மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

பாஜகவுடன் பேசுகிறேனா?: ஸ்டாலின் சவால்!

பாஜகவுடன் பேசுகிறேனா?: ஸ்டாலின் சவால்!

பாஜகவுடன் பேசுவதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருப்பதாக தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினை, மூன்றாவது அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியிருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பாஜகவுடன் ஸ்டாலின் பேசிவருவதாகக் கூறப்படும் தகவல் உண்மைதான் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

தூத்துக்குடியில் இன்று (மே 14) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசையிடம், ஸ்டாலின் பாஜகவுடனும் பேசிவருகிறார் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அது உண்மைதான். ஒருபக்கம் ராகுலுடனும், இன்னொரு பக்கம் சந்திரசேகர ராவுடன் பேசும் ஸ்டாலின், மற்றொரு புறம் மோடியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். திமுகதான் நிறம் மாறும் என்பது எல்லோருக்கும் தெரியும். யார் மூலமாகவோ பேசுகிறார். ஆனால் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “3-வது அணிக்கு மட்டும் அல்ல; டெல்லிக்கு தூதுவிட்டு 5 கேபினட் அமைச்சர் வேண்டும் என்று பாஜகவுடன் அவர்கள் பேசி வருகின்றனர். எல்லோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பதவிகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று விமர்சித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கே தமிழிசை இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழிசைக்கு ஸ்டாலின் கேள்வி

இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “பச்சைப் பொய் நிறைந்த ஒரு பேட்டியை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பாஜகவிற்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்திரராஜன் இப்படியொரு “பொய்” பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவிற்கு தரம் தாழ்த்திக் கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்கள் இப்போது முதன்முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. ஆனாலும் “மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு” காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் தி.மு.க.விற்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை இந்த நான்கு இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம்- சிதறடித்து விடலாம் என்றும், மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்ற நிலையில் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக முன்னிறுத்திய திமுகவின் பிரச்சாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என்றும் தப்புக் கணக்குப் போட்டு திருமதி தமிழிசை இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார் என்றுள்ள ஸ்டாலின்,

“திராவிட முன்னேற்றக் கழகம், அதிமுக- பாஜக போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சியல்ல. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து- யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக் கூறி- யார் பிரதமராகக் கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்ற கட்சி. மத்தியில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பதிலும் திமுக உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் திரு நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon