மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

மோடியின் ஆதரவாளர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா!

மோடியின் ஆதரவாளர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா!

மத்தியப் பிரதேச மாநிலம் சென்ற பிரியங்கா காந்தி, திடீரென்று காரில் இருந்து இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்த மோடியின் ஆதரவாளர்களுடன் கைகுலுக்கினார்.

கடந்த பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் பிரியங்கா காந்தி வதேரா. இதனால், தற்போது ஏழு கட்டமாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் சுற்றிச் சுழன்று கட்சிப் பணி ஆற்றி வருகிறார்.

நேற்று (மே 13) அவர் இந்தூரில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். செல்லும் வழியில், சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் “மோடி வாழ்க” என்று கத்தினர். அது மட்டுமல்லாமல் பிரியங்காவுக்கு எதிராக கோஷமிட்டனர். மோடி மோடி என்று மீண்டும் மீண்டும் அவர்கள் கோஷமிட்டதும், பாதுகாப்புப் படை வீரர்கள் சூழ வந்த பிரியங்காவின் கார் திடீரென்று நின்றது.

அதிலிருந்து இறங்கிய பிரியங்கா, நேராக அந்த இளைஞர்களை நோக்கிச் சென்றார். சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் பின்னால் வர, முன்னால் சென்ற அவர் அங்கிருந்தவர்களுடன் கைகுலுக்கினார். “நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்; நான் இருக்குமிடத்தில் நான் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மோடி ஆதரவாளர்களும், பதிலுக்குப் பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த பயணத்தின்போது மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத், சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் உட்படப் பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரியங்காவுடன் இருந்தனர்.

அதேபோல, நேற்று காலையில் ரட்லம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரியங்கா, திடீரென்று தடுப்புகளைத் தாண்டிச் சென்றார். அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

செவ்வாய், 14 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon