மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

ஐஎஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா? அமைச்சர்!

ஐஎஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா? அமைச்சர்!

ஐஎஸ் அமைப்பிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் பணம் வாங்கிவிட்டாரா என்று கேள்வியெழுப்பியுள்ள பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உளவுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். தற்போது இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், ராஜேந்திர பாலாஜியை பதவியில்இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

அமைச்சரை கைது செய்ய வேண்டும்

கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ”அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நாதுராம் கோட்சே தீவிரவாதி என்று உண்மையைப் பேசிய கமல்ஹாசனைப் பாராட்டுகிறோம் என்று தெரிவித்துள்ள திருமாவளவன், ”தேர்தல் பரப்புரையின் போது மதத்தைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக அவர் பேசியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் இந்து என்று குறிப்பிட்டிருக்க வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு. அமைச்சருக்கு கமலின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் அதைக் கண்டிக்கலாம். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருக்கலாம்.

ஆனால், அதையெல்லாம் விடுத்து கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். வட மாநிலங்களில் இதுவரை சங் பரிவாரத்தினர் பேசி வந்த வெறுப்புப் பேச்சின் நீட்சியாக இது இருக்கிறது. அதிமுகவே கொஞ்சம் கொஞ்சமாக சங் பரிவாரக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ராஜேந்திர பாலாஜியின் பேச்சு ஒரு சான்றாகும். அவரது வன்முறை பேச்சு கண்டனத்துக்குரியது மட்டுமல்ல தண்டனைக்குரியதாகும். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐஎஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா?

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”பிரிவினைவாதம், மதவாதத்தைக் கமல் தூண்டுகிறார். ஐஎஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா? இது குறித்து உளவுத்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். அவருக்குப்பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும். கமல் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால், எனது கருத்தைத் திரும்பப் பெற்று கொள்கிறேன். கமல் திருந்துவதற்கு வாய்ப்பாகத்தான் எனது கருத்தைப் பதிவு செய்தேன். ஆலோசனையாக எடுத்துக் கொள்ளவேண்டும். அராஜகமாகப் பயன்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்டவர்கள் போன்று கமலும், இந்து கடவுள்களை வம்பு இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர். அவர் இத்தாலிக்கு செல்ல வேண்டும்” என்று கூறினார்.

”இந்தியா மதச்சார்பற்ற நாடு. தேவையில்லாமல் விஷத்தைக் கக்குவது நாட்டிற்கு ஆபத்து. கமல் பேச்சு பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் தூண்டக்கூடிய பேச்சு. என்ன வேண்டுமானாலும் பேசுவதற்குக் கமல் இந்தியாவின் ஜனாதிபதியா? ஆளுநரா?” என்று கேள்வியெழுப்பினார். தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்திவருகிறார் என்றும் குறிப்பிட்டார்.

கமல் மீது வழக்கு!

இதற்கிடையில் இந்து சேனா அமைப்பு கமல் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தீவிரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புபடுத்தி பேசியதன் மூலம் இந்து மக்களின் மத உணர்வுகளைக் கமல் காயப்படுத்தி விட்டதாகக் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.

புதன், 15 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon