மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 27 பிப் 2021

திலகவதி கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை!

திலகவதி கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை!

மின்னம்பலம்

கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி (19) மே 8ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் விசாரணை அதிகாரி நியாயமான முறையில் விசாரணையை மேற்கொள்ளாமல், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக நடந்துகொள்வதாக திலகவதியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திலகவதியின் தந்தை இன்று (மே 14) வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையை விசாரணை அதிகாரி நியாயமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ளவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ள அவர், “ சாட்சிகள் மற்றும் வாக்குமூலம் பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்தும் குற்றவாளிக்கு ஆதரவாகவே உள்ளது. சம்பவம் நடைபெற்ற போது மேலும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்துள்ளனர். ஆனால் விசாரணை அதிகாரி அதுகுறித்து உரிய முறையில் விசாரிக்கவில்லை. உண்மையை மறைத்து காதல் விவகாரம் என வழக்கை மறைக்க பார்க்கின்றார்.

விசாரணை அதிகாரி கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே தற்போதைய காவல் துறை விசாரணை மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. கருவேப்பிலங்குறிச்சி காவல்துறை இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க கூடாது. வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு விசாரணை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், “பாதிக்கப்பட்ட எனது குடும்பத்திற்கு இதுவரையில் அரசு எந்த விதமான இழப்பீடும் அளிக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு அளிக்கும் இடைக்கால இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon