மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் யுவிகா: இஸ்ரோ

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் யுவிகா: இஸ்ரோ

ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாக யுவிகா நிகழ்ச்சி அமையுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்.

விண்வெளி அறிவியல் குறித்த அடிப்படை விஷயங்களை மாணவ மாணவியருக்குப் புரியவைக்கும் விதமாக யுவிகா எனும் இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனும் இஸ்ரோ. நேற்று (மே 13) இந்த நிகழ்வு பெங்களூருவில் தொடங்கியது. வரும் 26ஆம் தேதி வரை இது நடைபெறவுள்ளது. இந்தியாவிலுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 110 மாணவ மாணவியர் இதில் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் 3 பேர் என்ற கணக்கில், அங்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (மே 13) இந்நிகழ்வில் பேசினார் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன். அப்போது, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விஞ்ஞானிகள் உருவாக இஸ்ரோவின் யுவிகா உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேசத்தைக் கட்டமைப்பதிலும், தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். “எந்த நாடாக இருந்தாலும், அதன் வளர்ச்சிக்கும் அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியமானவை. பாதுகாப்பு மட்டுமல்லாமல், நமது வாழ்க்கையின் தரத்தை முன்னிறுத்துவதிலும் இவை முக்கியப் பங்காற்றும். மனிதரின் தினசரி வாழ்க்கை முதல் தேசியப் பேரிடர்களால் பாதிக்கப்படுவது வரை பல்வேறு விஷயங்களில் மனிதர்களுக்கு விண்வெளி ஆய்வுகள் உதவுகின்றன” என்று சிவன் தெரிவித்தார்.

யுவிகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், அகமதாபாதில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் ஆகியவற்றில் பயிற்சி பெறவுள்ளனர். வரும் 17ஆம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தைப் பார்வையிடவுள்ளனர்.

இதன் மூலமாக, யுவிகா நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் விண்கல ஏவுதளத்திலுள்ள வசதிகளையும் அதன் செயல்பாடுகளையும் பார்வையிடுவார்கள் என்று தெரிவித்துள்ளது இஸ்ரோ. திறன்மிக்க விஞ்ஞானிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக மாணவர்களிடத்தில் விண்வெளி ஆய்வு பற்றிய ஆர்வத்தை உருவாக்க முடியுமென்றும், பள்ளிப்பாடத்தைத் தினசரி வாழ்வுப் பயன்பாட்டோடு பொருத்திப் பார்க்க முடியுமென்றும் கூறியுள்ளது இஸ்ரோ.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon