மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

வரலட்சுமியை எதிர்பார்க்கும் டோலிவுட்!

வரலட்சுமியை எதிர்பார்க்கும் டோலிவுட்!

நாயகனுக்கு ஜோடியாகவும், பாடலுக்கு நடனம் ஆடவும் மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்திவந்த தமிழ் சினிமா சமீப காலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளைப் படமாக்க ஆரம்பித்திருக்கிறது. முன்னணி நடிகைகள் பலரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.

அதேபோல் எதிர்மறை கதாபாத்திரத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தற்போது அதிகரித்துள்ளது. அந்த மாற்றத்தை உணர்ந்து அதில் தனக்கான பாதையை அமைத்துக்கொண்டவர் வரலட்சுமி . பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் எதிர்மறை போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரூட்டை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்குத் தற்போது தெலுங்கு திரையுலகிலிருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி எதிர்மறை கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

ரூலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. நான்கு மாதங்களுக்குள்ளாகப் படத்தை முடித்து தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon