மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

தினகரன் பிரச்சாரம்: தடை கேட்கும் அதிமுக!

தினகரன் பிரச்சாரம்: தடை கேட்கும் அதிமுக!

தினகரனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டுமென அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரச்சாரத்தில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறார்.

இந்த நிலையில் உண்மைக்கு மாறாக அவதூறு தகவல்களை தினகரன் பரப்புவதாகவும், அவரது பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக இன்று (மே 14) மனு அளித்துள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்துள்ள அந்த புகாரில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளுக்கு எதிராகவும் தனிநபர் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்துவருகிறார். முதல்வர், துணை முதல்வரையும் ஒருமையில் விமர்சித்து வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாபு முருகவேல், “காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும், எட்டுவழிச் சாலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தினகரன் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறானது. சூலூரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தின்போது அவ்வழியாக சென்ற மருத்துவ அவசர ஊர்திக்கு வழிவிடாமல் பிரச்சாரம் செய்திருக்கிறார். எனவே பிரதான சாலைகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும். முன்பு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “பொய்யான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் விதமாக தினகரன் தேர்தல் பிரச்சாரம் அமைந்துள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தொடர்ந்து விதிமீறி செயல்பட்டுக்கொண்டிருக்கும் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon