மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியது.

“பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறார். சிறை சென்று முழுதாக இரண்டு வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் அவர் இதுவரை இரு முறை பரோலில் வெளியே வந்திருக்கிறார்.

2017 அக்டோபர் மாதம் தன் கணவர் நடராஜனின் உடல்நலக் குறைவை ஒட்டி அவரைப் பார்ப்பதற்காக பரோலில் வந்தார். அதன் பின் 2018 மார்ச் மாதம் நடராஜன் மறைவை ஒட்டி பரோலில் வந்தார். இந்நிலையில் வரும் மே 23-ஆம் தேதி மக்களவை மற்றும் மினி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழகத்தின் அரசியல் சூழல் முற்றிலுமாக மாறும் என்று நம்புகிறார் சசிகலா. அதற்கேற்ற வகையில் சில காய்களை நகர்த்த ஜூன் முதல் வாரம் அவர் பரோல் மூலமாக வெளியே வரலாம் என்ற தகவல் அமமுக வட்டாரங்களில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை சென்று சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் சட்டப்படி நடந்து வருகின்றன என்று கூறினார்.

ஒரு தண்டனை கைதிக்கு ஒரு வருடத்திற்கு 15 நாட்கள் விடுப்பு அதாவது பரோலில் செல்லும் வாய்ப்பு தமிழக சிறைத்துறை விதிகளில் இருக்கிறது. இதை 6, 6, 3 நாட்களாக வழங்குவார்கள். இந்த பரோலை முடிவு செய்யும் அதிகாரம் சிறை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சிறைத்துறை டிஐஜி, ஒரு கைதிக்கு ஒரு மாதம் வரை பரோல் விடுமுறை அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார். தமிழக சிறைத்துறை விதிகள் இப்படி என்றால் கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி இன்னும் அதிக நாட்கள் பரோல் வழங்க வாய்ப்பிருக்கிறது. அதன்படி சசிகலாவின் இதுவரையிலான சிறை நடத்தை, முந்தைய பரோல் விதிமுறைகளை அவர் கடைப்பிடித்த விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மீண்டும் பரோல் வழங்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அமமுக முக்கிய பிரமுகர்கள்

தன் கணவர் நடராஜன் மறைவையடுத்து பரோலில் வந்த சசிகலா அளிக்கப்பட்ட விடுமுறைக்கு முன்னதாகவே சிறைக்கு சென்று விட்டார். இது அவருக்கு இப்போது பரோல் வழங்குவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதம் சசிகலா பரோல் கேட்கும் பட்சத்தில் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அண்மையில் தன்னை சந்தித்த தேவாதி பட்டரிடம் தன் உடல் நலக்குறைவு பற்றி எடுத்துச் சொல்லியிருந்தார் சசிகலா. அதை ஒட்டி அவர் சசிகலாவுக்காக ஆயுஷ்ய ஹோமம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பது மின்னம்பலத்தில் செய்தியாக வெளியாகியிருந்தது. இந்நிலையில் தன் உடல் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சசிகலா 15 நாட்கள் பரோலில் ஜூன் மாதம் வெளி வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக பரோலில் வர முயற்சி நடந்தாலும், தமிழகத்தின் அரசியல் சூழல் தேர்தல் முடிவுகளை ஒட்டி மாறுகின்ற சூழலில் ,சசிகலா வெளியே வருவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என்கிறார்கள்.

அதாவது சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து அகற்றியே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் சசிகலா. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். பரோல் நிபந்தனைகளின்படி சசிகலாதான் மற்றவர்களைத் தேடிச் சென்று சந்திக்கக் கூடாதே தவிர, சசிகலாவை யார் வேண்டுமானாலும் அவரது வீடு தேடிச் சென்று சந்திக்கலாம். அந்த வகையில் பரோலில் வரும் சசிகலா அதிமுகவில் பலரையும் சந்தித்து, நீங்கள் யாரால் அமைச்சர் ஆக்கப்பட்டீர்கள், யாருக்கு விசுவாசமாக இருக்கிறீர்கள் என்ற கேள்வியை மட்டும் கேட்க இருக்கிறார் என்கிறார்கள்.

2017 ஆம் ஆண்டு நெருக்கடியான நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு எப்படி சிறை சென்றாரோ, அதே போல இப்போது சிறையில் இருந்து வெளியே வந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு மீண்டும் சிறைக்கு செல்வார் சசிகலா என்கிறார்கள் அமமுக முக்கியப் பிரமுகர்கள். ஏற்கனவே சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி அதிகாரிகள் உள்ளிட்ட சிலரை தூதுவிட்டு தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். அதனால் கோபமான சசிகலா, தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெளியே வந்து அவரை முதல்வர் பதவியில் இருந்தே அகற்ற சபதம் செய்திருக்கிறாராம். இதுபற்றி தினகரனுக்கு தகவல் அனுப்பியுள்ள சசிகலா, ‘நான் செஞ்ச தப்புக்கு நானே பரிகாரம் பண்றேன்’ என்று சொல்லியுள்ளாராம்.

தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும் மாற்றம் ஒருபக்கம் என்றால் சசிகலா பரோலில் வந்து ஏற்படுத்தும் மாற்றம் என்னவாக இருக்கும் என இரட்டை எதிர்பார்ப்பு அதிமுக, அமமுக வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 14 மே 2019

அடுத்ததுchevronRight icon