் விஷால் மனம் திருந்தினாரா, பூஜாவின் தங்கைக்கு நியாயம் கிடைத்ததா என்பதே அயோக்யாவின் மீதிக் கதை.

இருப்பதைப் பறிக்கும் கர்ணனாக விஷால், பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ராஷி கண்ணாவுக்குப் பெரிய ரோல் இல்லையென்றாலும் தோன்றும் காட்சிகளில் ஈர்க்கிறார். உடனே காதலில் விழும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. பார்த்திபன் வரும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. பார்த்திபன் கொடுக்கும் ‘கவுன்டர்கள்’ சுவாரஸ்யம்.

படத்தில் கவனம் ஈர்ப்பது அப்துல் காதராக வரும் கே.எஸ்.ரவிக்குமார். ஊழல் நிறைந்த உயரதிகாரியான விஷாலுக்கு சல்யூட் அடிக்க மறுக்கும் கன்னியம் நிறைந்த காவலாளியாக மனதில் நிற்கிறார். முதல் முறை விஷாலுக்கு அவர் சல்யூட் அடிக்கும் இடம், அட்டகாசம்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள சண்டைக் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. சாம் சி.எஸ் இசையில் பின்னணி இசை அளவுக்குப் பாடல்கள் ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றில் மாஸ் படத்திற்குத் தேவையானதை தொழில் நுட்பக் குழு வழங்கியுள்ளது.

தெலுங்கில் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்கான அயோக்யாவின் கிளைமேக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், டைட்டிலில் கதைக்கு மட்டுமே தெலுங்கு எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டுத் திரைக்கதையில் குறிப்பிடாதது கண்டிக்கத்தக்கது.

சுவாரஸ்யமாக மட்டுமே படத்தைக் கொண்டு செல்ல நினைத்தவர்கள் லாஜிக், நம்பகத்தன்மை எல்லாம் இரண்டாம்பட்சம்தான் என முடிவுக்கு வந்து எடுத்துவிட்டார்கள் போல. தண்டனைகள் மட்டுமே ஒரே தீர்வு என கண்மூடித்தனமாக மொத்த கதையையும் இழுத்துச் செல்வது அமெச்சூராகவே உள்ளது. எதனால் அக்குற்றங்கள் நிகழ்ந்தன எனப் படத்திலேயே தெள்ளத் தெளிவாய் இருக்கும்போது, அந்த நான்கு பேரை மட்டுமே தண்டிப்பதை நோக்கமாக வைத்தது இயக்குநரின் குறுகிய பார்வையைக் காட்டுகிறது.

ஒரே மாதிரியான கதைக்களங்களுடன் வந்திருக்கும் தொடர் தமிழ் சினிமாவில், அயோக்யா எந்தத் தனித்துவமும் இன்றி மெசேஜ் சினிமாவாக மட்டுமே கடந்து செல்கிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

செவ்வாய் 14 மே 2019