மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

வறுமைதான் எனது ஜாதி: மோடி

வறுமைதான் எனது ஜாதி: மோடி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் வெற்றிகளை தீர்மானிப்பதில் ஜாதிக்கு முக்கிய பங்குண்டு. அண்மையில் ஜாதி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதிக்கும் இடையே வார்த்தை மோதல் உருவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜ் அளித்த ஆதரவை திரும்பப் பெற தயாரா எனவும் மோடி கேள்வியெழுப்பினார்.

இதைத்தொடர்ந்து மாயாவதியோ, “தலித் மக்கள் மீது அன்பு கொண்டிருப்பதுபோல பிரதமர் நரேந்திர மோடி நாடகம் போடுகிறார். மோடி அவரது ஜாதியையும், பொருளாதார பின்னணியையும் வைத்து வாக்காளர்களை கவர முயற்சிக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “மோடியின் ஜாதி என்னவென்று கேட்கின்றனர். அவர்கள் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தை விட நான் அதிக காலத்திற்கு குஜராத் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளேன். நான் ஏராளமான தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். ஆனால் எப்போதுமே ஜாதியை வைத்து அரசியல் செய்ததில்லை

ஜாதி பெயரை கேட்டபிறகு நான் சமையல் சிலிண்டர்களையும், வீடுகளையும் மக்களுக்கு வழங்குவதில்லை. நான் நாட்டுக்காக உழைக்க விரும்புகிறேன். அவர்களது அவதூறுகளை நான் பரிசாக ஏற்றுக்கொள்கிறேன். நான் அவர்களுக்கு பதிலளிக்க தேவையில்லை. மக்கள் பதிலளிப்பார்கள். எனக்கு ஒரே ஜாதிதான் இருக்கிறது. அது வறுமைதான். அதற்காகத்தான் வறுமையை எதிர்த்து நான் போரிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon