மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

தேவராட்டம் கொடுத்த லாபம்!

தேவராட்டம் கொடுத்த லாபம்!

தமிழக அரசியல் களத்தில் இன்று வரை அரசியல் பொருளாதார கொள்கையை பின்னுக்கு தள்ளி தேர்தலில்வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக சாதி இருந்து வருகிறது.

சினிமாவிலும் அதன் தாக்கம் ஓரளவு இருந்து வருவதை தேவராட்டம் திரைப்படத்தின் வியாபாரம், வசூல் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தேவராட்டம் சாதியை முன்னிலைப்படுத்துகிற படம் இல்லை, குடும்ப உறவுகளை மையப்படுத்திய படம் என இப்படத்தின் இயக்குநர் பலமுறை கூறி வந்தார்.

கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், சூரி நடித்துள்ள இப்படம் மே 1ஆம் தேதி வெளியானது.

சுமார் 4.50 கோடி ரூபாயில் தயாரான இப்படம் தமிழகத்தில் இதுவரை சுமார் 4.50 கோடி ரூபாயை மொத்த வசூலாக பெற்றுள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை, வட இந்திய உரிமை, தொலைக்காட்சி உரிமை, கேரள, கர்நாடக விநியோக உரிமை மூலம் சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் மொத்த வசூல் தொகையில் பெரும் பகுதி மதுரை, திருநெல்வேலி, திருச்சி விநியோகப் பகுதிகளில் வசூலாகியுள்ளது. பிற விநியோகப் பகுதிகளில் தேவராட்டம் சுமாரான வசூலையே பெற்றுள்ளது.

கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்து இதுவரை வெளியான படங்களில் வெற்றி பெற்ற படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. 2018 மே 4 அன்று வெளியான இப் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தேவராட்டம் படத்தையும் தயாரித்துள்ளது.

சுமார் 4.50 கோடியில் தயாரான தேவராட்டம் தயாரிப்பாளருக்கு 11 கோடி ரூபாய் வருமானமாக பெற்று தந்திருக்கிறது. இவ்வருடம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான படங்களில் அதிக லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்த படங்களில் முதலிடத்தில் தேவராட்டம் உள்ளது.

-இராமானுஜம்

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon