மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

சிறுமியிடம் லஞ்சத்தை திருப்பிக்கொடுத்த பிரதமர்!

சிறுமியிடம் லஞ்சத்தை திருப்பிக்கொடுத்த பிரதமர்!

தன்னிடம் 11 வயது சிறுமி வழங்கிய லஞ்சப் பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன்.

டிராகன்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டுமெனவும், டிராகன்களுக்கு பயிற்சியளிக்க தேவையான சக்திகளை தனக்கு வழங்க வேண்டுமெனவும் நியூசிலாந்தை சேர்ந்த விக்டோரியா என்ற 11 வயது சிறுமி அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்னுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர் (ரூ.231) தொகையையும் பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.

சிறுமி விக்டோரியாவுக்கு பிரதமர் ஜெசிண்டா அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ பதில் கடிதத்தில், “மன சக்திகள், டிராகன்கள் குறித்து நீங்கள் வழங்கிய பரிந்துரைகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால் இத்துறைகள் தொடர்பாக தற்போது நாங்கள் ஆய்வு ஏதும் மேற்கொள்ளவில்லை.

ஆகையால் உங்களது லஞ்சப் பணத்தை உங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். டிராகன்கள் தொடர்பான உங்களது தேடலுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இருந்தாலும், டிராகன்கள் மீது நான் ஒரு கண் வைத்துக்கொள்கிறேன். டிராகன்கள் ஆடை அணிந்து வருமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

விக்டோரியாவின் கோரிக்கை குறித்து அவரது சகோதரர் விளக்கமளித்துள்ளார். நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்படும் ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்’ தொடரை பார்த்து டிராகன்கள் மீதும் நுண்ணுணர்வுகள் மீதும் விக்டோரியாவுக்கு ஆர்வம் அதிகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon