மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

விவசாயிகள் பெயரில் மோசடி: தொழிலதிபருக்கு எதிராக தர்ணா!

விவசாயிகள் பெயரில்  மோசடி: தொழிலதிபருக்கு எதிராக தர்ணா!

விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய விவசாயிகள் சங்கத்தினர், நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சென்னையில் உள்ள சர்க்கரை துறைக்கான ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் திருஆரூரான், அம்பிகா ஆகிய பெயர்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் பல்வேறு பொதுத் துறை வங்கிகளிலிருந்து விவசாயிகளின் பெயர்களில் கடன் வாங்கி மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஆலை குழும அதிபர் ராம் வி.தியாகராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டாலும் விசாரணைக்காக மட்டும்தான் அழைத்து வரப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோசடி சம்பவத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். பாமக தலைவர் ராமதாஸ் இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சூழலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய சங்கத்தினர் கடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று (மே 13) தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது விவசாயிகளை ஏமாற்றி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபர், வங்கி அதிகாரிகள், கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.பின்னர் சர்க்கரை ஆலை அதிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு, “இந்த மோசடி தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம். அவர் 10 நாள்கள் அவகாசம் கேட்டுள்ளார். அதற்குள் மோசடி செய்யப்பட்ட பணம் கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னையில் உள்ள சர்க்கரை துறைக்கான ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon