மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைப்பு!

உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைக் குறைத்து அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக்கழகங்கள் வாயிலாக அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற வேண்டும். தமிழகத்தில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை மூலம் ஏஐசிடிஇயிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது, அண்ணா பல்கலைக் கழக குழு பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்தும். அதன்படி சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக குழு தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆய்வு நடத்தியிருக்கிறது. 170 பேர் கொண்ட குழு நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 92 பொறியியல், கட்டிடக்கலை, எம்பிஏ மற்றும் எம்.சி.ஏ கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இக்கல்லூரிகளில் 300 துறைகளில் மாணவர் சேர்க்கையை குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 537 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் ஆகிய விதிகளை பூர்த்தி செய்த 287பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

விதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து விதிகளை பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டது. நோட்டீஸ் அனுப்பியும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத 92 கல்லூரிகளில், பிஇ., பிடெக் என 178 இளநிலை படிப்புகளுக்கும், எம்இ., எம்டெக் என 122 முதுநிலை படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon